திருச்சியிலிருந்து (லால்குடி) 45 நிமிட பயணத்தில் நாங்கள் 5வது திவ்யதேசமாக திருவெள்ளறையை அடைந்தோம் வாசலில் இறங்கினால் ஒரு பெரிய மொட்டை கோபுரம் நம்மை வரவேற்கிறது. அந்தக் கால செங்கல்களால் அமைக்கப்பட்ட இந்த கோபுரம் முழுமை அடைந்திருந்தால் திருவரங்கத்தின் ராஜ கோபுரத்தினைவிட பெரியதாக இருந்திருக்கும் என நினைக்கிறேன். அத்தனை அகலமான ஒரு மொட்டை கோபுரம். அந்த மொட்டை கோபுரத்தின் முன்னே பதினெட்டு படிகள் – பகவத் கீதையின் பதினெட்டு அத்தியாயங்களை இவை குறிப்பதாகச் சொல்கிறார்கள். இந்தக் கோபுரத்தினைத் தாண்டினால் மற்றொரு சிறிய கோபுரம் – ஆனால் முழுமையான கோபுரம். இந்தக் கோபுரத்தின் கீழே நான்கு படிகள் – இவை நான்கு வேதங்களைக் குறிப்பதாகச் சொல்வார்கள். அதன் பிறகு உள்ளே சென்றால் பலிபீடம் – அதை வலம் வந்து முன்னே சென்றால் – ஐந்து படிகள் – அவை பஞ்ச இந்த்ரியங்களைக் குறிப்பதாகச் சொல்வார்கள். இக்கோவிலில் வீற்றிருக்கும் இறைவனைக் காண இரண்டு வாயில்கள் உண்டு – உத்தராயண வாயில் மற்றும் தக்ஷிணாயன வாயில். தை முதல் ஆணி வரை உத்தராயண வாயில் வழியாகவும் ஆடி முதல் மார்கழி வரையிலான மாதங்களில் தக்ஷிணாயன வாயில் வழியாகவும், பெருமாளை தரிசிக்கச் செல்லவேண்டும். இந்த வழிகளிலும் 21 படிகள் உண்டு. படிகளில் முன்னேறினால் இதோ கோவில் வந்துவிட்டது. இங்கே தான் செந்தாமரைக் கண்ணனான புண்டரீகாக்ஷன் கோவில் கொண்டிருக்கிறார். தனிச் சன்னதியில் குடி கொண்டிருக்கிறார் செண்பகவல்லி எனும் செங்கமலவல்லி. இவரை பங்கயச் செல்வி என்றும் அழைப்பதுண்டு. இவர்களைத் தவிர சக்கரத்தாழ்வார், ஹனுமான், உடையவர் ஆகியோருக்கும் தனிச் சன்னதி உண்டு. திருவரங்கம் கோவிலை விட பழமை வாய்ந்த கோவில் இது என்பதால் ஆதி வெள்ளரை என்றும், இவ்வூரில் குடியிருந்த புண்டரீகன் எனும் யோகி ஒரு நந்தவனம் அமைத்து அதில் துளசிச் செடிகளை வளர்த்து, அவற்றால் இறைவனைப் பூஜிக்க, அதில் மகிழ்ந்த விஷ்ணு அவருக்கு காட்சி தந்ததாகவும் கதை. புண்டரீகன் எனும் யோகிக்கு காட்சி தந்ததால் இத்திருத்தலத்தில் இருக்கும் பெருமாளுக்கு புண்டரீகாக்ஷப் பெருமாள் எனும் பெயர் வந்ததாகவும் சொல்வதுண்டு.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment