PANVEL BALAGAR

PANVEL BALAGAR
YATRA 2022

SWAMY SARANAM. GURUVE SARANAM..

 ஆஷாட ஏகாதசி ஸ்பெஷல் !


வளம் பெருக்கி, நலம் சேர்க்கும் வர்காரி யாத்திரை!


‘ஆடி ஏகாதசியன்று லட்சோபலட்சம் பக்தர்கள் பண்டரிபுர விட்டலனை தரிசிக்கச் செல்லும் மகத்தான நீண்ட பயணம்தான் ‘‘வர்காரி யாத்திரை.’’ 


மகாராஷ்டிரத்தில் உள்ள இந்த வர்காரிகள் சம்பிரதாயம் தனித்தன்மை வாய்ந்தது. வர்காரிகளுக்கு பாண்டுரங்கனே கண்கண்ட தெய்வம், புனிதமான பண்டரிபுரமே வைகுண்டம். வருஷத்தில் இரண்டு தடவையாவது பண்டரிபுரம் வந்து விட்டலனை தரிசிக்காவிட்டால் அவர்களுக்கு தேகம் தரிக்காது. பெரும்பாலோர் ஏழை எளிய மக்களே. அவர்கள் ‘விடோபா, விடோபா’ என்று புலம்பிக்கொண்டே வயல்களிலும் சிறுசிறு தொழில் நிலையங்களிலும் பணிபுரிகிறார்கள். அவர்களுக்கு விவசாயம், சிறிய கடைகண்ணிகள், கூலிவேலை ஆகிய இவையே ஜீவாதாரத் தொழில்கள். அவர்களது குறிக்கோள், பண்டரிபுரத்திற்கு வருவதும், பாண்டுரங்க விட்டலனை தரிசிப்பதுமே.


‘வர்காரி’ என்றால் யாத்திரையை நிறைவேற்றுபவர் என்று பொருள். இத்தகையப் பயணத்தை மேற்கொள்ளும்போது ஒரு வர்காரியின் ஆடை மிகவும் எளியதாக இருக்கும். கழுத்தில் துளசி மாலையோடும், கையில் கிண்ணாரத்தோடும் காவிக்கொடி ஏந்தி, பக்திப் பாடல்களை இசைத்துக் கொண்டு செல்வார்கள். வருடத்திற்கு இருமுறை ஏகாதசி நாளில் பண்டரிபுரம் போவது அவர்கள் கடமையாகிறது. பண்டரிபுரம் சென்றதும் சந்திரபாகா நதியில் நீராடி விட்டலநாதனை தரிசிப்பது வழக்கம். சாதி வேறுபாடின்றி வர்காரி சம்பிரதாயத்தில் ஈடுபட்டுள்ளோர் சுக துக்கங்களை மறந்து துறவிகள் போல் வாழ்வை மேற்கொள்ள வேண்டிய அவசியமில்லை. 


சபரிமலை யாத்திரை போல் ஒரு குருவின் மூலமாக துளசிமாலை அணிந்து வர்காரியாக வாழ்க்கையைத் துவங்கும் அவர்களை ‘மாலாகரி’ என்றும் அழைப்பதுண்டு. ‘வர்காரி யாத்திரை’ எனும் இந்த பண்டரிபுர யாத்திரைக்கு ஒரு மாதத்திற்கு முன்பே அருட்தொண்டர்களின் பாதுகைகள், உருவங்கள் அடங்கிய பல்லக்குகளைத் தூக்கிக் கொண்டு நடைப்பயணமாகவோ, மாட்டு வண்டியிலோ பக்திப் பாடல்களைப் பாடிக்கொண்டு செல்கிறார்கள். ஞானேஸ்வர், துகாராம், நிவிர்த்திநாத், ஏக்நாத் போன்ற மகான்களைக் குருவாகக் கொண்டு அவர்கள் போதித்த வழியில் வாழ்க்கை நடத்துவதே வர்காரிகளின் கொள்கையாகும். 


மகான்கள் போதித்த வண்ணம் ஆண்டுக்கு இரண்டுமுறை அவர்கள் மகாராஷ்டிராமெங்கிலுமிருந்தும் கூட்டம் கூட்டமாக விட்டலனை தரிசிக்கப் புறப்பட்டுவிடுகிறார்கள். அப்படி யாத்திரை போகும்போது குருமார்களான ஞானேஸ்வரின் பல்லக்கு ஆலந்தி எனும் இடத்திலிருந்தும், 

துகாராமின்  பல்லக்கு, தேஹுரோடிலிருந்தும், நிவிர்த்திநாத்தின் பல்லக்கு திரும்பகேஸ்வரிலிருந்தும், ஏக்நாத்தின்  பல்லக்கு பைதானிலிருந்தும் புறப்படுகின்றன. இதேபோன்று அறுபதுக்கும் மேற்பட்ட பல்லக்குகள் பண்டரிபுரம் போய்ச்சேருகின்றன. மேலும் உள்ளூர் தெய்வங்களையும் சிறுசிறு பல்லக்குகளில் ஏற்றிக் ெகாண்டு, பஜன்கள் பாடிக்கொண்டு, இசைக் கருவிகள் ஒலிக்க விட்டலனின் நாமசங்கீர்த்தனம் முழங்கிக்கொண்டு வருவார்கள். 


