காசிக்குப் போயும் பாவம் தொலையலியே::::


காசிக்குப் போனால் பாவம் தொலையும் என்பார்கள். காசியிலேயே பாவம் செய்பவர்கள் இருக்கிறார்கள். காசியில் சுற்றித்திரியும் போதும், பாவ எண்ணங்களுடன் திரிபவர்களும் இருக்கிறார்கள். இவர்களுக்கெல்லாம் வாழ்வில் முக்தியே கிடைக்காதபடி செய்து விடுவார் தண்டபாணி பைரவர்.

காசியில் இரண்டு பைரவர் கோயில்கள் உண்டு. ஒன்று காலபைரவர் கோயில், இது மிகவும் பிரசித்தி பெற்றது. ஆனால், இதன் அருகிலுள்ள "தண்டபாணி மந்திரில்' உள்ள தண்டநாயகர் என்னும் தண்டபாணி பைரவர், காசிக்குப் போகிறவர்களைத் தரம்பிரித்து பாவ புண்ணியங்களை வழங்குபவராக உள்ளார்.

குபேரனைத் தலைவராகக் கொண்ட இனத்தவர் யட்சர்கள் எனப்படுவர். இவர்களில் குணபத்திரன் என்பவர் கந்தமாதன பர்வதம் என்ற மலையில் வசித்து வந்தார். இவர் தவமிருந்து பெற்ற பிள்ளை ஹரிகேசவன். இவர் சிறந்த சிவபக்தராகத் திகழ்ந்தார். குணபத்திரன், தன் மகனை தங்கள் குல தலைவரான குபேரனை வழிபடும் படி தூண்டினார்.

""ஆஹா! குபேரனா நம் தலைவர்! அவர் சிவபெருமானிடம் இருந்து சகலநிதிகளையும் பெற்று உலகத்திற்கே பொருள் தருபவராயிற்றே! அவரது தயவிருந்தால், அவரே என்னை சிவபெருமானிடம் சேர்த்து விடுவாரே!'' என்று அப்போதும் சிவபெருமானின் பெருமைகளையே பேசினார்.

ஒருநாள், சிவனைக் காண வேண்டும் என்ற உந்துதல் அதிகமானது. அவர் காசியில் வசிக்கிறார் என்பதால், அங்கே செல்ல விரும்பினார் ஹரிகேசவன். வீட்டை விட்டு வெளியேறி வெகுதூரம் சென்று, சிவபெருமானை நினைத்து தவத்தை தொடங்கி விட்டார். உணவு. உறக்கம் மறந்து தியானத்தில் ஆழ்ந்ததால், எலும்பும் தோலுமாகி விட்டார். இத்தகைய பக்தனுக்கு அருள்புரிய வந்தார் சிவபெருமான். ஆழ்ந்த தியானத்தில் இருந்த தன் பக்தனை எழுப்பினார். ஹரிகேசவனால் தன் கண்களையே நம்ப முடியவில்லை. அவன் முன்னால் ஒரு பெரிய ஆறு ஓடிக்கொண்டிருந்தது.

பக்தர்கள் "ஹரஹர சங்கர, சிவசிவ சங்கர' என்ற கோஷம் எழுப்பியபடி சென்று கொண்டிருந்தனர். அப்போது ரிஷப வாகனத்தில் சிவன் காட்சியளித்தார். ""ஹரிகேசவா! நீ விரும்பியபடியே காசிக்கு வந்துவிட்டாய். உன் தவத்தை மெச்சினேன். உன் விருப்பப்படி இனி காசியிலேயே தங்கியிரு. இவ்வூரே எனக்கும் மிகவும் பிடித்தமானது. உனக்கு ஒரு பணி தருவேன், அதைச் செய்ய வேண்டும்,'' என்றார்.
தலையை மட்டும் அசைத்து பதிலேதும் சொல்லாமல், கைகட்டி வாய் பொத்தி நின்ற கேசவனிடம்,""இந்த ஊருக்குள் யார் நுழைந்தாலும் அவர்களைக் கண்காணிக்க வேண்டும். இங்குள்ள எல்லாக் கணங்களுக்கும் (காவல் பூதங்கள்) நீயே தலைவன். நீயே இங்கு வருவோருக்கு உணவும், நீண்ட ஆயுளும் தர வேண்டும். இவ்வுலக வாழ்வு பொய்யானது என்ற ஞானத்தையும் அருளவேண்டும். இனி இந்த காசியின் அதிகாரி நீ தான். இங்கே வருபவர்கள் பாவ சிந்தனையுடன் திரிந்தால், அவர்களை இந்த ஊரை விட்டு வெளியே செல்லும்படியான மனநிலையை உருவாக்க வேண்டும். இங்கே நல்லவர்கள் மட்டுமே தங்க வேண்டும். உன்னை மக்கள் "தண்டபைரவர்' என்பர். உனக்கு தேவ சரீரம் தருகிறேன்,'' என்றார்.

ஹரிகேசவன் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. அப்போது உருவானது தான் "தண்டபாணி மந்திர்'. காசிக்குப் போனால், இந்தக் கோயிலுக்குச் சென்று பிறப்பற்ற நிலையை அடைய வேண்டி வாருங்கள்.


No comments:

Post a Comment