தினமும் காட்டில் விறகு வெட்டி அதனை விற்று வாழ்க்கையை ஓட்டிக்கொண்டிருந்தான் சத்தியவான். தன் கணவன் வாழும் இடமே தனக்கு சொர்க்கம் என்று, கணவன் வசிக்கும் காட்டிற்குச் சென்று வசித்து வந்தாள் சாவித்ரி.
"நாரதர் மூலமாகத் தன் கணவனின் ஆயுள் விரைவில் முடிந்துவிடும் என்று அறிந்துகொண்ட சாவித்ரி அந்த நிலை ஏற்பட்டால் என்ன செய்வது?' என்று யோசித்துத் தன் கணவனின் ஆயுளை நீடிக்க விரதம் மேற்கொள்ளத் திட்டமிட்டாள். அதன்படி பார்வதி தேவி கடைப்பிடித்த விரதத்தினை மேற்கொண்டாள். தன் கணவன் விறகு வெட்டச் செல்லும் போது, கார் அடையும் வெண்ணெயும் தயார் செய்து, தன் குல தெய்வத்திற்குப் பூஜை செய்து, மஞ்சள் சரடை பூஜையில் வைத்து, அதில் ஒன்றைக் கையில் கங்கணமாகக் கட்டிக் கொண்டாள். அன்றே நல்ல சுப வேளையில் திருமாங்கல்யச் சரடையும் மாற்றிக் கொண்டாள். அந்த நாள் மாசிமாதக் கடைசியும் பங்குனி மாதம் ஆரம்பமாகும் சுப வேளையும் ஆகும்.
காட்டில் விறகு வெட்டச் சென்ற சாவித்திரியின் கணவன் சத்தியவான், நாகம் தீண்டியதால் அவன் உயிர் பிரிந்தது. தன் கணவன் இறந்து விட்டான் என்பதை அறிந்த சாவித்திரி தன் கற்பு வலிமையால் யமனை அங்கு வரவழைத்து நியாயம் கேட்டாள்.
"ஆயுள் முடிந்து விட்டது. விதிப்படி என் கடமையைச் செய்தேன்'' என்று யமதர்மராஜன் கூறினான். இருந்தாலும் யமனுடன் வாதம் செய்தாள் சாவித்திரி. கடைசியில் தனக்கு ஒரு வரம் தரும்படி யமனிடம் கெஞ்சினாள். அவளது உறுதியும் கண்ணீரும் யமன் மனதை இளகச் செய்தது. "உன் கணவன் உயிரைத் தவிர எந்த வரம் வேண்டுமானாலும் தருகிறேன்'' என்று வாக்குறுதி கொடுத்தான்.
"வாழையடி வாழையாக என் வம்சம் தழைக்க வேண்டும்'' என்றாள். அப்படியே தந்தேன் என்றான் தர்மராஜன்.
""தர்மராஜரே, மகிழ்ச்சி. உங்கள் வரத்தின்படி என் கணவர் இல்லாமல் என் வம்சம் தழைக்க முடியாது, ஆகவே என் கணவனின் உயிரை அளியுங்கள்" என்று கேட்கவே, கொடுத்த வார்த்தையை மீற முடியாத தர்மராஜன் அவளுடைய சாதுரியத்தை வாழ்த்திவிட்டு சத்தியவானின் உயிரையும் அளித்தான். தான் விரதம் கடைப்பிடித்து பூஜை செய்த நாளிலேயே தன் கணவன் மீண்டும் உயிர் பெற்றதைக் கண்ட சாவித்திரி, "திருமணமான பெண்கள் தன் கணவனுடன் நீண்ட காலம் வாழ, இப்பூஜை செய்து நல்ல பலனைப் பெறும் பாக்கியத்தை அருள வேண்டும்'' என்று அன்னை காமாட்சியிடம் வேண்டி அருள் பெற்றாள் சாவித்திரி. இந்த நோன்பினை மாசி மாதக் கடைசியிலும் பங்குனி மாதம் ஆரம்பமாகும் வேளையிலும் கடைபிடிக்க வேண்டும்.
சாவித்திரியானவள் தன் கணவனுடன் காட்டில் வாழ்ந்த போது செந்நெல்லையும் காராமணியையும் கொண்டு அடை தயார் செய்து, வெண்ணெய்யுடன் ஸ்ரீகாமாட்சி அன்னைக்குச் சமர்ப்பித்து வழிபட்டதாலும், மாசி மாதக் கடைசியிலும் பங்குனி ஆரம்ப நிலையிலும் விரதமிருந்து கணவன் உயிரைக் காக்க மனபலம் பெற்றதாலும், அன்று காரடை தயார் செய்து, "உருகாத வெண்ணெயும் ஓரடையும் வைத்து நோன்பு நோற்றேன். ஒரு நாளும் என் கணவர் பிரியாமலிருக்க வேண்டும்" என்று சுமங்கலிகள் பூஜையின்போது வேண்டிக் கொள்ள வேண்டும் என்பார்கள்.
காரடையான் நோன்பின்போது மஞ்சள்சரடு வைத்து வழிபட்டு, சுப வேளையில் அதனை பெண்கள் கழுத்தில்அணிந்து கொள்ள வேண்டும். அத்துடன் கணவரிடம் ஆசி பெறுவதால் தங்கள் வாழ்வும் சிறக்கும். கணவரும் ஆரோக்கியமாக நீண்ட காலம் வாழ்ந்து வம்சம் தழைத்து வளரும் என்பது நம்பிக்கை.
No comments:
Post a Comment