நவகிரகங்களை ஒரே நாளில் சுற்றிப்பார்ப்பது எப்படி? தமிழ்நாட்டில் திங்களூர் (சந்திரன்), ஆலங்குடி (குரு), திருநாகேஸ்வரம் (ராகு), சூரியனார் கோவில் (சூரியன்), கஞ்சனூர் (சுக்கிரன்), வைத்தீஸ்வரன் கோயில் (செவ்வாய்), திருவெண்காடு (புதன்), கீழ்பெரும்பள்ளம் (கேது), திருநள்ளாறு (சனி) என்று ஒன்பது கிரகங்களுக்கும் கோயில் உள்ளது. இவை அனைத்தும் கும்பகோணத்துக்கு அருகிலேயே, அந்நகரை சுற்றி அமைந்திருக்கின்றன. எனவே சரியான முறையில் திட்டமிட்டால் எல்லா ஸ்தலங்களையும் ஒரே நாளில் சுற்றிப்பார்த்து விடலாம். 1, திங்களூர் (சந்திரன்): நவகிரக ஸ்தலங்களில் நீங்கள் முதலில் பார்க்கவேண்டியது திங்களூர்தான். நீங்கள் பேருந்தில் செல்ல விரும்பினால் கும்பகோணம் பேருந்து நிலையத்திலிருந்து திங்களூர் செல்வதற்கு நிறைய பேருந்துகள் உள்ளன. இதன் மூலம் பாபநாசம், ஐயம்பேட்டை வழியாக 33 கிலோமீட்டர் தொலைவில் உள்ள திங்களூரை சுமார் 1 மணி நேர நேரத்தில் அடைந்து விட முடியும். இதற்கு சரியாக காலை 5.30 மணிக்கெல்லாம் கும்பகோணத்திலிருந்து நீங்கள் கிளம்ப வேண்டும். பின்னர் திங்களூர் கைலாசநாதர் கோயிலில் சுவாமி தரிசனத்தை முடித்துக்கொண்டு 7 மணிக்கு கும்பகோணம் கிளம்பலாம். 2, ஆலங்குடி (குரு) : கும்பகோணத்தில் காலை உணவை முடித்துக்கொண்டு 8.30 மணிக்கெல்லாம் ஆலங்குடி கிளம்ப வேண்டும். கும்பகோணம் பேருந்து நிலையத்திலிருந்து ஆலங்குடி செல்ல எண்ணற்ற பேருந்துகள் கிடைக்கின்றன. அதோடு கும்பகோணத்திலிருந்து 17 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ஆலங்குடியை 30 நிமிடத்தில் அடைந்து விடலாம். பின்னர் ஸ்ரீ ஆபத்சகாயேஸ்வரர் கோயிலில் 30 நிமிடங்களுக்குள் சுவாமி தரிசனத்தை முடித்துக்கொண்டு 9.30 அல்லது 9.45 மணியளவில் கும்பகோணத்திற்கு திரும்பலாம். 3, திருநாகேஸ்வரம் (ராகு) : கும்பகோணத்திற்கு வெகு அருகிலேயே 6 கிலோமீட்டர் தொலைவில் திருநாகேஸ்வரம் அமைந்திருப்பதால் 10 அல்லது 15 நிமிடங்களில், 10.45 மணியளவில் திருநாகேஸ்வரம் ராகு கோயிலை அடைந்து விட முடியும். நாகநாதசுவாமி ஆலயம் 100 தூண்களை கொண்ட பெரிய கோயில் என்பதால் தரிசனம் செய்து முடிக்க 30 நிமிடங்களுக்கு மேல் ஆகும். பின்னர் 11.15 மணிக்கு கும்பகோணம் திரும்ப வேண்டும். 4, சூரியனார் கோவில் (சூரியன்) : சூரியனார் கோவில் கும்பகோணத்திலிருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. எனவே நீங்கள் 11.45-க்கு புறப்பட்டால் கூட 12.15 மணிக்கெல்லாம் சூரியனார் கோவிலை அடைந்து விடலாம். சூரியனார் கோவிலில் உள்ள சிவசூரியநாராயண கோவில் மற்ற நவகிரக கோயில்களை போல் அல்லாமல் சூரியனை முதன்மையாக கொண்டு நவக்கிரகங்களுக்கென தனித்து அமைந்த கோயில் எ‌ன்ற சிறப்பை பெற்றுள்ளது. இங்கு சூரிய பகவானை தரிசித்து முடித்தவுடன் 12.45 மணிக்கெல்லாம் கஞ்சனூர் கிளம்ப வேண்டும். 