. அகத்திய மாமுனிவர் வழிபட்ட தலம், ஆன்ம தத்துவத்தை விளக்கும் தலமாக விளங்கும், சின்னக்காவனம் நூற்றெட்டீஸ்வரர் ஆலயத்தின் சிறப்புகள். காடு என்றால் சோலை என்று பொருள் வனம் என்றால் வயல் சூழ்ந்த காடு என பொருள் அவ்வாறு, சோலைகளும், வயல்களும் மிகுந்திருந்ததால் காவனம் எனப் பெயர் பெற்றது, திருவள்ளூர் மாவட்டத்திலுள்ளள சின்னகாவனம். காசி யாத்திரை செல்லும் வழியில், அகஸ்திய மாமுனிவர் இங்கு சிறிது காலம் தங்கியிருந்ததாகவும், அப்போது அவரது கனவில் தோன்றிய சிவபெருமான், ஏறிஞ்சி மரத்தின் அடியில், 108 சிவலிங்கங்களை அமைத்து வழிபட்டால், காசிக்கு செல்வதற்கு சமம் என கூறியதாக புராணக் கதைகள் குறிப்பிடுகின்றன. அதன்படி 108 லிங்கங்களை பிரதிஷ்டை செய்தார் அகஸ்தியர். அவருக்கு சிவன் 108 திருவுருவங்களாக காட்சி அளித்ததால், நூற்றெட்டீஸ்வரன் என்று பெயர் பெற்றது இத்தலம். பழமையான இக்கோயிலின் விருட்சமான ஏரழிஞ்சில் மரம், இங்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேல் உள்ள அதிசய மரமாக அறியப்படுகிறது. இம்மரத்திலிருந்து விழும் விதைகள், மீண்டும் மரத்தில் ஓட்டிக்கொள்ளும் இயல்புடையவவை என்பதால், பார்ப்பதற்கு பவளக்கூடு போன்று காணப்படுகிறது. மூலவரான நூற்றெட்டீஸ்வரருக்கு அஷ்டோத்ர ஈஸ்வரர் என்ற திருநாமமும் உண்டு. மேற்கு பார்த்த படி இத்தலத்தின் சன்னதி அமைந்துள்ளது. ராஜகோபுரத்தின் நேர் எதிரேயுள்ள சன்னதியில், ஸ்ரீசதுர்வேதீஸ்வரரும், சிவகாமியம்மையும் எழுந்தருளி தரிசனம் தருகின்றனர். தாமரை மலர்களை கரங்களில் ஏந்தி, மகாலட்சுமியின் அம்சமாக திகழ்கிறார் சிவகாமியம்பாள். கோயிலில் பூமீஸ்வரருக்கு தனி சன்னதி உள்ளது. வள்ளி, தெய்வானையுடன் சுப்ரமண்யர், சிவசூரியன், காலபைரவர் ஆகிய தெய்வங்களை இங்கு தரிசிக்கலாம். ஏரழிஞ்சல் மரத்தின் அடியில் பிள்ளையாரையும் தரிசனம் செய்யலாம்… வேண்டியது நிறைவேறும் என்பதால், பிள்ளையாருக்கு வடைமாலை சாற்றி பக்தர்கள் வழிபடுகின்றனர்.
No comments:
Post a Comment