மகாமக வருடத்தில் திருமணங்கள் செய்யக் கூடாதா
 
வரும் பிப்ரவரி மாதம் மகாமகம் வருகிறது. அந்த மாதம் மற்றும் வருடம் முழுக்கவும் திருமணங்கள் நடத்த கூடாது எனவும், அப்படி நடத்தினால் திருமண ஜோடிகளின் வாழ்கை சுபமாக இருக்காது என்றும் ஒரு தகவல் கும்பகோணம் மக்கள் மத்தியில் தீயாய் பரவி, அப்பகுதி மக்களிடையே கவலையை ஏற்படுத்தி உள்ளது.
12 ஆண்டுகளுக்கு ஒருமுறை குருபகவானும், சூரியபகவானும் நேருக்கு நேர் பார்த்துக்கொள்வதே மகாமகம் என கொண்டாடப்படுகிறது. இந்த பெரிய மகாமகத்தில் திருமணம் உள்ளிட்ட சுபகாரியங்கள் தமிழகம் முழுக்கவே செய்யக் கூடாது என வதந்தி பரவி வருகிறது. இதனால், திருமண ஏற்பாட்டை செய்து வரும் மணமக்கள் வீட்டார்கள், தை மாதத்திலேயே திருமணத்தை நடத்த ஆர்வம் காட்டுகிறார்கள்.
இதனால், திருமண மண்டபம் உட்பட திருமணத்துக்கு தேவையான அனைத்துக்கும் தட்டுபாடு ஏற்பட்டுள்ளது. ஒரு சிலர் இந்த பயம் காரணமாக அடுத்த வருடம் திருமணத்தை நடத்திக்கொள்ளலாம் என தள்ளி வைக்கவும் செய்கிறார்கள். தீயாய் பரவும் வதந்தியால், திருமண ஏற்பாட்டை செய்து வருபவர்கள், மனம் நொந்து காணபடுகிறார்கள்.
இது குறித்து சமூக ஆர்வலரான சத்தியமூர்த்தியிடம் பேசினோம்.
“கும்பகோணத்தில் நடைபெரும் மகாமகம் தென்னகத்து கும்ப மேளா என்றழைக்கபடுகிறது. இதற்கு இந்தியா முழுக்க மற்றும் வெளிநாட்டில் இருந்தும் பல லட்சம் மக்கள் கூடுவார்கள்.
இங்கு உள்ள மகாமகம் குளத்தில் குளித்தால் பாவங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை. இதை தேசிய விழாவாக அறிவிக்க வேண்டும் என பல அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இப்படிபட்ட சிறப்புகள் வாய்ந்த மகாமகத்தில் அந்த வருடத்திலும், மாசி மாதத்திலும் திருமணங்கள் நடத்தக் கூடாது என பலவாறு வதந்திகள் கிளம்பி, மக்களை பயத்தில் ஆழ்த்தியுள்ளது.
திருமணம் நடத்தக் கூடாது என ஆன்மீக அன்பர்கள் இதுவரை யாரும் சொல்லவில்லை. 1992, 2004-ம் ஆண்டு மகாமகம் வருடத்தில் எல்லாம், எல்லோரும் திருமணங்களை நடத்தினார்கள். எனவே வதந்திகளை நம்பாமல் எல்லோரும் சுபகாரியங்களை நடத்தலாம்” எனக் கூறினார்.
தன் மகளுக்கு திருமண ஏற்பாடுகளை செய்து வரும் சேகர் என்பவரிடம் பேசினோம்.
”என் பொண்ணுக்கு திருமண ஏற்பாட்டை செய்து வந்தேன். எல்லோரும் மகாமக வருடத்தில் திருமணம் செய்ய வேண்டாம் என எச்சரித்தார்கள். நானும் திருமண ஏற்பாட்டை நிறுத்திவிட்டேன்.
அதன்பின் மணமகன் வீட்டார் வற்புறுத்த, ஆன்மீக வட்டாரத்தில் விசாரித்தபோது, மகம் வரும் மாசி மாதத்தை தவிர்த்து அடுத்தடுத்த மாதங்களில் திருமணத்தை வைத்துக் கொள்ளுங்கள் எனக் கூறினார்கள். அதனால், இப்போது நான் என் மகள் திருமணத்தை, வருகின்ற பங்குனி மாதத்தில் நடத்த ஏற்பாடு செய்து வருகிறேன்” என்றார்.
இதுகுறித்து தஞ்சாவூர் சந்தோஷி அம்மன் கோவில் குருக்கள் ரமேஷ் சிவத்திடம் கேட்டபோது, ”மாசி மாதம் 10-ம் நாள் (பிப்ரவரி 22-ம் தேதி) மகாமகம் வருகிறது. 12 ஆண்டுக்கு ஒரு முறை வரும் இந்த மகாமகம் ரொம்பவே சிறப்பு வாய்ந்தது.
மகாமகத்தின்போது கும்பேஸ்வரன், சாரங்கபாணி கோவில்களுக்கு மட்டும் இல்லாமல் கும்பகோணத்தை சுற்றியுள்ள அனைத்து கோவில்களுக்கும் கும்பாபிஷேகம் நடத்துவதுடன் அந்த கோவில்களுக்கும் விழா ஏற்பாடு செய்யப்பட்டு மகாமகம் நடத்தப்படும்.
விழா ஏற்பாடு செய்யப்பட்டவுடன், கோவில்களில் கொடி ஏற்றி காப்பு கட்டப்படும். இந்த நாட்களில் வேறேதும் சுபகாரியங்கள் நடந்தால் கவனம் சிதறும் என சாஸ்திரங்கள் கூறுகிறது.
எனவே கும்பகோணத்தை சுற்றியுள்ள அனைத்து கோவில்களில் உள்ள நான்கு ராஜ வீதிகளிலும், அந்த பன்னிரண்டு நாட்களுக்கு மட்டும் திருமணம் உள்ளிட்ட சுகாரியங்கள் நடத்தக் கூடாது. இது கும்பகோணத்துக்கு மட்டும்தான்; தமிழகத்துக்கு இல்லை. எனவே யாரும் பயப்படாமல் வதந்திகளை நம்பாமல், வருடம் முழுக்கவும் திருமணத்தை நடத்தலாம்” என்றார்.
இனி… கெட்டிமேளம்… கெட்டிமேளம்தான் போங்க!

No comments:

Post a Comment