" ஒரு பிறப்பும் எய்தாமை உடையார் தம்மை உலகியல்பின் உபநயன முறைமையாகும் இருபிறப்பின் நிலைமையினைச் சடங்கு காட்டி எய்துவிக்கும் மறைமுனிவரெதிரே நின்று வருதிறத்தின் மறைநான்குந் தந்தோம் என்று மந்திரங்கள் மொழிந்தவர்க்கு மதுரவாக்கால் பொருவிறப்ப ஓதினார் புகலிவந்த புண்ணியனார் எண்ணிறந்த புனிதவேதம்
(12ம்திருமுறை திருஞானசம்பந்தர் )
(12ம்திருமுறை திருஞானசம்பந்தர் )
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்களும் .. அனைத்து இந்தியர்களுக்கும் எங்கள் “இனிய சுதந்திரதின நல்வாழ்த்துகளும் உரித்தாகுக “ குருவருளும் .. இறையருளும் கூடிய இந்நன்னாளில் “ஆவணி அவிட்டமும் “ சேர்ந்து வருவது மிகுந்த சிறப்பாகும் .. இன்றையநாளில் பூணூல் அணிபவர்களால் சிறப்பாகக் கொண்டாடப்படும் ஒரு பக்திப்பூர்வமான பண்டிகையை “ ஆவணி அவிட்டம் “ என்பார்கள் ..
ஆவணி பௌர்னமியையொட்டி வரும் அவிட்ட நட்சத்திரத்தில் ஆவணி அவிட்ட விரதம் மேற்கொள்ளப்படுகிறது .. இந்நாளில் முறையாக காயத்ரி உபதேசம் பெற்றவர்கள் .. மற்றும் உபநயனம் செய்துக்கொண்ட பிராமணர்கள் ஆற்றங்கரைகளில் அல்லது குளக்கரைகளில் தங்களுடைய பழைய பூணூலை எடுத்துவிட்டு புதிய பூணூலை அணிந்து கொள்வர் .. திருமணம் ஆகாதவர் ஒருபூணூலையும் .. திருமணம் ஆனவர் இரண்டுபூணூலையும் .. திருமணம் ஆகி தந்தையை இழந்தவர்கள் மூன்றுபூணூலையும் அணிந்து கொள்வர் .. அதன்படி இன்று ஆவணி அவிட்டத்தையொட்டி உபநயனம் எனப்படும் பூணூல் மாற்றி தேவர்களுக்கும் .. ரிஷிகளுக்கும் தர்ப்பணம் செய்து வழிபடுவார்கள் ..
” நயனம் “ என்றால் - கண் .. நமக்கு இரண்டு நயனங்கள் (கண்கள்) இருக்கின்றன .. அவை ஊனக்கண்கள் .. இதுதவிர மூன்றாவதாக ஒருகண் தேவை .. அது ஞானக்கண் .. ஞானம் எனும் கண்ணைப் பெறுவதற்கான சடங்குதான் “ உபநயனம் “ அதாவது “துணைக்கண்” என்று அர்த்தம் .. ஞானம் எனும் கல்வி அறிவைப் பெற்றால் மட்டுமே ஒருவன் வாழ்வில் முழுப்பயனைப் பெறுகிறான் என்பது ஆன்றோர் வாக்கு .. கடவுளைப் பற்றி அறியும் அறிவே உயர்ந்த அறிவு .. அதனால் பூணூல் அணியும் சடங்கினை “ பிரம்மோபதேசம் “ என்று குறிப்பிடுகின்றனர் ..
மஹாவிஷ்ணு பூலோகத்தில் பல அவதாரங்களை எடுத்து தர்மத்தை நிலைநாட்டினார் .. அதில் வாமன அவதாரமும் ஒன்று .. அதிதி .. காச்யபரின் பிள்ளையாக அவதரித்த வாமனமூர்த்திக்கு சூரியபகவானே உபநயனம் செய்துவைத்தார் .. பகவானே பூணூல் அணிந்துகொண்டதன்மூலம் இந்தச்சடங்கின் சிறப்பை உணரலாம் .. பூணூலை “யக்ஞோபவீதம் “ என்பார்கள் .. அதாவது மிகவும் புனிதமானது என்று அர்த்தம் ..
இப்படி உபநயனம் செய்விக்கப்பட்டபின் தாங்கள் அணிந்த பூணூலை ஆண்டுதோறும் ஆவணி அவிட்டநாளில் மாற்றி புதிய பூணூல் அணிவார்கள் .. அதுவே ஆவணி அவிட்டம் நாளாக அனுஷ்டிக்கப்படுகிறது ..
உலகம் சிறக்கவும் .. நாடு சிறக்கவும் .. தன் நகரம் சிறக்கவும் .. தனது கிராமம் சிறக்கவும் .. தனது வீடு சிறக்கவும் காயத்ரீ ஜபத்தை சொல்லவேண்டும் .. காயத்ரி மந்திரத்தை தினந்தோறும் சொல்வது மிகவும் முக்கியம் ..
சொல்லாலும் .. செயலாலும் .. மனதாலும் தீங்கிழைக்காத வைராக்கியத்தை மேற்கொள்ளவேண்டும் .. வைராக்கியம் இருந்தால் எல்லாம் சித்திக்கும் .. வைராக்கியம் போனால் சகலமும் போய்விடும் என்பதை மனதில் இருத்தவேண்டும் ! என்பதே ஆவணி அவிட்டத்தின் நோக்கமாகும் ..
“ ஹர ஹர சங்கர ! ஜய ஜய சங்கர “
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..
“ ஹர ஹர சங்கர ! ஜய ஜய சங்கர “
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..
No comments:
Post a Comment