SWAMY SARANAM.. GURUVE SARANAM.....POOJA AT SANNIDHANAM

 



#திருவாமத்தூர்
நடுநாட்டு தேவாரபாடல்பெற்ற சிவஸ்தலங்களில் முதலாவதாக தரிசனம் செய்ய ஸ்தலம் திருவாமத்தூர்.
ஆதி காலத்தில் பசுக்கள் கொம்பில்லாமல் படைக்கப்பட்டிருந்தன. தெய்வப் பசுவாகிய காமதேனுவும் மற்ற ஆனிரைகளும் தங்களை அழிக்க வரும் சிங்கம், புலி முதலிய மிருகங்களிடம் இருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ள கொம்புகள் வேண்டும் என்று நந்திதேவரிடம் முறையிட்டன. நந்திதேவரும் அவைகள் வேண்டுவது சரியே என்று கூறி பம்பை நதிக்கரையிலுள்ள வன்னி வனத்தில் சுயம்பு மூர்த்தியாக இருக்கும் அபிராமேஸ்வரர் என்ற பெயருடன் விளங்கும் சிவபெருமானை வணங்கி வழிபடும்படி கூறினார். அவ்வாறே பசுக்களும் பல நாள் தவம் செய்து கொம்புகள் பெற்றன. ஆக்கள் (பசுக்கள்) பூஜித்த காரணத்தால் இத்தலம் ஆமாத்தூர் என்று பெயர் பெற்றது. இந்த திரு ஆமாத்தூர் தலத்தை யார் புகழ்ந்து பேசினாலும் அல்லது மற்றவர்கள் புகழக் கேட்டாலும் அவர்களுக்கு நன்மை கிடைக்கும் என்று தல புராண வரலாறு கூறுகிறது. இத்தலத்தில் உள்ள சிவாலயம் தலம், மூர்த்தி, தீர்த்தம் ஆகிய மூன்றினாலும் சிறப்புடையது.
அபிராமேஸ்வரர் என்றும் அழகிய நாதர் என்றும் வழங்கும் இத்தலத்து இறைவன் ஒரு சுயம்பு மூர்த்தியாவார். பசுக்கள் பூஜை செய்ததின் அடையாளமாக சுயம்பு லிங்கத்தின் மேல் சந்திரனின் பிறை போல் வளைந்து பசுவின் கால் குளம்பின் சுவடு தென்படுகிறது. இறைவன் சற்று இடப்புறம் சாய்ந்து காணப்படுகிறார். மூலவர் சந்நிதியும் இறைவியின் சந்நிதியும் ஒன்றையொன்று எதிர் நோக்கியவாறு அமைந்துள்ளது. அம்பிகையின் ஆலயத்திற்குப் பெரிய கோபுரம் உண்டு. ஆலயம்இரண்டு பிரகாரங்கள் கொண்டது. அச்சுதராயர் என்றவர் இந்த ஆலயத் திருப்பணி செய்தவர்களில் முதன்மையானவர். அவரின் சிலை முதல் பிரகாரத்தில் வடகிழக்கு மூலையில் அமைந்திருக்கிறது. இரண்டாம் பிரகாரத்தில் இராமர், முருகன், திருமகள் ஆகியோர் சந்நிதிகள் இருக்கின்றன. மதங்க முனிவரால் உருவாக்கப் பெற்ற தீர்த்தம் ஆலயத்தின் உள்ளே அமைந்துள்ளது. இதில் நீராடாமல், நீரை எடுத்து தலையில் தெளித்துக் கொண்டாலே சிவபுண்ணியம் கிட்டும் என்பது ஐதீகம்.
வட்டப் பாறை: அம்பிகை சந்நிதியின் பிரகாரச் சுற்றில் தென் புறம் ஒரு வட்டப் பாறை இருக்கிறது. அருகில் ஒரு சிவலிங்கம் உள்ளது. இராமாயணத்தில் வாலியைக் கொல்வதற்கு முன் இராமபிரானும், சுக்ரீவனும் அனுமன் சான்றாக நட்பு கொண்டபோது இந்த வட்டப் பாறை முன் உடன்பாடு செய்துகொண்டதாக புராண வரலாறு கூறுகிறது. ஊரில் உள்ள எல்லோரும் வட்டப் பாறையின் மீது கை வைத்து சத்தியம் செய்து தங்கள் வழக்குகளை தீர்த்துக் கொள்ளும் வழக்கம் நடைமுறையில் இருக்கிறது. இந்த வட்டப் பாறை ஒரு சிறிய சந்நிதி. இதன் முன் பொய் சொல்வோர் மீளாத துன்பத்திற்கு ஆளாவார்கள் என்று ஐதீகமுண்டு.
தேவார மூவர் என்று எல்லோராலும் போற்றப்படும் திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், சுந்தரர் ஆகிய மூவராலும் பாடல் பெற்ற சிவஸ்தலங்களில் திரு ஆமாத்தூர் தலமும் ஒன்றாகும்.


No comments:

Post a Comment