” ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே !
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே “
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்களும் .. “ ராதாஷ்டமி “ நல்வாழ்த்துகளும் உரித்தாகுக ! “ ராதாஷ்டமி “ என்றால் ஸ்ரீமதி ராதாராணியின் அவதாரத் திருநாளாகும் .. இப்புண்ணிய நாளில் ராதா கிருஷ்ணரை நினைத்து பக்தி வெள்ளத்தில் அமிழ்வோம் !
ஓம் ராதிகாயை ச வித்மஹே !
காந்தா விகாயச தீமஹி !
தந்நோ ராதா ப்ரசோதயாத் !!
பகவான் ஸ்ரீகிருஷ்ணர் அவதரித்த திருநாள் - கோகுலாஷ்டமி என்றழைப்பதுபோல .. ஸ்ரீராதாராணி அவதரித்த திருநாள் “ ஸ்ரீராதாஷ்டமி “ ..என்று அழைக்கப்படுகிறது .. கண்ணன் ஆவணி அஷ்டமியில் ரோகிணி நட்சத்திரத்தில் மதுரா சிறைச்சாலையில் வசுதேவர் - தேவகி தம்பதியருக்கு நள்ளிரவு 12.00 மணிக்கு அவதரித்தார் .. அதற்கடுத்த சுக்லபட்ச அஷ்டமியில் விசாக நட்சத்திரத்தில் வ்ருஷபானு - கீர்த்திதா தம்பதியருக்கு பர்ஸான என்னுமிடத்தில் நண்பகல் 12.00 மணிக்கு ராதை அவதரித்தாள் ..
ராதிகா கண்ணனின் ஆத்மா .. கண்ணன் ராதிகாவை தனது ஆத்ம அனுபூதியில் அமிழ்த்தியுள்ளனர் .. எனவே கண்ணனுக்கு “ ஆத்மராமன் “ என்று பெயர் என ஸ்காந்த புராணத்தில் உள்ளது .. கண்ணன் சர்க்கரை என்றால் .. ராதை இனிப்பு .. கண்ணன் தீபமென்றால் .. ராதை ஒளி .. கண்ணன் சந்தனமென்றால் ..
ராதை குளிர்ச்சி .. கண்ணன் மலரென்றால் ..
ராதை மணம் ..
கண்ணனையே நினைத்தால் ராதை கிடைப்பாள் .. அதாவது மனதில் நிறைவு உண்டாகும் .. முக்தி கிடைக்கும் .. “ ராதாகிருஷ்ணன் “ என்று சொல்லும் ஒருவார்த்தையால் மனம் கிருஷ்ணனிடம் ஈர்க்கப்படுவதோடு அல்லாமல் ராதையால் முக்தியும் கிடைக்கும் .. ராதை - ஜீவாத்மா ..
கண்ணன் - பரமாத்மா !
ராதாராணி அவதார மகிமை -
ராதாராணி அவதரித்த விதம்பற்றி பிரம்மாண்ட புராணத்தில் கூறப்பட்டுள்ளது .. யமுனைநதியில் தாமரை மலரில் அவதரித்தார் .. யமுனை நதியில் ஓர் தாமரைமலரில் தங்க ஒளிவீசுவதுபோன்று பிரகாசமான குழந்தை மிதந்து வருவதைக்கண்ட மன்னர் வ்ருஷபானுமுன் பிரம்மதேவன் காட்சியளித்து .. நீ தரிசிக்கும் இந்தக்குழந்தை சாதாரண குழந்தை அல்ல .. லக்ஷ்மிதேவியின் அமசம் ஆவார் .. மிகக்கவனமாக வளர்த்துவா என ஆசீர்வதித்தார் ..
