நமது அறிவோம் ஆன்மீகம் குழுவில் இருந்து மகாளய அமாவாசை, நவராத்திரி பண்டிகை : புரட்டாசி மாதத்தில் வரும் விரதங்களும் பலன்களும் பற்றி அறிவோம்

 சென்னை: புரட்டாசி மாதம் செப்டம்பர் 17ஆம் தேதி வெள்ளிக்கிழமை பிறக்கிறது. புரட்டாசி மாதம் ராசிச் சக்கரத்தின் கன்னி மாதத்தில் வருகிறது. சூரியன் கன்னி ராசியில் பயணம் செய்வதால் கன்னி மாதம் என்றும் அழைக்கப்படுகிறது. புரட்டாசி மாதம் முன்னோர்கள் வழிபாடு, இறை வழிபாடு, சக்தி வழிபாடு என அனைத்து அம்சங்களையும் அடக்கியிருக்கிறது என்பதே. பித்ருக்களை வழிபடும் மகாளயம், பெண்களுக்கு மகிழ்ச்சி தரும் நவராத்திரி இவையும் சேர்ந்து புரட்டாசிக்குப் பெருமை சேர்க்கிறது. கடவுளுக்கு காணிக்கை மற்றும் நேர்த்திக்கடன்கள் செலுத்த புரட்டாசி மாதமே சிறந்த மாதமாகக் கருதப்படுகிறது. கன்னி மூலையில் அமைந்திருக்கும் விநாயகரை வழிபடுவது கூடுதல் பலன்களைத் தரும்.


புரட்டாசி மாதத்தில் சனிக்கிழமை மட்டுமின்றி திங்கள், புதன்கிழமையும் பெருமாள் வழிபாட்டுக்கு உகந்த நாட்களாகும். இந்த விரத வழிபாடுகள் மகாலட்சுமிக்கும் உகந்தவை. புனித மிக்க புரட்டாசி மாதத்தில் விரதங்கள் கடைபிடித்தால் அதிகம் புண்ணியம் கிடைக்கும். மகாலெட்சுமி விரதம், தசாவதார விரதம், கதளி கவுரிவிரதம், அநந்த விரதம், பிரதமை, நவராத்திரி பிரதமை, ஷஷ்டி, லலிதா விரதம் போன்றவை விசேஷமானவை.


புரட்டாசி மாதம் அதிக வழிபாடுகள் நடத்த வேண்டிய மாதமாகும். புரட்டாசி மாதம் வளர்பிறை சதுர்த்தி திதியில் சித்தி விநாயக விரதம் இருந்து வழிபட்டால் எதிரிகள் தொல்லை இல்லாமல் போய் விடும். புரட்டாசி மாதம் சங்கட ஹர சதுர்த்தி தினத்தன்று விநாயகரை நினைத்து விரதம் கடைபிடித்தால் சுகபோக வாழ்வு கிடைக்கும். புரட்டாசி மாதம் வளர்பிறை அஷ்டமி தினம் முதல் ஓராண்டுக்கு விநாயகருக்கு அருகம்புல் சார்த்தி அர்ச்சனை செய்து வழிபட்டால் உடல் வலிமை உண்டாகும். புரட்டாசி மாதம் பவுர்ணமி தினத்தன்று லட்சுமியை இந்திரன் வணங்குவதாக புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. அன்று வலம்புரி சங்கில் பசும்பால் ஊற்றி மலர்களால், அலங்கரித்து வழிபட்டால் சகல செல்வங்களும் வந்து சேரும். அம்மன் வழிபாட்டிற்கு உகந்த நவராத்திரி பண்டிகை கொண்டாடப்படுவதும் இந்த மாதத்தில்தான் புரட்டாசி மாதம் அமாவாசைக்கு மறுநாள் பிரதமை தொடங்கி தசமி வரை பத்து நாட்களும் விரதம் இருந்து அம்மனை வணங்குவதன் மூலம் அருளோடு பொருளும், தைரியம் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.


புரட்டாசி மாத முக்கிய விரத நாட்கள்


புரட்டாசி 01 வெள்ளிக்கிழமை ஏகாதசி திருவோணம் விஷ்ணு பரிவர்த்தன ஏகாதசி குரு ஜெயந்தி ஷடசீதி புண்ணியகாலம். பரிவர்த்தன ஏகாதசி விரதம் இருந்து பூஜை செய்தால் பிரம்மா, விஷ்ணு சிவபெருமானை வணங்குவதற்கு சமம். பரிவர்த்தன ஏகாதசி அன்று லட்சுமி பூஜையையும் செய்யலாம்.


புரட்டாசி 02 சனிக்கிழமை சனிப்பிரதோஷம் புரட்டாசி சனிக்கிழமை விரதம், பெருமாளுக்கு மா விளக்கு ஏற்றி படையல் போட்டு வணங்கலாம்.


