PANVEL BALAGAR

PANVEL BALAGAR
YATRA 2022

ஆஞ்சனேயர் செந்தூரமானது ஏன்?


அஞ்சனை மைந்தன் ஆஞ்சனேயன் சிவ சொரூபம் என்பார்கள். குழந்தை ஆஞ்சனேயர் சூரியனைப் பிடிக்கச் சென்று தாடை வீக்கம் பெற்று, அதனைத் தன் மாறாத அடையாளமாகவே கொண்டவர். இவர் செந்தூர ஆஞ்சனேயர் என்ற அடையாளமும் கொண்டவர்தான். அவரது தாடை வீக்கத்திற்குக் காரணம் தெரியும். செந்தூர நிறத்திற்குக் காரணம் என்ன?
இதற்கு காரணமாகக் கதை ஓன்றை சொல்கிறார்கள் வடநாட்டில். ஸ்ரீராமரை ஓரு கணம் கூட விடாமல் கண் கொட்டாமல் பார்த்துக்கொண்டே இருக்க விருப்பம் கொண்டவர் அனுமான்.
காட்டிலும், போரிலும் இருந்தவரை இதற்குத் தடையொன்றும் ஏற்படவில்லை. நாட்டிற்கு வந்து பட்டாபிஷேகத்திற்குப் பிறகு அன்னை சீதாப்பிராட்டியுடன் தனித்து இருக்க வேண்டிய காலமான இரவின் உச்சிக் காலமும் வந்தது. ஸ்ரீராமர் தன் அறையில் இருக்க, அவர் பாதத்தின் அருகே, ராமர் முகத்தையே பார்த்துக்கொண்டு அனுமன் அமர்ந்திருந்தாராம். சிறிது நேரத்தில் சீதா தேவி வர, அனுமன் எழுந்து வெளியே போகாமல் அங்கேயே அமர்ந்திருந்தாராம். கண்ணைச் சிறிதளவும் ஸ்ரீராமர் முகத்தைவிட்டு அவர் அகற்றவில்லை.
சீதா தேவி, அனுமனுக்கு விடை கொடுக்கக் கூறி கண் அசைத்து ஸ்ரீராமருக்குக் உணர்த்த, ஸ்ரீராமரும் அனுமனுக்குத் தெரிவிக்கும் முகமாக, “நெற்றி உச்சியில் சிவந்த குங்குமம் வைத்திருக்கும் சீதா தேவியுடன் இருக்கும் நேரமிது. அதனால் விடியற் காலையில் எழுந்து வா ஹானுமான்” என்கிறார்.
சீதா தேவியின் உச்சிப் பொட்டைப் பார்த்த அனுமன், கடைத் தெருவிற்கு பாய்ந்து ஓடிச் சென்றார். இரவானதால் பூட்டியிருந்த கடைகளின் கதவையெல்லாம் உடைத்து, ஓவ்வொரு கடையாக குங்குமம் எங்கே இருக்கும் என்று தேடினார். ஹோலிக்கு பூசப்படும் வண்ணப்பொடிக் கடை அரையிருளில் அவர் கண்ணில் பட்டது. கடைக் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே போனவுடன், அவரது மனதில் பளிச்சென்று எண்ணமொன்று தோன்றியது. அங்கிருந்த பொடியில் விழுந்து புரண்டார். உடம்பெல்லாம் பூசிக் கொண்டார்.
இப்பொழுது யாரால் தன்னை ஸ்ரீராமனிடம் இருந்து பிரிக்க முடியும் என்ற கனிந்த பக்தி எண்ணத்துடன், அவரது அறைக்குச் சென்றார். இதற்குள் மூன்றாம் சாமம் ஆகிவிட்டதால் கதவைத் திறந்து கொண்டு, தம்பதியராய் ஸ்ரீராமரும், சீதையும் வெளியே வந்தார்கள். அனுமனின் இந்த புதிய வண்ணத்தைப் பார்த்து இருவரும் சிரிக்கத் தொடங்கிவிட்டார்கள். பின்னர் அனுமனிடம் காரணம் கேட்க, சீத்தம்மாவுக்கு உச்சிப் பொட்டு மட்டுமே குங்குமம். தனக்கு உடலெல்லாம் குங்குமம் எனவே தனக்கே ராமனுடன் எப்போதும் இருப்பதற்கான உரிமை உள்ளது என்று பணிவுடன் கூறியுள்ளார்.
அனுமன் பிரம்மச்சாரியாக இருப்பதால் அவருக்கு இவ்விஷயம் தெரியவில்லை என்று உணர்ந்த பின் இருவரும் சிரிப்பதை நிறுத்திவிட்டு “ஹனுமான் உன் உடம்பில் பூசப்பட்டு இருப்பது குங்குமமில்லை செந்தூரம்” என்று சொல்லி மீண்டும் சிரிக்கத் தொடங்கி விட்டார்களாம். ஸ்ரீராம பக்தியின் தீவிரத்தைக் காட்டும் செந்தூர ஆஞ்சனேயரின் பல திரு உருவத்தை, திருமலையில் காணலாம்.

No comments:

Post a Comment