ராதாராணியோ பிறந்ததிலிருந்து யாரையும் தனது கண்கொண்டு பார்க்கவில்லை .. இதனை மஹரிஷி நாரதரிடம் கூறி வருத்தப்பட .. கவலைப்படவேண்டாம் இந்த தெய்வீகக் குழந்தையின் பிறப்பிற்கும் ஒருவிழா நடத்துங்கள் எல்லாம் நல்லபடியாக நடக்கும் என்றார் மன்னரும் விழாவை மிகவும் விமரிசையுடன் கொண்டாட .. அங்கு தனது நண்பர்கள் .. உறவினர்கள் உட்பட ஸ்ரீகிருஷ்ணரின் தந்தையுமான நந்தமகாராஜவும் .. குழந்தைகள் கிருஷ்ணர் பலராமனுடனும் விழாவிற்கு வந்திருந்தனர் ..
அப்போதுதான் சின்னஞ்சிறு குழந்தை கிருஷ்ணர் தவழ்ந்து தவழ்ந்து ராதாராணியின் தொட்டில் அருகே சென்று நின்றதும்தான் ராதாராணி உடனே தன் கண்களைத் திறந்து முதன்முதலாக கிருஷ்ணரை தரிசித்து மகிழ்ச்சியுடன் புன்னகைத்தாள் .. அவரது பார்வையும் .. மகிழ்ச்சியும் சிரிப்பும் கண்டு குழுமியிருந்த அனைவரையும் ஆரவாரப்படுத்தின ..
கிருஷ்ணர்மீது ராதாராணி கொண்டிருந்த அளப்பெரும் அன்பினாலும் .. தூயபக்தியினாலும் கிருஷ்ணரைத் தவிர வேறுயாரையும் முதலில் தரிசிக்கக்கூடாது என்று ராதாராணி உறுதி எடுத்திருந்ததாலும் இந்த தெய்வீகத் திருவிளையாடல் நடந்தேறியது ..
அத்துடன் கிருஷ்ணர் தன் பிஞ்சுக்கரங்களில் வைத்திருந்த புல்லாங்குழல் ராதாராணியின் புன்சிரிப்பில் வசீகரிக்கப்பட்டு ராதாராணியின்மேல் நழுவி விழுந்தது .. இப்படியாக கிருஷ்ணரும் தன் அன்பை ராதாராணிக்குத் தெரிவித்தார் ..
ஆயிரக்கணக்கான வருடங்கள் தவங்கள் செய்தாலும்கூட கிருஷ்ணர் ராதாராணியின் தெய்வீக அன்பைப் புரிந்துக்கொள்ள இயலாது .. தூயபக்தர் ஒருவரின் கருணையால் மட்டுமே ஸ்ரீஸ்ரீராதாகிருஷ்ணரின் புகழை உணர இயலும் ..
இன்றைய திருநாளில் ராதாராணியின் திருப்பாத தரிசனமே விசேஷம் .. ராதாஷ்டமி அன்று மட்டுமேஅன்னையின் திருப்பாதங்களை தரிசிக்கமுடியும் ..
ஸ்ரீமதி ராதா ராணியே ! உங்களை வணங்குகின்றோம் ஆன்மீக குருவிற்கும் .. உங்களுக்கும் பகவான் கிருஷ்ணருக்கும் சேவை செய்யும் பாக்கியத்தை எப்பொழுதும் எங்களுக்கு அருள்வீர்களாக ! என்னும் பிரார்த்தனையுடன் நம் மனோநிலையை அமைத்து பகவத்சேவையிலும் குருவின் சேவையிலும் நாம் ஈடுபட்டால் .. ஜடவுலகின் பிறப்பு .. இறப்பு .. முதுமை .. நோய் ஆகிய துன்பங்களில் இருந்து விடுபட்டு ஆன்மீக உலகமான கோலோக விருந்தாவனத்திற்கு பகவான் நம்மை அழைத்துச் செல்வார் என்பதில் சிறிதளவும் சந்தேகமில்லை ..
“ ஜெய்ஸ்ரீராதாகிருஷ்ணா “
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..