திருச்செந்தூரில் குவியும் பக்தர்கள்
நெல்லை : பொங்கல் மற்றும் தைப்பூசம் விழாக்கள் இந்த ஆண்டு அடுத்தடுத்து வருவதால் திருச்செந்தூரில் பக்தர்கள் குவிந்து வருகின்றனர். முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்குவது திருச்செந்தூர் ஆகும். குன்று இருக்கும் இடத்தில்தான் முருகன் இருப்பார். ஆனால் மாறாக கடற்கரையில் இருக்கும் திருச்செந்தூர் முருகனை தினமும் ஆயிரக்கணக்கானோர் தரிசனம் செய்கின்றனர். பொங்கலை முன்னிட்டு முருகனை வணங்கி விட்டுத்தான் வீட்டில் பொங்கல் இட வேண்டும் என்று மக்கள் குடும்பத்துடன் நடந்து பயணிப்பர்.
ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், சங்கரன் கோவில், அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி, நெல்லை பகுதியில் உள்ள பக்தர்கள் நெல்லை - திருச்செந்தூர் மெயின் ரோடு வழியாக நடைபயணம் செய்கின்றனர். விதவிதமாக அலங் கரிக்கப்பட்ட சப்பரத்தினை வாகனத்தில் வைத்துக் கொண்டு வேல்முருகனுக்கு அரோகரா என்று கோஷ மிட்டபடி நடந்து வருகின்றனர். விதவிதமான காவடி எடுத்தும், ஒரு அடி முதல் 8 அடி வரையிலான வேல் குத்தி நடந்து வருகின்றனர். கடந்த ஆண்டு ஜனவரி 14ம் தேதி பொங்கலும், 27ம் தேதி தை பூசமும் வந்தது. இதனால் பக்தர்கள் இரு பிரிவாக பிரிந்தபடி முருகனை தரிசிக்க வந்தனர்.
ஆனால் இந்த ஆண்டு 14ம் தேதி பொங்கலும் 17ம்தேதி தைபூசமும் வருகிறது. இது பக்தர்களுக்கு பெரிதும் ஆனந்தம் அளித்துள்ளது. இதுகுறித்து ஒய்வு பெற்ற ஆசிரியர் நல்லபெருமாள் கூறுகையில், பெரும்பாலும் பொங்கலும், தைபூசமும் அடுத்தடுத்து வருவது அபூர்வம். இந்த ஆண்டு பொங்கலும், தைபூசமும் அடுத்தடுத்து வருகிறது. இதனால் இரு பண்டிகைக்கும் சேர்த்தே ஏராளமான பக்தர்கள் நடைபயணம் செய்து வருகின்றனர் என்றார். நடைபயணம் செய்யும் பக்தர்கள் முருகனுக்கு அரோகரா என கோஷமிட்டு செல்வதாலும், ஜொலிக்கும் மின்சார விளக்குடன் சப்பரத்தில் செல்வதாலும் நெல்லையில் இருந்து திருச்செந்தூர் வரை சாலைகள் எல்லாம் மின் விளக்கால் அலங்கரிக்கப்பட்டது போல ஜொலிக்கிறது.
No comments:
Post a Comment