ராஜபாளையம்– சபரிமலை இடையே புதிய சுரங்கப்பாதை ரயில் திட்டம்: மேற்குத் தொடர்ச்சி மலையில் ஆய்வு நடத்த வலியுறுத்தல்

                        

ராஜபாளையம் – சபரிமலை இடையே புதிய சுரங்கப்பாதை ரயில் திட்டத்துக்கான சாத்தியக்கூறுகள் குறித்து மேற்குத் தொடர்ச்சி மலையில் ஆய்வு நடத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. இதுகுறித்து தென்காசி, விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதிகளில் போட்டி யிடும் வேட்பாளர்கள் வாக்குறுதி அளிக்க வேண்டும் என்று மக்கள் கோருகின்றனர்.
ஆண்டுதோறும் தமிழகத்தில் இருந்து சபரிமலைக்கு மாத பூஜைகளுக்கும் மண்டல மற்றும் மகரஜோதி பூஜைக்காகவும் சுமார் 20 லட்சம் பேர் சென்று வருகின்றனர். ராஜபாளையம், செங்கோட்டை, புனலூர், பத்தனம்திட்டா வழியாகவும், திண்டுக்கல், தேனி, குமுளி, பீர்மேடு வழியாகவும், ஈரோடு, போத்தனூர், பாலக்காடு, திருச்சூர், எர்ணாகுளம், கோட்டயம் வழியாகவும் 3 மார்க்கங் களில் ஐயப்ப பக்தர்கள் சபரிமலைக்கு செல்கின்றனர்.
சென்னையில் இருந்து சபரி மலைக்கு இந்த வழியாகச் செல்லும்போது 12 மணி முதல் 17 மணி நேரம் வரை ஆகும். பயண நேரத்தைக் குறைக்கவும், விரைவாக சபரிமலைக்கு சென்று வரவும் வசதியாக ராஜபாளையம் – சபரிமலை இடையே 58 கி.மீ. நீளத்துக்கு மேற்குத் தொடர்ச்சி மலையில் புதிய சுரங்கப்பாதை ரயில் திட்டத்தை நிறைவேற்றலாம் என்று அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். இத்திட்டத்துக்கான சாத்தியக்கூறுகள் பற்றி ஆய்வு நடத்த வேண்டும் என்று ரயில்வே வாரியத்துக்கு மதுரை கோட்ட ரயில்வே உபயோகிப்பாளர்கள் ஆலோசனைக் குழு மூத்த உறுப்பினர் பி.டி.கே.ஏ.பாலசுப்பிரமணியம் கடிதம் எழுதியுள்ளார்.
சேத்தூர் வழியாக..
ராஜபாளையத்தில் இருந்து செங் கோட்டையை நோக்கி சாலையில் செல்லும்போது 8-வது கி.மீட்டரில் சேத்தூர் என்ற ஊர் உள்ளது. இங்கிருந்து 8-வது கிலோ மீட்டரில் மேற்குத் தொடர்ச்சி மலைஅடிவாரமும் அதன்பிறகு 42 கி.மீட்டர் தூரத்தில் சபரிமலையும் அமைந்துள்ளன. இப்பாதையில் புதிய சுரங்கப்பாதை அமைத்தால் சேத்தூர் வழியாக சபரிமலைக்கு சில மணி நேரத்திலேயே செல்ல முடியும். பயண நேரம் 7 மணி நேரம் வரை குறையும்.
சேத்தூர் – சபரிமலை இடையே பெரிய மலைகள், நதிகள், ஏரிகள் உள்ளன. மலைகளில் 8 முதல் 12 கி.மீட்டர் வரை சுரங்கப் பாதையும், நதிகளின் குறுக்கே மேம்பாலங்களும் அமைத்து புதிய ரயில் பாதை அமைக்கலாம் என்று அக்கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
சாத்தியக்கூறுகள்
இந்த சவாலான பணி குறித்து ரயில்வே பொறியாளர் ஒருவர் கூறுகை யில், “சேத்தூர் – சபரிமலை இடையே ஹெலிகாப்டரில் பறந்து அதிநவீன கேமரா மூலம் பிரமாண்ட மலைகள், நதிகள், ஏரிகளை துல்லியமாகப் படம்பிடித்து, சுரங்கப்பாதைக்கான சாத்தியக்கூறுகளை ஆராயலாம். அந்தப் பகுதியில் பெரும்பாலான பகுதி காப்புக்காடுகளாக இருப்பதால் முதலில் மத்திய வனத்துறை அனுமதி பெற வேண்டும். இதற்கான முயற்சியை தமிழகம் மற்றும் கேரளா அரசுகள் இணைந்து மேற்கொள்ள வேண்டும். இந்தியன் ரயில்வே இன்ஜினீயர்களால் மேற்கொள்ளப்பட்ட கொங்கன் ரயில்வே சுரங்கப்பாதை திட்டத்தை வெளிநாட்டு இன்ஜினீயர்களும் பாராட்டுகின்றனர். இதுபோல சேத்தூர் – சபரிமலை இடையே சுரங்கப்பாதை ரயில் திட்டத்தை நிறைவேற்றினால் உலக அளவில் பாராட்டப்படும் திட்ட மாக அது இருக்கும்” என்றார்.
புதிய தேயிலைத் தோட்டங்கள்
இப்புதிய திட்டத்தால் தமிழ்நாடு – கேரளா இடையே அதிக அளவில் தேயிலைத் தோட்டங்கள் உருவாகும். இருமாநிலங்களின் சுற்றுலாத் தலங் கள் மேம்படும். சரக்கு மற்றும் பயணிகள் போக்குவரத்து மூலம் ரயில்வேக்கு கோடிக்கணக்கான ரூபாய் வருவாய் கிடைக்கும். சபரிமலை செல்லும் லட்சக்கணக்கான ஐயப்ப பக்தர்களுக்கு வரப்பிரசாதமாக இந்த திட்டம் அமையும்.
திட்டத்துக்கான சாத்தியக்கூறுகள் பற்றி ஆய்வு நடத்த ரயில்வே நிர் வாகத்தை முதல்வர் ஜெயலலிதா கேட்டுக் கொள்ள வேண்டும் என்றும் தென்காசி, விருதுநகர் தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் கட்சித் தலைமைக்கு எடுத்துச் சொல்லி வாக்குறுதியாக அளிக்க வேண்டும் என்றும் தென்மாவட்ட மக்களும், வர்த்தக அமைப்பினரும் வலியுறுத்துகின்றனர்.

No comments:

Post a Comment