சபரிமலை: ஆனி மாத பூஜைகளுக்காக சபரி மலை ஐயப்பன் கோயில் நடை வருகிற 14ம்தேதி திறக்கப்படுகிறது. 18 மற்றும் 19ம்தேதிகளில் தேவ பிரசன்னம் என்ற தெய்வ அருள் வாக்கு கேட்பு நிகழ்ச்சி நடக்கும். புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெற்றுவரும் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜை திருவிழாக்கள் மிகவும் பிரசித்தி பெற்றவை. இந்த திருவிழா நாட்கள் தவிர ஒவ்வொரு மலையாள மாதத்தின் முதல் 5 நாட்களிலும், ஓணம், விஷு பண்டிகை நாட்களிலும், பங்குனி உத்திரம் திருவிழா நாட்களிலும் சபரிமலை கோயில் நடை திறக்கப்ப்டடு, பல்வேறு பூஜைகள் நடைபெறும். எனவே இந்த நாட்களிலும் திரளான பக்தர்கள் சபரிமலைக்கு வந்து சாமி தரிசனம் செய்வார்கள். இந்நிலையில், ஆனி மாத பூஜைக்காக சபரிமலை கோயில் நடை, வருகிற 14ம்தேதி சனிக்கிழமை மாலை 5.30 மணிக்கு திறக்கப்படுகிறது. திருநடையை தந்திரி கண்ட ரரு மகேஸ்வரரு முன்னிலையில், மேல்சாந்தி நாராயணன் நம்பூதிரி திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றுகிறார். அதை தொடர்ந்து தீபாராதனை நடைபெறும். நடை திறப்பதையொட்டி, அன்றைய தினம் சிறப்பு பூஜைகள் எதுவும் நடைபெறாது. கோயில் கருவறை மற்றும் சுற்றுப்புற பகுதிகள் சுத்தம் செய்யும் பணிகள் நடைபெறும். 15ம்தேதி முதல் தினமும் அதிகாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு நிர்மால்ய தரிசனமும் தொடர்ந்து கணபதி ஹோமம், நெய் அபிஷேகம், உஷ பூஜை, உச்சபூஜை, தீபாராதனை, புஷ்பாபிஷேகம், அத்தாழ பூஜை உள்பட பல பூஜை வழிபாடுகள் நடைபெறும். மேலும் 19ம்தேதி வரை கோயில் தந்திரி தலைமையில் படிபூஜை, உதயாகஸ்தமன பூஜை, கலசபூஜை, களபிஷேகம் போன்ற சிறப்பு பூஜைகளும் நடைபெறும். 19ம்தேதி அத்தாழ பூஜைக்கு பிறகு இரவு 10 மணிக்கு நடை சாத்தப்படும். சபரிமலையில் மாளிகைபுரம் அம்மன் கோயில் சீரமைப்பு பணிகள் நடப்பது தொடர்பான தேவ பிரசன்னம் என்ற தெய்வ அருள் வாக்கு கேட்பு நிகழ்ச்சி வரும் 18 மற்றும் 19ம் தேதிகளில் நடைபறுகிறது.
No comments:
Post a Comment