#துளசீஸ்வரர் ஆலயத்தில் ஆனந்த பிரதோஷ தரிசனம். செங்கல்பட்டு
துளசீஸ்வரர் ஆலயம், சிங்கம்பெருமாள் கோயில்.
இறைவர் திருப்பெயர் : துளசீஸ்வரர்.
இறைவியார் திருப்பெயர் : ஸ்ரீவில்வநாயகி .
தமிழ்நாட்டிலேயே சிவபெருமானுக்கு துளசியால் அர்ச்சனை செய்யப்படும் கோவில் இதுவாகத்தான் இருக்கும், மற்ற மாநிலங்களை பற்றி தெரியவில்லை.
அகத்தியர் பிரதிஷ்டை செய்த 108 லிங்கங்களுள் ஒன்று துளசீஸ்வரர். இவர் சிங்கப்பெருமாள் கோயில்-வல்லக்கோட்டை பாதையில் உள்ள கொளத்தூரில் கோயில் கொண்டிருக்கிறார். பொதுவாக வில்வ தளங்களால் சிவபெருமானுக்கு அர்ச்சனை செய்யப்படும். இத்தலத்தில் துளசி தளங்களால் செய்யப்படுகிறது. ஒற்றுமையில்லாத கணவன்-மனைவி மற்றும் ஜாதகத்தில் சந்திர பலம் குறைந்தவர்கள், இந்த ஈசனை துளசி தளங்களால் அர்ச்சித்து வணங்க, அந்த குறைபாடுகள் நீங்குவதாக ஐதீகம்.
அகத்தியர், கயிலாயத்திலிருந்து தென்பகுதிக்கு வந்தபோது, எங்கு பார்த்தாலும் துளசிச் செடிகள் நிறைந்த வனமாகக் காட்சி தந்த இந்த தலத்திற்கு வந்தார். சிவ வழிபாட்டிற்குரிய நேரம் ஆனதால், சுற்றும் முற்றும் பார்த்தார். எங்கும் கோயில் காணப்படவில்லை. அப்போது, "அகத்தியரே, என்னைத் தேடி வேறெங்கும் அலைய வேண்டாம். நான் இங்கே துளசிச் செடிகள் சூழ மறைந்து இருக்கிறேன்" என்று அசரீரி ஒலித்தது. ஒலி வந்த வடதிசையை தொடர்ந்து சென்றார், அங்கே சுயம்பு லிங்கம் ஓன்று காணப்பட்டது. துளசியையே இறைவனுக்கு சூட்டி, துளசி தளத்தாலேயே அர்ச்சனை செய்தார். சிவபெருமான் தலையை சற்று சாய்த்து அவரது பூஜையை ஏற்று, சிவசக்தி வடிவான அர்த்தநாரீஸ்வரர் ரூபத்தில் அவருக்கு காட்சி தந்தார்.
இன்றும் ஈஸ்வரனை துளசியில் அர்ச்சித்து, துளசியையும் துளசி தீர்த்தத்தையும் பிரசாதமாக கொடுக்கிறார்கள். இந்தப் பிரசாதம் உடல் நலத்திற்கு சிறந்தது, ஜுரம், இருமல் போன்ற சுவாசக் கோளாறுகளை நீக்கும் என்கின்றனர்.
துளசியை விரும்பி ஏற்றுக்கொண்டதால் துளசீஸ்வரர் என்று பெயர். இங்கு அருள் புரியும் அம்பாளின் பெயர் ஆனந்தவல்லி. துளசீஸ்வரரை திங்கட்கிழமைகளில் துளசியால் அர்ச்சித்து வழிபட்டால் சிவனருள் கிட்டும். ஜாதகத்தில் சந்திரபலம் குறைந்து இருந்தாலும், சந்திர தோஷம் இருந்தாலும் திங்கட்கிழமைகளில் சந்திர ஹோரையில் இந்த ஈசனை துளசியால் அர்ச்சித்து வழிபட்டால் எல்லா தோஷங்களும் விலகும். பௌர்ணமி அன்று அர்த்த ஜாம வழிபாட்டின்போது வெள்ளை அரளி மலர்கள் சாத்தி, துளசியால் அர்ச்சனை செய்து வழிபட்டால், பௌர்ணமி நிலவின் குளுமையை பக்தர்கள் வாழ்வில் அடைவர் என்பது ஐதீகம்.
இந்த திருக்கோவில் விக்கிரம சோழன் காலத்தில் அதாவது, சுமார் 1400 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டதாக தல வரலாறு குறிப்பு கூறுகின்றது. இந்த ஆலயத்தில் சூரியன் மற்றும் சந்திரனுக்கு சிலை உள்ளது. வழிபாடு நடைபெறுகிறது.
மகாசிவராத்திரி அன்று இரவு நான்குகால பூஜை, அபிஷேகங்கள், அலங்காரங்கள் நடைபெறுகிறது மூன்றாம் காலபூஜையின் போது மகாவிஷ்ணு வழிபாடு செய்வதாக ஐதீகம். அவ்வமயம் சிவபெருமானுக்கு இதரமாலைகளுடன் துளசி மாலையும் அணிவிக்கப்படுகிறது. உதிறி துளசியில் அர்ச்சனையும் செய்யப்படும்.
சிறப்புக்கள் :
அகத்தியர் பிரதிஷ்டை செய்த 108 லிங்கங்களுள் ஒன்று துளசீஸ்வரர்.
ஒற்றுமையில்லாத கணவன்-மனைவி மற்றும் ஜாதகத்தில் சந்திர பலம் குறைந்தவர்கள், இந்த ஈசனை துளசி தளங்களால் அர்ச்சித்து வணங்க, அந்த குறைபாடுகள் நீங்குவதாக ஐதீகம்
No comments:
Post a Comment