குறிப்பிட்ட நாளுக்கு முன்பே பயணத்தைத் தொடங்கி பல நூறு கிலோ மீட்டர் தூரத்தைக் கடந்து பண்டரிபுரம் அடைகிறார்கள். எறும்பு வரிசைபோல பண்டரிபுரம் செல்லும் பாதைகளிலெல்லாம் வர்காரிகள் செல்லும் அழகே அழகு. மகாராஷ்டிராவின் கிராமப் பகுதிகளில் பெரும்பாலானோர் ‘வர்காரி’கள்தான். அவர்கள் அத்தனை பேரும் ‘சுத்த சைவம்’. புலால் பற்றிப் பேச்செடுத்தாலே காதைப் பொத்திக் கொண்டுவிடுகிறார்கள். வர்காரிகள் அத்தனை பேரும் விட்டல் பக்தர்கள். தங்கள் குருவான ராமதேவர் கையால் இந்த விட்டலன் பாலும் சோறும் சாப்பிட்டான் என்பதில் தீவிர நம்பிக்கையுடையவர்கள்.


மகான் ராமதேவர், தான்ஸோட்டி-குணாபாய் தம்பதியின் புதல்வன். தினமும் நைவேத்யம் எடுத்துப் போய் பண்டரிநாதனுக்கு நிவேதித்துவிட்டு வருவது தான்ஸோட்டியின் வழக்கம். ஒருநாள் ஏதோ அவசரம் காரணமாக, மகனை அப்பணியைச் செய்ய அனுப்பிவிட்டு வெளியூர் சென்றுவிட்டார். பாலகன் ராமதேவன் நைவேத்யத்துடன் போய் விட்டலன் முன்வைத்து ஆராதித்தான். விட்டலன் பேசாதிருக்க, ‘நீ சாப்பிட்டால்தான் நான் போவேன். நீ சாப்பிடாவிட்டால் நான் பூஜை செய்யவில்லை என்று என் அம்மா என்னை அடிப்பாள். சாப்பிடு சாப்பிடு... நீ சாப்பிடுகிறாயா! இல்லை, நான் உயிரை விடட்டுமா?’ என்று கதறியபடி விட்டலனின் காலடியில் தலையை மோதிக் கொள்ளப் போனான். உடனே விட்டலன் பிரசன்னமாகி, அவனையே ஊட்டிவிடச் சொல்லி, சோறும் பாலும் உண்டானாம். அப்படியே

ராமதேவனுக்கும் ஊட்டிவிட்டானாம்.


இதைக் கேட்ட தந்தை நம்பாமல் மறுநாளும் மகனை பூஜை செய்ய அனுப்பிவிட்டு பின்னாலேயே வந்து பார்க்க, அப்போதும் ராமதேவனின் வற்புறுத்தலுக்காக விட்டலன் தோன்றி அவன் கையால் அமுது உண்டானாம். இச்செய்தி நாடெங்கும் பரவவே ராமதேவரின் புகழ் ஓங்கியது. இப்படி விட்டலனுக்கு அமுதூட்டும் பேறுபெற்ற ராமதேவரே ‘வர்காரி’களுக்கு குரு. இவரிடம் ‘வர்காரி’கள் வைத்திருக்கும் பக்திக்கும் நம்பிக்கைக்கும் அளவே கிடையாது. 


ராமதேவர், துகாராம், தியானேஷ்வர் ஆகிய பிரசித்தி பெற்ற மகாராஷ்டிர பக்த மாமணிகளின் பாடல்களே ‘வர்காரி’களின் உதடுகளில் சதா ஒலித்துக் கொண்டிருக்கின்றன. அவர்கள் காட்டிய வழியிலே வாழ்கிறோம் என்பதில் ‘வர்காரி’களுக்கு பரம சந்தோஷம், மகா திருப்தி. எடுத்ததற்கெல்லாம் ‘நாம தேவர் சொல்கிறார், துகாராம் சொல்கிறார்’ என்று ஒரு பாட்டை எடுத்துப் போட, ‘வர்காரி’கள் தவறுவதேயில்லை. பண்டரிபுரத்தில் புதன்கிழமையே விட்டலனுக்கு உகந்த நாளாகக் கருதப்படுகிறது. அன்று ஆயிரக்கணக்கில் மக்கள் கூடுகின்றனர். மாதந்தோறும் வரும் ஏகாதசி நாட்களில் பல்லாயிரக் கணக்கான மக்கள் கூடுகின்றனர்.