5, கஞ்சனூர் (சுக்கிரன்) சூரியனார் கோவிலிலிருந்து கஞ்சனூர் 5 கிலோமீட்டர் தொலைவிலேயே அமைந்திருப்பதால் பேருந்து அல்லது கார் மூலமாக 10 நிமிடங்களில் கஞ்சனூரை அடைந்து விடலாம். எனவே 1 மணிக்கு முன்பாகவே உங்களால் அக்னீஸ்வரர் ஸ்வாமி கோவிலுக்கு சென்று விட முடியும். அதோடு 1.15 மணியளவில் கோயில் நடை சாத்தப்பட்டுவிடும் என்பதால் கால் மணி நேரத்திற்குள்ளாக சுவாமி தரிசனத்தை முடித்துக்கொள்ளவேண்டும். 6, வைத்தீஸ்வரன் கோயில் (செவ்வாய்) : நவகிரக கோயில்கள் அனைத்திலுமே 1.15 மணிக்கு நடை சாத்தப்பட்டால் பின்பு 4 மணிக்கே கோயில் கதவுகள் திறக்கப்படும். எனவே 1.30 மணிக்கு கஞ்சனூரிலிருந்து மயிலாடுதுறை செல்லும் பேருந்தில் ஏறினால் 20 கிலோமீட்டர் தொலைவிலுள்ள மயிலாடுதுறையை 2 அல்லது 2.15 மணிக்கெல்லாம் அடைந்து விடலாம். அதன் பின்பு மயிலாடுதுறையிலேயே மதிய உணவை முடித்துக்கொண்டு ஆற அமர 3.15 மணியளவில் கிளம்பினால் கூட 15 கிலோமீட்டர் தூரமுள்ள வைத்தீஸ்வரன் கோயிலை 3.45 மணிக்கெல்லாம் அடைந்து விட முடியும். பின்னர் கோயில் நடை திறந்து பின்பு சுவாமி தரிசனத்தை முடித்துக்கொண்டு 4.30 மணிக்கு வைத்தீஸ்வரன் கோயிலிலிருந்து கிளம்பினால் சரியாக இருக்கும். 7, திருவெண்காடு (புதன்) : வைத்தீஸ்வரன் கோயிலிலிருந்து 4.30 மணிக்கு கிளம்பினால் 16 கிலோமீட்டரில் அமைந்துள்ள திருவெண்காடு ஸ்தலத்தை 5 மணிக்கு அடைந்துவிட முடியும். பின்னர் ஸ்வேதாரண்யேஸ்வரர் கோயிலில் வீற்றிருக்கும் புதன் பகவானையும், சிவபெருமானையும் தரிசித்துவிட்டு 5.30 மணிக்கு கிளம்ப வேண்டும். 8, கீழ்பெரும்பள்ளம் (கேது) : திருவெண்காட்டிலிருந்து 8 கிலோமீட்டர் தூரத்தில் அமையப்பெற்றுள்ள கேது பகவானின் கீழ்பெரும்பள்ளம் ஸ்தலத்தை 15 நிமிடங்களில் அடைந்து விடலாம். இந்த கீழ்பெரும்பள்ளம் கோயிலையும் தஞ்சாவூரில் இருக்கும் பிரகதீஸ்வரர் கோயிலையும் இணைக்கும் சுரங்கப்பாதை ஒன்று இங்கு அமைந்திருப்பதாக சொல்லப்படுகிறது. ஜாதகத்தில் தவறான இடத்தில் கேது இருப்பதால் தோஷம் அடைந்த மக்கள், அதற்கு பரிகாரம் செய்ய இந்த கோயிலுக்கு வருகிறார்கள். 9, திருநள்ளாறு (சனி) : நவகிரக ஸ்தலங்களின் சுற்றுலாவில் நீங்கள் இறுதியாக செல்லவிருக்கும் இடம் சனி பகவான் வீற்றிருக்கும் திருநள்ளாறு ஸ்தலம். கீழ்பெரும்பள்ளத்திலிருந்து 6.15 அல்லது 6.30 மணிக்கு புறப்பட்டால் 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ள திருநள்ளாறு ஸ்தலத்தை திருக்கடையூர், காரைக்கால் வழியாக 8 மணிக்கெல்லாம் அடைந்து விட முடியும். அதன் பின்னர் ஸ்ரீ தர்பாரன்யேசுவரர் திருக்கோவிலில் சனி பகவானையும், சிவபெருமானையும் தரிசிக்கலாம்

No comments:

Post a Comment