PANVEL BALAGAR

PANVEL BALAGAR
YATRA 2022

வேதம் கற்றால் அவன் பிராமணன் ஆகிவிடுவானா?' என வினவுகிறது நம் உள்ளுணர்வு.



சாஸ்திரங்களுக்கும் வேதத்திற்கும் என்ன வித்தியாசம்? சாஸ்திரங்கள் புவியில் வாழும் வழிமுறைகளையும் விதிகளையும் லோக வாழ்வுக்கு தேவையான அறிவையும் பிரிவுகளாய் எடுத்துறைக்கிறது. வேதமோ பரம்பொருளை நோக்கி நாம் செய்யும் பயணம். சாஸ்திரங்கள் தெரிந்ததால் அவன் இறையை உணர்ந்திருக்கிறான் என்றோ, உயர்ந்தை இலக்கை நோக்கி அடி எடுத்து வைத்துள்ளான் என்ற எண்ணமோ பெரும்பாலும் தவறானது. வேதம் கற்றிருந்தால் மட்டுமே ஒருவனின் அறிவை உயர்ந்த நிலைக்கு இட்டுச் செல்லக்கூடிய அறிவாகக் கொள்ளலாம்.

வேதங்கள் ரிக், யஜுர், சாம, அதர்வண வேதங்களாய் பிரிவாகியுள்ளது.

இவற்றில் ரிக் வேதம் மந்திர பாகமாகவும் சூக்தங்களாகவும் உள்ளது. யஜுர் வேதம் யாகங்களின் மந்திரமாகவும், சாமம் இசையோடு கூடியதாகவும், அதர்வணம் யந்திர தந்திர அடிப்படைகளை விளக்குவதாகவும் விளங்குகின்றன. ரிக் வேதம் செய்யுள் நடையோடும், யஜுர் வேதம் உரை நடையின் வழியிலும், சாம வேதம் கானம்/பாடல்களாகவும் எழுதப்பட்டு ஓதப் பட்டு வந்தன.

பொதுவாக ரிக்வேதம் 10 மண்டலங்களாகவும், 10415 ரிக்குகள் உடையதாகவும், 1029 சூக்தங்கள் உடையதாகவும் சிறந்து காணப்பெறுகின்றது. கடவுள் ஒருவரே! அவரே தலைவர், அவரே பலராக ஆகின்றார் என்பன ரிக் வேதத்தின் சாரமாகும்.

யஜுர் வேதம் யாகங்கள் செய்யும் முறைகளை விளக்குக்குவதாக அமைந்துள்ளது.

சாம வேதம் பாடல்களின் வடிவில், ஒலிவடிவில் இறைவனைப் போற்றித் துதிக்கும் வேத ஒலிகள். வேதங்களின் நான் "சாம வேதம்" என்கிறான் கீதையில் கண்ணன். சாம வேதம் ஓம்காரத்தின் சாரம்சமாக கருதப்படுகிறது.

அதர்வண வேதம் மந்திர யந்திர தந்திரங்களும், விஞ்ஞான கருத்துக்களும், உலகியல் ஆரோக்யத்திற்கும் வளமான வாழ்வுக்கு தேவையான அறிவும் அதர்வன வேதத்தில் தரப்பட்டிருக்கிறது. தற்காலத்தில் இது அதிகம் வழக்கில் இல்லை.

ஒவ்வொரு வேதமும் நான்கு பாகங்களாக பிரிக்கப்படலாம். 'சம்ஹிதை' என்பது மந்திர பாகம், 'ப்ரம்மணம்' என்பது யாகம் செய்யும் முறைகள், 'ஆரண்யகம்' யாகத்தின் அர்த்தங்களையும், அதன் நோக்கத்தையும் விரிவுபடுத்துகிறது. இறுதியாக வேதத்தின் ஒரு பகுதியான "உபநிஷதம்" .

