சுருட்டப்பள்ளியில் பிரதோஷநேரத்தில்....
இவ் ஆலயத்தில் அருளும் பள்ளிகொண்டீஸ்வரர், சர்வ மங்களாம்பிகையின் மடியில் தலைவைத்து சயன கோலத்தில் காட்சி தருகிறார். பரந்தாமனை போலவே பரமேஸ்வரன் பள்ளிகொண்ட ஒரே கோவில் இது என்பது சிறப்பாகும்.
இந்திரன் அமிர்தம் வேண்டி பாற்கடலை கடைய முற்பட்டான். திருமாலின் உதவியோடு தேவர்கள் ஒரு புறமும், அசுரர்கள் ஒரு புறமும் நின்று, வாசுகி என்ற பாம்பை கயிறாகவும், மந்திர மலையை மத்தாகவும் கொண்டு பாற்கடலை கடைந்தனர். இருபுறமும் பிடித்து இழுத்ததால், வாசுகி பாம்பு வலி தாங்க முடியாமல் விஷத்தை கக்கியது. இதை கண்டு அஞ்சிய தேவர்களும், அசுரர்களும் கயிலை நாதனான சிவனிடம் தஞ்சம் அடைந்து அனைவரையும் காக்க வேண்டினர்.
ஈஸ்வரன் தன் அருகில் இருந்த சுந்தரரை அனுப்பி, விஷத்தை திரட்டி எடுத்து வரச் செய்தார். சுந்தரரும் பாற்கடலில் தோன்றிய மொத்த விஷத்தையும் ஒன்று திரட்டி, ஒரு கரு நாவல்பழம் போல செய்து சிவபெருமானிடம் கொடுத்தார். பரமேஸ்வரன் அந்த கொடிய நஞ்சினை வாயில் போட்டு விழுங்கினார். விஷம் உடலுக்குள் இறங்காமல் இருக்க, ஈசனின் கண்டத்தை (கழுத்தை) பிடித்தாள் உமாதேவி. இதனால் விஷம் கண்டத்திலேயே நின்று விட்டது. அதனால் தான் ஈசனை ‘நீலகண்டன்’ என்று அழைக்கிறோம்.
விஷத்தை அருந்திய பின், உமையவளுடன் சிவபெருமான் கயிலாயம் புறப்பட்டார். வழியில் அவருக்கு களைப்பு ஏற்பட்டது. அதனால் அவர் ஓரிடத்தில் ஓய்வெடுத்தார். பார்வதி தேவியின் மடியில் தலை வைத்து களைப்பு நீங்க சயனித்தார். அந்த இடமே சுருட்டப்பள்ளி என்று சொல்லப்படுகிறது. இந்த ஆலயத்தில் பார்வதி தேவி ‘சர்வமங்களா’ என்ற திருநாமத்துடன் அருள்கிறார்.
No comments:
Post a Comment