அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. இன்றிரவு நடராஜப் பெருமான் ஆருத்ரா அபிஷேகம் நடைபெற்று அதன்பின்பே தரிசன பெருவிழா அனைத்து சிவாலயங்களிலும் நடைபெறுகிறது .. இதனைக் கண்டு நடராஜப்பெருமானை வழிபட்டால் என்றென்றும் மகிழ்ச்சி நிலைக்கும் .. தங்களனைவரும் மகிழ்ச்சியுடனும் .. தடைகள் நீங்கி வளமான வாழ்வு பெற வாழ்த்துகின்றேன் .. வணங்குகின்றேன் .. ஆருத்ரா தரிசனம் சிவபெருமானுக்குரிய அஷ்டமஹா விரதங்களுள் ஒன்று .. மார்கழிமாத மதிநிறைந்த நன்னாளோடு இணைந்து திருவாதிரை வருவதால் விண்ணிலிருந்து சந்திரன் தன்னை தலையில் அணிந்து சாபவிமோசனம் அளித்த சிவபெருமானின் அன்பர்களை தன் பதினாறு அமுதகலைகளால் ஆசீர்வதிக்கின்றான் .. ஆதியும் அந்தமும் இல்லாத அருட்பெருஞ்ஜோதியாக ஓருருவம் .. ஓர்நாமம் .. இல்லாத சிவபெருமான் செம்பவளமேனிவண்ணன் என்பதனால் அவரை சிவப்பு நட்சத்திரமான திருவாதிரையான் என்றும் அழைத்தும் அந்த திருவாதிரையன்று ஆடும் அந்த அம்பலக்கூத்தனை சிறப்பாக வழிபடுகின்றோம் .. ஆருத்ரா என்பது ஆதிரையை குறிக்கும் சொல் .. சிவனுக்குரிய ஜென்மநட்சத்திரம் திருவாதிரை .. எனவேதான் இந்த திருவாதிரை நாளில் ஆடல் அரசனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்படுகிறது .. திருமணமான பெண்கள் தங்கள் தாலிபாக்கியம் நிலைக்க காணவேண்டிய விழா “ஆருத்ரா தரிசனம்” .. சிவபெருமானுக்குரிய வடிவங்களில் முதன்மையானது நடராஜர் வடிவமே .. இவர் ஆடுவது ஆனந்ததாண்டவம் .. ஆருத்ரா தரிசனத்தன்று ஆதிரைக்களி படைக்கும் வழக்கம் உண்டு .. உண்மையான பக்தியுடன் எளிமையான உணவு படைத்தாலும் ஆண்டவன் ஏற்றுக்கொள்வான் என்பதே தாத்பர்யம் .. ‘திருவாதிரைக்கு ஒருவாய்க்களி’ என்பது பழமொழி .. எனவே மார்கழிமாத திருவாதிரையன்று அன்று விரதம் உள்ள பக்தர்கள் ஒருவாய்க்களி உண்டு மகிழ்கின்றனர் .. அதன் பலன் அளவிடற்கரியது .. ‘களி’ என்றால் ஆனந்தம் என்று அர்த்தம் .. ஆனந்ததாண்டவம் ஆடும் நடராஜரை நாம் உண்மையான உள்ளன்புடன் வழிபட்டால் அவர் நமக்கு உண்மையான ஆனந்தமயமான மோக்ஷ்த்தை வழங்குவார் என்பதை உணர்த்துவதே களி படைப்பதன் உள்ளர்த்தம் .. “ஆரார் வந்தார் அமரர்குழாத்தில் அணியுடை ஆதிரைநாள் நாராயணனோடு நான்முகன் அங்கி இரவியும் இந்திரனும் தேரார் வீதியில் தேவர்குழாங்கள் திசையணைத்தும் நிறைந்து பாரார் தொல்புகழ் பாடியும் ஆடியும் பல்லாண்டு கூறுதுமே” .. என்று ஆனந்தசேந்தன் பாடியபடி திருமால் .. பிரம்மன் .. இந்திரன் உள்ளிட்ட தேவர்குழாம் எல்லாம் வந்து எம்பெருமான் ஆதிரைத்தேரோட்டத்தைக் காணும் அழகை தரிசிக்கும் திருநாள் திருவாதிரைத் திருநாள் .. கோயிலின் உள்ளே சென்று வழிபட முடியாதவர்களுக்காக தானே வெளியே வந்து தேரார் வீதியில் திருத்தேரில் வந்து நடராஜப்பெருமான் பஞ்சமூர்த்திகளுடன் அருட்காட்சி அளித்து ஆனந்தம் பொழியும் அற்புதத்திருநாள் .. இந்நாளில் நடராஜப்பெருமானைத் தரிசித்து சகலவளங்களும் பெறுவீர்களாக .. “ஓம் சிவாய நமஹ” .. .. WISH YOU ALL A BLESSED SUNDAY WITH THE BLESSINGS OF LORD SHIVA .. 'OM SHIVAAYA NAMAHA ' ..

No comments:

Post a Comment