வருடத்திற்கு இரண்டு ஏகாதசியைச் சிறப்பாக, முக்கியமாகக் கொண்டாடுகிறார்கள். ஆடி மாதத்தில் வரும் ஆஷாட ஏகாதசியும், கார்த்திகை மாத ஏகாதசியும் அத்தகையவை. இவ்விரு ஏகாதசிகளிலும் ஐந்து லட்சத்துக்கும் மேற்பட்ட வர்காரிகள் பாத யாத்திரையாக வந்து விட்டலனை தரிசித்துச் செல்கிறார்கள். ஒவ்வொரு மாதமும் ஏகாதசி, சைத்ர ஏகாதசி நாட்களில் முக்கியமான திருவிழாக்கள் நடைபெறுகின்றன. 


அதுதவிர தசரா, ராமநவமி, கிருஷ்ண ஜெயந்தி, தீபாவளி நாட்களும் விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றன. ஆடி, கார்த்திகை மாத ஏகாதசிகளின் போதுதான் ஆலந்தி, தேஹு போன்ற தூரதூர பிரதேசங்களிலிருந்தெல்லாம் ஆயிரக்கணக்கான பல்லக்குகளைத் தூக்கிக் கொண்டு, லட்சக்கணக்கான வர்காரிகள் வருகிறார்கள். அவர்களின் தலைகள் அன்று விட்டலனின் முன் குனிந்து ‘பாத ஸ்பரிசம்’ பெற்று மன திருப்தியுடன் திரும்பிச் செல்கின்றனர்.


லட்சோபலட்சம் வர்காரிகள் பாத யாத்திரையாக வரும்போது அவர்களை ஒவ்வொரு ஊரிலும் வரவேற்று உணவு, உறைவிடம் கொடுத்து உபசரித்து வழியனுப்பி வைக்கிறார்கள் மக்கள். வர்காரிகள் வரும் வழியெல்லாம் தண்ணீர் பந்தல்களும் அன்னதானம் செய்கிறவர்களும் நிறைந்து காணப்படுகிறார்கள். வழிச்செலவே இல்லாமல் நடைப்பயணமாகவே இம்மாதிரி பல லட்சம் பக்தர்கள் பண்டரிபுரம் வந்து விட்டலனை தரிசித்துத் திரும்புகிறார்கள்.


‘‘சந்திரபாகா நதியில் ஸ்நானம் செய்து பாண்டுரங்க விட்டலனை தரிசனம் செய்தாலே நமது குறிக்கோள் எதுவாயினும் நிறைவேறிவிடும். பிறவி கடைத்தேறிவிடும்!’’ என்பது அவர்களுடைய அசைக்கமுடியாத நம்பிக்கை. பண்டரிபுரம் பாண்டுரங்க விட்டலும், வர்காரி சம்பிரதாயமும் மகாராஷ்டிர மக்களின் வாழ்வோடு இயைந்து, அவர்கள் பண்பிலே ஊறிவிட்ட ஒன்றாகும். பல குருமார்களின் பாதுகைகளை பல்லக்கில் சுமந்து பண்டரிபுரம் செல்லும் கடல் போன்ற மக்கள் வெள்ளம் இதை உறுதிப்படுத்துகிறது. 


மராத்திய இலக்கியத்தின் பெரும்பகுதி இந்த வர்காரி பக்தர்களின் பக்தி நெறியையும் விட்டலின் பெருமைகளையும் சார்ந்தே உள்ளது. அது மட்டுமா, சாதி பேதமில்லாமல், தொழில் வேறுபாடில்லாமல் இந்த பக்திநெறி பல நூற்றாண்டுகளாக மக்களின் மனத்தில் இடம் பெற்றிருக்கிறது என்றால் அது  விட்டலின் அருள்தான்! இப்படி நடைப்பயணமாக பல நூறு கிலோமீட்டர் நடந்து, லட்சோப லட்சம் பேர் விட்டலனைக் கண்டு தரிசிக்கும் ‘வர்காரி யாத்திரை’ போல் வேறெங்கும் இல்லை, காணவும் முடியாது. இது உலக வழிபாட்டு அதிசயங்களில் ஒன்றாகவே கருதப்படுகிறது.


ஸ்ரீ ருக்மணி சமேத ஸ்ரீ பாண்டுரங்க மஹராஜ் கி ஜெய் !!



No comments:

Post a Comment