பச்சரிசி மாவில் கோலம் போடுவதன் தத்துவம் என்ன? மற்றவர்களுக்கு அன்னதானம் செய்தல் புண்ணியம். அதிலும் ஆயிரம் பேருக்கு அன்னதானம் செய்தல் பெரும் புண்ணியமாகும். வசதி படைத்த பணக்காரர்கள் அக்காலத்தில் ஆயிரம் பேருக்கு அன்னதானம் செய்தார்கள். ஆனால், ஏழை என்ன செய்வான்? அந்த ஏழையும் ஆயிரம் உயிர்களுக்கு அன்னதானம் செய்யும் வழிவகைகளை நம் முன்னோர்கள் சொல்லி வைத்தார்கள். பச்சரிசி மாவில் கோலம் போட்டால் அம் மாவை ஆயிரக்கணக்கான எறும்புகள் சாப்பிட்டபின், மீதமிருக்கும் அரிசி மாவை எடுத்துச் சென்று தங்கள் வலைகளில் சேமித்து வைக்கும். எனவே, ஆயிரக்கணக்கான உயிர்களுக்கு உணவளித்து மகிழ்ச்சிப்படுத்தும், இந்த முறையைப் போல் ஆன்ம நேயத்தையும், ஆன்மீகத்தையும் சிறப்பிக்கும் செயல் வேறு உண்டோ எனில் இல்லையெனக் கூறலாம். " உன்னிலும் என்னிலும் இருக்கும் ஈசன், ஈயெறும் புடலிலும் இருக்கிறான்" எனபது நினைவு கூறத்தக்கவை. ஆயிரம் உயர்களுக்கு உணவளித்த அந்த மகிழ்ச்சி, உணவளித்தவரின் உள்ளம், உடல் ஆகிய இரண்டையும் ஆரோக்கியமாக வைத்திருக்கும் அல்லவா? கோலம் போடுவதில் இன்னொரு தத்துவமும் அடங்கியிருக்கிறது. பல புள்ளிகள் வைத்து பல வடிவங்களில் வளைத்து போடப்படுகின்ற கோலம், பார்ப்பவரின் மனத்தைக் கவரும். யாராவது வீட்டில் தகராறு செய்ய வேண்டும் என்று நினைத்து வருகின்றபோது, அந்த அழகுக் கோலங்கள், வருபவரின் எண்ணத்தைச் சிதற வைக்கிறது. அதனால், வருபவர் கோபம் தணிந்துதான் வீட்டுக்குள்ளே வருவார். இப்படிப்பட்ட மனோவசிய சக்தி கோலங்களுக்கு உண்டு என அறிந்தே முன்னோர்கள் கோலம் போடுவதைப் பரவலாக செய்தார்கள்.

No comments:

Post a Comment