நவ திருப்பதி - ஆத்திகர்களும் நாத்திகர்கள் இருவரும் பார்க்க வேண்டிய திருத்தலங்கள்.


நெல்லை - திருச்செந்தூர் போகும் வழியில் தாமிரபரணியின் இருகரையோரங்களிலும் இந்த ஒன்பது திருத்தலங்களும் அமைந்திருக்கிறன.

காலை ஏழே முக்காலுக்கு முதல் தரிசனம் ஆழ்வார் திருநகரியில் ஆரம்பித்தால், திருக்கோளூர், தெந்திருப்பேரை, பெருங்குளம், இரட்டை திருப்பதி (இரண்டு திருத்தலங்கள்), திருப்புளியங்குடி, நத்தம் முடித்து இறுதியாக ஸ்ரீவைகுண்டம் தரிசித்து அப்படியே நெல்லை சென்று விடலாம். அல்லது ஸ்ரீ வைகுண்டம் தொடங்கி ஆழ்வார் திருநகரியில் முடித்து திருச்செந்தூரில் இரவு தங்குவதாக அமைத்துக் கொள்ளலாம். வாகனம் கண்டிப்பாகத் தேவை.

ஆத்திகர்கள் : பெருமாள் திருத்தலங்கள் ஒன்பது அருகருகே காணக்கிடைப்பது அரிதாகையால் நிச்சியம் பாருங்கள்.

தமிழார்வலர்கள் : பிரபந்தம் பாடிய ஆழ்வார்கள் உலவிய இடம் மற்றும் அவர்கள் வரலாறு குறித்த விசயங்களுக்காக பாருங்கள்.

தொல்பொருள் ஆர்வலர்கள் : நம்மாழ்வார் கிடந்த புளியமரம் இன்னும் உயிர்ப்புடன் இருப்பது. ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சி நிலம் அங்கே தான் இருக்கிறது. அதற்காக பார்க்கலாம்.

பிஸினஸ் ஆட்கள் : வருமானமே இல்லாத கோவிலில் சத்தமில்லாமல் நல்ல நிர்வாகம் எப்படி செய்வது என்று தெரிந்து கொள்ள நவதிருப்பதியையும் சுற்றி வாருங்கள். அத்தனை சுத்தம்/ நேர நிர்வாகம்.

நன்கொடையாளர்கள் : சுண்டக்காயைக் கொடுத்துட்டு சுத்திச் சுத்தி பேர் எழுதிக் கொள்பவர்கள் மத்தியில் 9 கோவிலையும் நிர்வகித்துக் கொடுத்தாலும் ஒரு இடத்தில் கூட தன் பெயரைப் போட்டுக் கொள்ளாத டி.வி.எஸ் அறக்கட்டளையின் சிறப்பினைப் பார்க்க போய் வாருங்கள்.

குழந்தைகள் : ஒவ்வொரு கோவிலும் ஒவ்வொரு பூங்கா மாதிரி இருக்கிறது. நல்ல குடிநீர்/கழிவறை வசதியுடன் புல்தரையுடன் விளையாட வசதியாக இருப்பதால் குழந்தைகளுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். எல்லா கோவில்களிலும் யானை இருக்கின்றன.

நாத்திகர்கள் : மேலே சொன்னதெல்லாம் உண்மை தானா என்று ஊர்ஜிதப்படுத்தவாவது சென்று வாருங்கள்.  ( குடும்பத்துடன் ஒரு சுற்றுலா மாதிரி போயிட்டு வாங்க. மனசு சந்தோசமாக இருக்கும்.)

No comments:

Post a Comment