புரட்டாசி 03 ஞாயிறு சதுர்த்தசி அனந்த விரதம் ஸ்ரீ நடராஜர் அபிஷேகம். அனந்த விரதம். புரட்டாசி மாத வளர்பிறை சதுர்த்தசியன்று கடைப்பிடிக்க வேண்டிய விரதம் இது. அன்று அதிகாலையில் நீராடி, தூய்மையான ஆடை அணிந்து, பூஜைக்குரிய இடத்தைப் பசுஞ்சாணத்தால் மெழுகி, கறுப்பைத் தவிர்த்து ஐந்து விதமான வண்ணங்களில் கோலம் போட்டு தீர்த்தக் கலசம் வைத்து அனந்த பத்மநாபனை தியானித்து பூஜை செய்ய வேண்டும்.

ஐந்து படி கோதுமை மாவில் வெல்லம் சேர்த்து, 28 அதிரசங்கள் செய்யவேண்டும். இவற்றில் பதினான்கை, வேதியர்களுக்குத் தந்து தாம்பூலம் மற்றும் தட்சிணை அளிக்க வேண்டும். மீதியை நாம் உண்ண வேண்டும். பூஜைக்குரிய பொருட்கள் அனைத்தும் பதினான்கு என்ற எண்ணிக்கையில் இருக்க வேண்டும். பக்தியுடன் இந்த விரதத்தைச் செய்தால், தீராத வினைகளெல்லாம் தீரும். அளவிட முடியாத ஐஸ்வரியங்கள் வந்து சேரும்.


புரட்டாசி 04 திங்கட்கிழமை பௌர்ணமி உமா மகேஷ்வரி விரதம் பௌர்ணமி பூஜை. சிவனின் அற்புத வடிவங்களில் உமா மகேஸ்வர வடிவமும் ஒன்று. சிவனோடு இணைந்து உமாமகேஸ்வரியின் வடிவமும் இணைவது சிவசக்தி தத்துவத்தை உணர்த்தும் அற்புத வடிவம். இவர்களை ஒரு சேரத் தியானித்து புரட்டாசியில் வரும் பௌர்ணமி தினத்தில் வழிபடுவதே உமாமகேஸ்வர விரதம்.


புரட்டாசி 05 செவ்வாய்க்கிழமை மகாளய பட்சம் ஆரம்பம். முன்னோர்கள் நம் வீடு தேடி வந்து நமக்கு ஆசி வழங்கும் தினமே மகாளய பட்ச காலமாகும். மகிமை வாய்ந்த மகாளய பட்ச காலத்தில் முன்னோர்களை நினைத்து வழிபட நன்மைகள் நடைபெறும்.


புரட்டாசி 08 வெள்ளிக்கிழமை மஹாபரணி சங்கடஹர சதுர்த்தி. மஹாபரணி என்பது புரட்டாசி மாதத்தில் மஹாளய பக்ஷத்தில் வரும் பரணி நக்ஷத்திரமாகும். இன்றைய தினம் யம தீபம் ஏற்றினால் குடும்பம் விருத்தியாகும். தொழில் முன்னேறும். திருமணத் தடைகள் விலகும். சொத்துகள் சேரும். அனைத்து விதத் தடைகளும் நீங்கி, வெற்றிகள் தானாகவே அமையும்.


புரட்டாசி 09 சனிக்கிழமை பெருமாள் விரதம் கிருத்திகை விரதம் இன்று முருகனுக்கும் பெருமாளுக்கும் விரதம் இருந்து வழிபடலாம்.


புரட்டாசி 11 திங்கட்கிழமை சஷ்டி விரதம். கபில சஷ்டி, சந்திர சஷ்டி. புரட்டாசி மாதத் தேய்பிறை சஷ்டியில், சூரியனை பூஜை செய்து, பழுப்பு வண்ணம் கொண்ட பசுமாட்டை ஆபரணங்களால் அலங்கரித்து பூஜிக்கும் விரதம் இது. காரிய வெற்றிகளைத் தரும் விரதமாகும்


புரட்டாசி 12 செவ்வாய்கிழமை மகாவியாதிபாதம் இந்த நாளில் மறைந்த முன்னோர்களுக்கு திதி தர ஏற்ற நாள்.


புரட்டாசி 13 புதன்கிழமை அஷ்டமி புதாஷ்டமி மத்யாஷ்டமி சம்புகாஷ்டமி. மகாலட்சுமி விரத முடிவு.

ஒவ்வொரு மாதமும் அஷ்டமி தினத்தன்று உண்ணா நோன்பு இருந்து சிவபெருமானை வழிபட்டால் எல்லா வளமும் பெற முடியும். புரட்டாசி மாதம் வரும் அஷ்டமிக்கு சம்புகாஷ்டமி என்று பெயர். அன்று தயிர் மட்டும் அருந்தி சிவபூஜை செய்தால் சகல சவுபாக்கியங்களையும் பெற முடியும்.


