Temple imagesஇதிகாசங்களும், சாஸ்திரங்களும் மனித வாழ்வை செம்மைப்படுத்த, பல நல்ல வழிகளை சொல்லி, வழி காட்டுகின்றன. அவற்றின்படி நம்மால் நடக்க முடிகிறதோ இல்லையோ, அதன்படி நடந்தவர்கள், நன்மையே அடைந்துள்ளனர் என்பதை, நாம் தெரிந்து கொள்வதன் மூலம், நம் வாழ்வை நெறிபடுத்திக் கொள்ளலாம். காசியில், தர்மபாலன் என்ற அந்தணர் இருந்தார். பெயருக்கு ஏற்றார் போல, நற்குணங்கள், நிறைந்தவர். அவரது மகன் தட்சசீலத்தில் இருந்த ஒரு வித்யாலயாவில், கல்வி கற்றுக் கொண்டிருந்தான். ஒருசமயம், குருகுலத்தில், குருவின் மகன், சிறு வயதிலேயே இறந்து விட்டான். அதுகுறித்து, மாணவர்கள் வருந்திப் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது, எங்கள் வம்சத்தில் இப்படி யாரும் சிறு வயதில் இறந்ததில்லை... என்றான் தர்மபாலனுடைய மகன். இந்த விஷயத்தை, மாணவர்கள், குருவிடம் சொல்ல, அவர், அவனை அழைத்து விவரம் கேட்டார். அதற்கு அவன், எங்கள் பரம்பரையில், ஏழு தலைமுறைகளாக அனைவருமே முதுமையடைந்து தான் இறந்திருக்கின்றனர். சிறு வயதில் யாருமே இறந்ததில்லை... என்றான். அது எப்படி சாத்தியமாகும் என்று நினைத்த குரு, இதன் உண்மையை அறிந்து கொள்வதற்காக, ஆட்டு எலும்புகளை ஒரு பையில் சேகரித்து, காசியில் இருக்கும் தர்மபாலனின் வீட்டுக்கு சென்றார்.

அங்கு தர்மபாலனிடம், உங்கள் பையன் திடீரென இறந்து விட்டான். இதோ பாருங்கள் அவன் எலும்புகள்... என்று சொல்லி, ஆட்டு எலும்புகளை காட்டினார். இதைக் கேட்ட தர்மபாலன் சிறிதும் கலங்காமல், சிரித்தபடியே, இவை என் பையனின் எலும்புகளாக இருக்க முடியாது; அவன் கண்டிப்பாக இறந்திருக்க மாட்டான். காரணம், எங்கள் பரம்பரையில், ஏழு தலைமுறைகளாக யாருமே, சிறு வயதில் இறந்தது கிடையாது... என்றார். குருநாதர், ஆச்சர்யம் அடைந்து, உண்மையை சொல்லி, உங்கள் பிள்ளையும் இதையே தான் கூறினான். இது எப்படி சாத்தியம்? எனக் கேட்டார். தர்மபாலன் சொன்னார்: இதில், வியப்பதற்கு ஒன்றுமில்லை. நாங்கள் தர்மத்தின்படி நடக்கிறோம்; தீயவர்களுடன் சேர்வது இல்லை, நல்லவர்களைப் பிரிப்பது இல்லை. பொய் சொல்ல மாட்டோம்; துறவிகள், அந்தணர்கள் மற்றும் ஏழைகள், பிச்சை கேட்போர், யாத்திரிகர்கள் ஆகியோருக்கெல்லாம், முழு மனதோடு, இனிமையாக பேசி, உணவு அளிக்கிறோம். நாங்கள் செய்யும் இத்தகைய நன்மைகள் தான், எங்களை வாழ வைக்கின்றன. அதன் காரணமாகவே, எங்கள் பரம்பரையில் யாரும், சிறு வயதில் இறப்பதில்லை. - இவ்வாறு அவர் கூறினார். உண்மையை உணர்ந்த குரு, தன் செயலை எண்ணி வருந்தியபடி, ஊர் திரும்பினார் என்பது கதை. நமக்காக இல்லாவிட்டாலும், நம் சந்ததிகளின் நன்மையை நினைத்தாவது, முடிந்தவரை, நல்லதை செய்ய முயற்சிப்போம்.

No comments:

Post a Comment