சிவனை மமலேஷ்வர் & ஓம்காரேஷ்வர் என்ற இரு வடிவங்களில் நர்மதையின் இருகரைகளிலும் இரு கோயில்களில் அமைத்துள்ளார்கள். அங்கே இரு கரைகளிலும் அமைத்திருக்கும் இரு கோயில்களையும் பாலம் மூலமும் படகு மூலமும் சென்று தரிசிக்க முடியும்.
சிவபுரி /மாண்டாதா என்னும் தீவில் அமைந்திருக்கிறதாம் இக்கோயில்கள். இத்தீவின் வடிவம் இந்துக்கள் புனிதமாகக் கருதும் ஓம் என்ற வடிவத்தில் அமைந்திருக்கிறதாம்.
உஜ்ஜயினியிலிருந்து 133 கிமீ தூரம். சிவன் இரு பாகங்களாக இங்கே கோயில் கொண்டுள்ளார். இதற்கு மூன்று விதமான ஸ்தல புராணக் கதைகள் கூறப்படுகின்றன.மேருமலையுடன் விந்திய பர்வதம் போட்டி போட்டு அங்கே ஸ்தாபிக்கப்பட்ட சிவலிங்கத்துடன் வளர ஆரம்பிக்க அதை சிவன் அகஸ்தியர் மூலம் ஆற்றுப்படுத்துதல் ஒரு கதை. இன்னொரு கதையில் இஷுவாகு வம்ச அரசன் மாந்தாதா மற்றும் அவனது புதல்வர்கள் அம்பரீஷ் , முசுகுந்த சக்கரவர்த்திகள் இங்கே சிவனை நினைத்துத் தவம் செய்து சுயம்பு ஜோதிர்லிங்கம் தோன்ற வேண்டினார்களாம். மூன்றாவது கதையில் தேவாசுர யுத்தத்தில் தேவர்கள் பிரார்த்தனைக்குச் செவிசாய்த்து ஈசன் இங்கே ஜோதிர்லிங்கமாகத் தோன்றினாராம்.
இங்கே மமலேஷ்வர் கோயிலில் சிறு லிங்க வடிவில் நர்மதையின் அக்கரையில் தமிழக கோயில்கள் போல அமைந்து கோயில் கொண்டுள்ளார். . வரிசையாகக் கடைகள். எங்கு பார்த்தாலும் மழை காரணமாக ஈரம் வேறு. ஓம்காரேஸ்வரர் கோயிலில் ஸ்பெஷல் தர்ஷன் செய்ய தனிக்கட்டணம். மமலேஷ்வரை/அமரேஷ்வரை வணங்கிவிட்டுத் தொங்குபாலம் வழியாக வந்து பாறையை ஒட்டிய நடைபாதையில் மாபெரும் நதியைப் பார்த்து நடப்பது பரவச அனுபவம்.
பூஜை செய்ய பண்டாக்கள் போட்டிபோடுகிறார்கள். குடும்பத்துக்கு பூஜை செய்ய இவ்வளவு (₹-100)என்று சொல்லி ஒரு தட்டில் பூ ,விளக்கு, திரி, தீப்பெட்டி, சிவப்புக் கயிறுகள் பூஜை சாமான்களோடு ஆஜராகி காயத்ரி மந்திரம் எல்லாம் சொல்லச் சொல்லி விரல்களில் சின்முத்திரை பிடிக்கச் சொன்னார் பண்டா. அதன்பின் பூஜை செய்து , சாமி தரிசனமும் செய்வித்தார். எல் போலத் திரும்பும் ஒரு சின்ன இடத்தில் கோயில் கொண்டுள்ளார் ஓம்காரேஷ்வர்.
No comments:
Post a Comment