புரட்டாசி 14 வியாழக்கிழமை அவிதாவ நவமி: மகாளய பட்ச காலத்தில் வரும் நவமி திதிக்கு அவிதவா நவமி என்று பெயர். அவிதவா என்றால் கணவருடன் இருக்கும் சுமங்கலி என்று அர்த்தம். அதாவது சுமங்கலிகளுக்கு உரிய நன்னாள். அவிதவா பெண்கள் என்றால், சுமங்கலி என்று அர்த்தம். அப்படி சுமங்கலியாக இறந்தவர்களுக்காக, அவிதவா நவமி என்று சொல்லப்படுகிறது. இந்த நாளில் சுமங்கலிகளாக இறந்தவர்களுக்கு திதி தர்ப்பணம் அளிக்கலாம்.


புரட்டாசி 15 வெள்ளிக்கிழமை சுக்கிர ஜெயந்தி நவ கிரகங்களில் இன்று சுக்கிரன் அவதரித்த நாள். சுக்கிரஜெயந்தி நாளில் சுக்கிரனை வழிபடலாம்.


புரட்டாசி 16 சனிக்கிழமை ஏகாதசி அஜ ஏகாதசி பெருமாளுக்கு விரதம் இருக்கலாம். புரட்டாசி தேய்பிறையில் வரும் ஏகாதசி அஜா ஏகாதசி. நமக்கு திடீரென துன்பங்கள், மனக்கிலேசம், பிரச்சனைகள் ஆகியவைகளுக்கு முன் ஜென்மத்து வினைப் பயன்களே காரணம். அவைகளை அதன் பாதகங்களைக் குறைக்கக்கூடிய சக்தி கொண்டது இந்த அஜா ஏகாதசி விரதம். அரிசந்திரன் நாட்டை இழந்து, மனைவியை விற்று, சுடுகாட்டில் பிணங்களை எரித்து வாழ்ந்ததின் காரணம் அவன் முற்பிறவியில் செய்த பாவங்களே என்பதை அறிந்த கௌதம முனிவர் அரிச்சந்திரனை இந்த அஜா ஏகாதசி விரதம் கடைபிடிக்கச் சொன்னார். அப்படியே 9 வருடங்கள் இந்த விரதத்தை கடைபிடித்த அரிசந்தந்திரன் தன் கஷ்டங்களை எல்லாம் தீர்ந்து தன் நாட்டையும் மனைவி மக்களையும் மீண்டும் பெற்று நிம்மதி அடைந்தான். மற்ற ஏகாதசி விரதங்களைப் போலவே இதனையும் கடைபிடிக்க வேண்டும். பெருமாள் தோத்திரங்களைச் சொல்லும்போது 'என் முன் வினைப்பயனை அறுப்பாய் ஐயனே' எனவும் வேண்டிக் கொள்ளவும்.


புரட்டாசி 17 ஞாயிற்றுக்கிழமை கல்கி துவாதசி : தசாவதாரங்களின் மகிமையை இன்றைய தினம் பாராயணம் செய்ய வேண்டும்.


புரட்டாசி 20 திங்கட்கிழமை மகா திரயோதசி சோம பிரதோசம். சோம வாரம் எனப்படும் திங்கள் கிழமையில் சிவ வழிபாடு செய்தல் மிக விசேசம். அதுவும் அன்று பிரதோஷம் வேறு வந்தால் அன்று சிவ பூஜையும், பிரதோஷ காலத்தில் சிவன் கோவிலில் வழிபாடும் செய்தல் பல்கோடி புண்ணியத்தை தரவல்லது. குறிப்பாக ஜாதகத்தில் மதி சந்திரன் நல்ல நிலையில் இல்லாதவர்கள் சோம வார பிரதோஷம் அன்று சிவன் கோவில்களில் அர்ச்சனைக்கு வில்வம் அளித்து வழிபட்டால் உங்கள் ஜாதகத்தில் உள்ள மதி மட்டுமல்ல உங்கள் மதியும், புத்தியும் நன்றாகும்.


புரட்டாசி 20 புதன்கிழமை மஹாளய அமாவாசை புரட்டாசி மாத அமாவாசை மஹாளய அமாவாசையாக கடைபிடிக்கப்படுகிறது. முன்னோர்களை வழிபட ஏற்ற நாள். புரட்டாசி மாதம் மகாளய அமாவாசை அமாவாசை தினத்தன்று பிறந்தவர்கள் ஆராய்ச்சிகள் செய்வதில் ஆர்வம் மிக்கவர்களாக இருப்பார்கள்.


