சுவாமி சரணம். குருவே சர்ணம்...இன்றைய பூஜை பன்வெல்..17-2-22

 

பாடல் பெற்ற சிவாலயம்  

பவானி

 புராணப்பெயர் 
திருநணா
 மூலவர்
சங்கமேஸ்வரர்
 தாயார்
வேதநாயகி
 தல விருட்சம் 
இலந்தை மரம்
 தீர்த்தம் 
 காவிரி, பவானி, அமிர்தநதி, சூரிய, சக்கர, தேவ தீர்த்தம் 
 பாடல் வகை 
 தேவாரம்
 பாடியவர்கள் 
  திருஞானசம்பந்தர்

 தலவரலாறு

   வடக்கு திசைக்கு அதிபதியான குபேரன் பூலோகத்தில் உள்ள புனித தலங்களை தரிசிக்க விரும்பினான். அவன் ஒவ்வொரு தலங்களாக சென்று தரிசித்த பின் இத்தலத்திற்கு வந்தான். இங்கு யோகிகள், ஞானிகள், முனிவர்கள், கந்தர்வர்கள் ஆகியோர் தவம் செய்வதையும் கண்டான். அத்துடன் மான், பசு, புலி, யானை, சிங்கம், நாகம், எலி ஆகிய அனைத்து உயிரினங்கள் சண்டையின்றி ஒன்றாக நீர் அருந்துவதுடன், தவம் செய்பவர்களுக்கு தொந்தரவு கொடுக்காமல் இருப்பதையும் பார்த்த குபேரன் மிகுந்த ஆச்சரியமடைந்தான். இந்த இடத்தில் தெய்வீக சக்தி இருப்பதை அறிந்து அவனும் இறைவன் தரிசனம் வேண்டி தவம் செய்தான். இவனது தவத்திற்கு மகிழ்ந்த சிவனும் திருமாலும் குபேரனுக்கு தரிசனம் தந்தார்கள். அத்துடன் சிவபெருமான் அங்கிருந்த இலந்தை மரத்தின் கீழ் சுயம்புவாக தோன்றி அருள்புரிந்தார்.
அப்போது அசரீரி தோன்றி, ”குபேரனே! வேண்டும் வரம் கேள்” என்றது. “இறைவா! உனது பெயரான அளகேசன் என்ற பெயரால் இத்தலம் விளங்கி, உன்னை நாடி வரும் பக்தர்களுக்கு வேண்டும் வரம் தந்தருள வேண்டும்” என வேண்டினான். அன்றிலிருந்து இத்தலம் “தட்சிண அளகை" என்ற பெயர் பெற்றது. திருமாலும் சிவனுக்கு இடப்பக்கம் ஆதிகேசவப்பெருமாள் என்ற திருநாமத்துடன் எழுந்தருளியுள்ளார்.

ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆண்டுவந்த காலத்தில் வில்லியம் காரோ என்பவர் பவானி பகுதிக்கு கலெக்டராக இருந்தார். அம்பிகை வேதநாயகியின் பெருமையையும் அழகையும் மக்கள் வியந்து பேசுவது கண்ட காரோ தாமும் அம்பிகையைக் காண விரும்பினார்.
இந்துக்கள் மட்டுமே கோவிலுக்குள் செல்லலாம் என்பதால், மதில் சுவரில் சாளரம் போன்று மூன்று துளைகளைச் செய்து காரோ அதன் மூலம் அம்பிகையைக் காண வழி செய்தனர். காரோவும் அம்பிகையை அச்சாளரத்தின் மூலம் தினந்தோறும் கண்டு வழிபட்டு வந்தார். (அந்தத் துளைகள் இன்றுமுள்ளன)
ஒருமுறை காரோ தனது இல்லத்தின் மாடியில் உறங்கிக் கொண்டிருந்தபோது அம்பிகை வேதநாயகியைப் போன்று வடிவமுடைய பெண் ஒருத்தி அவரைத் தட்டி எழுப்பி கையைப் பற்றி விரைவாக வெளியே அழைத்துச் சென்றது போன்ற உணர்வு ஏற்பட்டு திடுக்கிட்டு விழித்து எழுந்த காரோ பரபரப்புடன் மாடியிலிருந்து கீழே ஓடினார். அடுத்த நிமிடமே காரோ குடியிருந்த இல்லத்து மாடி இடிந்து கீழே விழுந்தது. தான் பிழைத்தது அம்பிகையின் அருள் என்று போற்றி, அம்பிகைக்கு தந்தத்தால் ஆன கட்டில் செய்து காணிக்கையாக  அளித்தார். அதில் தனது கையொப்பமும் இட்டார். இச்சம்பவம் நடந்தது 1804ம் வருடம் ஜனவரி மாதம் 11ம் நாள் ஆகும்.

