சபரிமலை, ஜன.5-சபரிமலையில் ரூ.6½ கோடி செலவில் மாளிகைப்புறம் கோவில்கள் நவீனப்படுத்தப்படுகின்றன

சபரிமலையில் உள்ள மாளிகைப்புறம் அம்மன் கோவில் மற்றும் உப கோவில்களை ரூ.6½ கோடி செலவில் நவீனப்படுத்த தேவசம் போர்டு தீர்மானித்துள்ளது.

சபரிமலையில், சாமி அய்யப்பனை தரிசனம் செய்த பக்தர்கள், மாளிகைபுறம் அம்மன் கோவிலில் தரிசனம் செய்வது வழக்கம். இந்த கோவில் பல ஆண்டுகாலமாக சீரமைக்கப்படாமல் அப்படியே இருக்கிறது. கோவிலை சுற்றிலும் மணி மண்டபம், உப தெய்வங்கள், நாகராஜர், மலை தெய்வங்கள், நவக்கிரகங்கள் அமைந்து உள்ளன.

இவற்றை சீரமைப்பதற்காக திட்டுகளை உடைத்து ஒரே சமதளத்தில் வாஸ்து சாஸ்திர அடிப்படையில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான சீரமைப்பு பணிகள் விரைவில் தொடங்குகிறது.

கடந்த 2010-ம் ஆண்டில் தேவசம் கமிஷனராக கே.ஜெயகுமார் இருந்தபோது தயாரிக்கப்பட்ட அறிக்கை திட்டப்படி மாளிகைப்புறம் கோவில்கள் கட்டப்பட வேண்டும் என்றும், கருவறை பகுதியை அடிப்படையாக கொண்டு உள்ளே பலிவட்டம் சுற்றுப்பிரகார வழி போன்றவை அமைக்கப்பட வேண்டும் என்றும் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டது.

இந்த புதிய திட்டப்படி மாளிகைப்புறம் கோவிலின் முன்புறம் உள்ள நடைப்பந்தல் மற்றும் பிரசாதம் தயாரிக்கும் இடம் ஆகியவற்றை அகற்றிவிட்டு, புதிய தூண்கள் கட்டப்பட்டு, சாமான்கள் வைக்கும் அறை, சுற்றுச்சுவர் அமைக்கப்பட உள்ளது. சுற்றம்பலத்தின் வெளியே சீவேலிப்புரை மற்றும் வெளிப்பகுதியில் மணிமண்டபமும் அமைக்கப்படும். இவை ரூ.6½ கோடி செலவில் நிறைவேற்றப்படும்.

இதுபற்றி சபரிமலை கோவில் தந்திரி கண்டரரு மகேஸ்வரருவின் கருத்து என்ன? என்பதை கேட்டு அறிந்து கோவில்கள் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சபரிமலை “மாஸ்டர் பிளான்” என்ற புதிய திட்டப்படி அப்பம் -அரவணை பிரசாத தயாரிப்பு அமையும் இடமும் தேர்வு செய்யப்படும்.

அதுபோல் பஸ்மக்குளத்தின் சீரமைப்பு பணிகளை எந்த அளவில் நடைமுறைப்படுத்தலாம் என்றும் கலந்து ஆலோசனை நடத்தி மாற்றி அமைக்கப்பட தீர்மானிக்கப்பட்டுள்ளது.

14-ந்தேதி மகர விளக்கு பூஜை மற்றும் ஜோதி தரிசனத்திற்காக லட்சக்கணக்கிலான பக்தர்கள் சபரிமலைக்கு வருவார்கள் என்பதால், போக்குவரத்து வசதி, குடிநீர் வசதி, மருத்துவ வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகளை கேரள அரசும், தேவசம் போர்டும் முழு வீச்சில் செய்து வருகிறது.

நிலக்கல், பம்பை மற்றும் சன்னிதானம் பகுதியில் உள்ள கடைகள், ஓட்டல்களில் பொருட்கள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகிறதா? தரமானவைதானா? என அதிகாரிகள் மற்றும் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டு வருகிறார்கள்.

No comments:

Post a Comment