வேதங்களின் அந்தமே 'வேதாந்தம்'. அதுவே பரம்பொருள். ரிஷிகள் உணர்ந்து உபதேசித்தது உபநிஷதம். ஆன்மீகத் தேடலுக்கு வழிகாட்டி. "நான் யார்" என்ற மையக் கேள்வியும், "ஜீவ - பரமாத்மா" பாகுபாடுகளும், பிரம்மத்தை அடையும் முறைகளும், ஆன்ம ஞானம் முதலியன பற்றிய விளக்கங்களும் உபநிஷதத்தின் முக்கிய கருத்துக்கள். மொத்தம் 108 உபநிடதங்கள் உள்ளன. அதில் பன்னிரெண்டை முக்கியமாக சொல்வதன் காரணம், ஷங்கரரும், ராமானுஜரும், மாத்வரும் இவற்றை பாதுகாத்து உரை எழுதியிருப்பதால், புரிதல் எளிதாகிறது. படிப்பதால் அன்றி, உணர்வதால், உணர்ந்து நடப்பதால் ஒருவன் உயர் கதி அடைகிறான்.

'வேதம் கற்றால் அவன் பிராமணன் ஆகிவிடுவானா?

இப்பொழுது பதிலும் தெளிவாகிறது. வேதம் கற்பதால் அவன் அறிவு மட்டுமே விருத்தியடைகிறது. வேதம் மனிதனுக்கு பாடம் புகட்டுகிறது. அது இலக்கு அல்ல. இலக்கை நோக்கி நம்மை இட்டுச் செல்லும் பாதை. கற்றத்தைத் தாண்டி வேதத்தை "உணர்ந்தால்" உணர்ந்து அதன்படி நடந்தால், அவன் பிராம்மண நிலைக்கு தன்னை தயார் படுத்திக்கொள்கிறான்.

அவனின் தன்மைகளில் சிலவற்றை முன்பு கண்டோம். மேலும் சில குணங்களும் அவசியமாகிறது.

பிராமணன் என்பவன் சமப்பார்வையுடையவனாக இருக்க வேண்டும். சமப்பார்வை என்பது மனித ஜாதிகளைக் குறிப்பிடுவதல்ல. அதற்கெல்லாம் அப்பாற்பட்டு நிற்பது. இரட்டைகளற்ற பார்வை. மரம், செடி, மிருகம், மனிதன் என்ற பேதமே அகன்று விடும் பார்வை. எல்லாம் ஒரே பொருளின் வெளிப்பாடுகள் என்ற பார்வை. மானம் அவமானம், விருப்பு வெறுப்பு, அற்ற நிலை.

நாளைக்கு என சேமித்து வைப்பவன் பிராமண நிலைக்கு தயார்படுத்திக்கொண்டவனில்லை. பொருளையோ பணத்தையோ சேமித்து வைத்தல் அவனுக்கு விதிக்கப்பட்ட இயல்பு அல்ல.

மேலும் அவனுக்கென கூறப்பட்டுள்ள ஷட்கர்மாக்களை (ஆறு) பற்றின்றி செய்பவனாக இருக்க வேண்டும்)

1. வேதம் கற்பது கற்பிப்பது
2. யாகம் செய்வது செய்விப்பது
3. தானம் வாங்குவது (உடன்) கொடுப்பது

பிராமணன் ஒரு ஞானியைப் போல் வாழ வேண்டும். பிறகு ஞானிக்கும் (வர்ண)பிராமணனுக்கும் என்ன வித்தியாசம்? வர்ண முறைப்படி பிரம்மணீயத்தை தழுவியவனுக்கு கர்மாக்கள் உண்டு. பிராமணன் கர்மாக்களை பற்றற்ற உணர்வுடன் செய்வதால் அவன் ஞானியின் நிலையில் தன்னை இருத்திக்கொள்கிறான். ஞானியோ கர்மாக்கெல்லாம் அப்பாற்பட்டு வேதத்தின் கருப்பொருளின் பரம்பொருளின் அருகாமை நிலையில் நிற்பதால், அவனை கர்மாக்களும் கூட கட்டுப்படுத்துவதில்லை எனக் கொள்ளலாம்
 —

No comments:

Post a Comment