 ஆலய அமைப்பு

    பவானியும் காவிரியும் கூடும் இடத்தில் வடகரையில் சுமார் 4 ஏக்கர் பரப்பளவில் இந்த கோவில் அமைந்துள்ளது. கோவிலுக்கு இரண்டு வாயில்கள் உள்ளன. கோவிலின் பிரதான ராஜகோபுரம் வடக்கு திசையில் ஐந்து நிலைகளையும் 7 கலசங்களையும் உடையதாக அமைந்துள்ளது. ராஜகோபுரத்தின் எதிரே வெளிப்புறம் நந்தி மண்டபம் உள்ளது.  இந்தக் கோவிலில் சங்கமேஸ்வரர், வேதநாயகி சந்நிதிகள் மட்டுமன்றி ஆதிகேசவப் பெருமாளுக்கும் சௌந்திரவல்லி தாயாருக்கும் சந்நிதிகள் அமைந்து சைவ வைணவ ஒற்றுமைக்கு ஒரு எடுத்துக்கட்டாக விளங்குகிறது. இத்தல விநாயகர் சங்கம விநாயகர் என்ற திருநாமத்துடனும் அருள்பாலிக்கின்றனர்.
வேதநாயகியின் சந்நிதி கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. இந்த சந்நிதியின் வலப்பக்கம் சுப்பிரமணியர் சந்நிதி அமைந்துள்ளது. சுப்பிரமணியர் சந்நிதியைக் கடந்து சென்றால் இந்தக் கோவிலின் மூலவரான சங்கமேஸ்வரர் கோவில் உள்ளது. மூலவர்  சுயம்பு மூர்த்தியாக கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார்.
சிவன் சன்னதிக்குப்பின்னால் பஞ்ச பூத லிங்கங்கள் உள்ளன.
 சுப்பிரமணியக் கடவுளாம் முருகனுக்கு அம்பாள் மற்றும் சுவாமி சந்நிதிக்கு நடுவில் சந்நிதி அமந்திருப்பது இந்தக் கோவிலின் சிறப்பம்சம். 
கோவிலின் தென்மேற்கு மூலையில் உள்ள தல விருட்சம் இலந்தை மரம் தனி சிறப்பு கொண்டது. வேதமே மரவடிவெடுத்து வந்திருப்பதாக ஐதீகம். இங்கு தான் குபேரனுக்கு சிவபெருமான் சுயம்பு மூர்த்தியாக தரிசனம் தந்துள்ளார். இத்தலத்தில் உள்ள முருகப்பெருமானை அருணகிரிநாதர் தனது திருப்புகழில் பாடியுள்ளார். முருகன் சந்நிதிக்கு அருகில் ஜ்வரஹரேஸ்வரர் திரு உருவம் மூன்று கால்கள், மூன்று கைகள், மூன்று தலைகளுடன் காணப்படுகிறது. கோவிலின் தெற்குப் பக்கம் 63 நாயன்மார்கள் திரு உருவங்கள் உள்ளன.
 சனீஸ்வர பகவானுக்கு தனி சந்நிதி உள்ளது. இங்கு பெருமாள் ஆதிகேசவப்பெருமாள் என்ற திருநாமத்துடனும், தாயார் சவுந்தரவல்லி என்ற திருநாமத்துடனும் அருள்பாலிக்கின்றனர். பெருமாளுக்கும் தாயாருக்கும் நடுவே யோகநரசிம்மர் லட்சுமியுடன் சாந்தமாக அருளுகிறார். 
பிற தெய்வங்களின் சன்னதிகளுடன் அமைந்த அழகிய ஆலயம். 
      
 அமைவிடம் 

ஈரோட்டில் இருந்து சுமார் 15 கி.மீ. 
தொலைவில் அமைந்துள்ளது இவ்வாலயம். பேருந்து வசதி உள்ளது.
   
 ஆலய முகவரி

 
அருள்மிகு சங்கமேஸ்வரர் திருக்கோயில்,  பவானி,
ஈரோடு மாவட்டம்.
 638 301. 

இவ்வாலயம் தினமும் காலை 6 மணி முதல் 1 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் திறந்திருக்கும்.
 
 சிறப்பு

குபேரனுக்கு சிவபெருமான் சுயம்பு மூர்த்தியாக தரிசனம் தந்த தலம்.

இக்கோவிலில் உள்ள அமிர்தலிங்கேஸ்வரர் சந்நிதி சிறப்புடையதாகும். லிங்கத்தின் பாணப் பகுதியை எடுத்து இடையில் வைத்துக் கொண்டு ஆவுடையாரை வலம் வர குழந்தை இல்லாதவர்களுக்கு மகப்பேறு ஏற்படும் எனபது மக்களின் நம்பிக்கையாகும்.

ரதசப்தமிக்கு மூன்றாவது நாள் சூரியனின் ஒளி சங்கமேஸ்வரர், வேதநாயகி, சுப்ரமணியர் மீது விழுகிறது. 

வேணுகோபாலர் சன்னதிக்கு பின்புறத்தில் 
 ஒரு உடல், இரண்டு தலைகளுடன் பசு ஒன்றின் சிற்பம் காட்சியளிப்பது வித்தியாசமாக உள்ளது. 

அகால மரணமடைந்தவர்களுக்காக “நாராயணபலி" பூஜை செய்யப்படுகிறது. 

இது சோமாஸ்கந்த அமைப்பு கோயிலாகும்.

மூன்று நதிகள் சங்கமிப்பதால் இத்தலம், “தென்திரிவேணி சங்கமம்" என அழைக்கப்படுகிறது. 

பிறப்பு முதல் இறப்பு வரையிலுள்ள அனைத்து தோஷங்களுக்கும் இங்கு பரிகாரம் செய்யப்படுகிறது.

கோபுரமே லிங்கமாக வழிபடப்படுவதால், கோபுரத்திற்கு வெளியே நந்தி உள்ளது.

சைவ - வைணவ ஒற்றுமைக்கு  எடுத்துக்கட்டாக விளங்கும் ஆலயம்









No comments:

Post a Comment