புரட்டாசி 21 வியாழக்கிழமை நவராத்திரி பூஜை ஆரம்பம். அன்னை சக்தி கடும் தவமிருந்து சண்ட முண்டர்களையும் ரக்த பீஜனையும், சும்ப நிசும்பர்களையும் தன் மூன்று அம்சங்களால் அழித்தாள். அன்னைக்குச் சக்தி கொடுத்த அனைத்து தேவர்கள், முனிவர்கள், தெய்வங்கள் எல்லாம் சக்தியை கொடுத்துவிட்டு பொம்மைபோல் நின்ற நிகழ்வைச் சித்தரிக்கும் விதமாகவே கொலு வைக்கும் பழக்கம் வந்தது. புரட்டசி சுக்லபட்ச பிரதமையில் ஆரம்பித்து நவமி திதியில் முடியும் ஒன்பது இரவுகளே நவராத்திரி. அசுரர்களை வதம் செய்வதற்காக பகல் நேரத்தில் அவர்களுடன் போரிடும் அம்பிகை ஒய்வெடுக்கும் இரவு நேரத்தில் அம்பிகையை உற்சாகமூட்டும் விதமாகத் துதித்து போற்றிடும் தினங்களே நவராத்திரி. துர்க்கை வடிவாக முதல் மூன்று நாட்களும், அடுத்த 3 நாட்கள் மகாலட்சுமி வடிவாகவும், கடைசி 3 நாட்கள் ஞானத்தின் திருவுருவமாக சாத்வீக சரஸ்வதி தேவியாகவும் வழிபடுகின்றோம்.


புரட்டாசி 25 திங்கட்கிழமை வளர்பிறை சஷ்டி சரஸ்வதி ஸ்தாபனம். லலிதா விரதம்: புரட்டாசி மாத வளர் பிறை சஷ்டியில் பரமேஸ்வரியைக் குறித்து கடைப்பிடிக்கப்படும் விரதம் இது. இந்த விரதம் சர்வமங்கலங்களையும் அருளச் செய்வாள் அன்னை பரமேஸ்வரி.


புரட்டாசி 26 செவ்வாய்கிழமை சப்தமி சரஸ்வதி சப்தமி.


புரட்டாசி 27 புதன்கிழமை அஷ்டமி புதாஷ்டமி, துர்க்காஷ்டமி, மஹாஷ்டமி, பத்ரகாளி அவதார தினம்.


புரட்டாசி 28 வியாழக்கிழமை மஹா நவமி ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜை. கல்விக்கடவுளாம் சரஸ்வதி தேவியை வழிபட கல்வி வளம் பெருகும். தொழில் வளம் பெருக வேலை செய்யும் இடங்களில் பூஜை செய்ய ஏற்ற நாள்.


புரட்டாசி 29 வெள்ளிக்கிழமை விஜயதசமி, புதிய காரியங்கள் தொடங்க கல்வி கற்க நல்ல நாள்


புரட்டாசி 30 சனிக்கிழமை ஏகாதசி பாபாங்குச ஏகாதசி: புரட்டாசி மாதம் சுக்ல பக்ஷத்தில் வரும் ஏகாதசிக்கு பாபங்குச ஏகாதசி எனப் பெயர். இந்த ஏகாதசி விரதம் இரு விதமான நன்மைகளை தர வல்லது. ஒன்று முக்தியாகும். மற்றொன்று இந்த உலக வாழ்வில் சுகமும் வளமும் ஆகும். பாபங்குச ஏகாதசி விரதம் பத்மநாப ஏகாதசி எனவும் அழைக்கப்படுகிறது. இந்த விரதம் இருப்பதன் மூலம் இந்திரன் மற்றும் வருணனின் வரத்தை பெறலாம். நமக்கு எந்த விதத்திலும் தண்ணீர் பற்றாக்குறை வராது. நமது வீட்டில் இருக்கும் கிணறு, ஆழ் குழாய்களில் தண்ணீர் வற்றாமல் பெருக்கெடுக்கும்.


புரட்டாசி 31 ஞாயிற்றுக்கிழமை மதன துவாதசி பத்மநாப கோ துவாதசி. இன்றைய தினம் பத்மநாபசுவாமியை வணங்கி வழிபட நன்மைகள் நடைபெறும்.


ஜாதக அமைப்பின்படி சனி, புதன் திசை நடப்பவர்கள் நல்லெண்ணெய் தீபம் போட்டு வழிபட தடைகள் அனைத்தும் நீங்கும். பாவங்கள் நீங்கி புண்ணியமும் சுபயோக சுபங்களும் கூடி வரும். எமபயம் நீங்கவும், துன்பங்கள் விலகவும் புரட்டாசி மாதத்தில் காக்கும் கடவுளான மகா விஷ்ணுவை வணங்கலாம்.


No comments:

Post a Comment