ஸ்ரீமதே ராமானுஜாய நம:
திருமங்கை ஆழ்வாரின் எளிய வழி.
இன்று கார்த்திகை மாதத்தில் கார்த்திகை நக்ஷத்ரம். ஆழ்வார்களில் கடைசியான திருமங்கை ஆழ்வார் அவதரித்த திருநாள். திருமங்கை ஆழ்வாருக்கு கலிகன்றி என்று திருநாமம். அப்படி என்றால் கலியின் கடுமையை நீக்குபவர், துன்பத்தைப் போக்குபவர் என்று பொருள். ஆழ்வார் என்றோ அவதரித்தவர்; அவர் இன்று இருக்கும் கலியின் கொடுமையைப் போக்குகிறார் என்றால் என்ன பொருள். கலியின் ஆதிக்கத்தால் நமக்கு ஆன்மீக அறிவு குறையும், ரஜோ குணம் தமோ குணம் அதிகமாகும், பகவானை விட பிற விஷயங்களை அனுபவிப்பதில் ஈடுபாடு அதிகமாகும். இவற்றைத் தன்னருளாலும் பாசுரங்களாலும் என்றும் போக்குபவர் திருமங்கை ஆழ்வார். கலிகன்றி என்றதால் கலியுகத்தை அழித்து விடுவார் என்று பொருளல்ல, கலியுகத்தில் என்னென்ன தீமைகள் ஏற்படுமோ அவற்றை போக்குபவர் என்று பொருள். இதற்காக ஆழ்வார் ஒரு முக்கியமான யுக்தியைக் கையாண்டார். கலியில் நாம் கண்ணால் கண்டதையே நம்புவோம்.
அதனால் நம் கண்ணால் காண இயலாத வைகுந்த நாதன், பாற்கடல் வாசுதேவன், என்றோ பிறந்த ராமன் கண்ணன் முதலான அவதாரங்கள், நம் உள்ளத்தின் ஆழத்தில் உறையும் அந்தர்யாமி இவர்களையெல்லாம் தொழச் சொல்லாமல் நம் கண்ணுக்கு நேரே தரிசனம் கொடுக்கும் விக்ரஹ வடிவத்தில் கோயில்களில் எளிமையோடு இருக்கும் அர்ச்சாவதாரப் பெருமானையே இவ்வாழ்வார் தொழச் சொன்னார். பகவானின் மற்ற நிலைகளை விட கோயில்களில் எழுந்தருளி இருக்கும் அர்ச்சா நிலைக்கே தனிச்சிறப்பு. நாம் 108 திவ்ய தேசங்களை அறிவோம். அதில் 47 திவ்யதேசங்கள் திருமங்கையாழ்வாரால் மட்டுமே பாடப்பட்டவை. மற்ற ஆழ்வார்களோடு சேர்த்து 86 திருத்தலக் கோயில்களைப் பல்லாண்டு பாடினார். அதிலும் சிறப்பு, இந்த ஒவ்வொரு திருத்தலத்திற்கும் இவ்வாழ்வார் நேரே சென்று தரிசித்து பாடல்களை சமர்ப்பித்துள்ளார் ஆகவே ஆழ்வார் காட்டிய வழியில் திவ்யதேசங்களில் பக்தியோடு தொண்டு செய்ய வேண்டும். இதன் மூலம் கலியின் கடுமையைக் குறைக்கலாம். இதற்கு அருள் புரிந்த திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்.