நெல்லுக்கு வேலியிட்ட இறைவன்!
|
)
'அல்வா’வுக்குப் பெயர்பெற்ற திருநெல்வேலி ஆன்மிகம் வளர்க்கும் பூமியும்தான்! இங்கே ஸ்ரீநெல்லையப்பராகக் கோயில் கொண்டுள்ளார் இறைவன் சிவபெருமான். வீடு வீடாகச் சென்று நெல் சேகரித்து, இவருக்கு தினமும் நைவேத்தியம் செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார் வேதபட்டர் என்பவர். ஒருநாள், அவ்வாறு சேகரித்த நெல்லை வெயிலில் உலர வைத்துவிட்டு, தாமிரபரணியில் நீராடச் சென்றார். அந்த நேரம் பெருமழை பெய்ய... 'நைவேத்தியம் செய்ய வேண்டிய நெல் மழையில் நனைந்துவிடுமே...’ என்று பதற்றத்தில் ஓடிவந்தார் பட்டர். என்ன ஆச்சரியம்...! அவர் உலர வைத்திருந்த நெல்மணிகளைச் சுற்றி மழை பெய்து, நீர் ஓடிக்கொண்டிருக்க... நெல் இருந்த பகுதியில் மட்டும் சுள்ளென்று வெயில் அடித்துக் கொண்டிருந்தது. நெல்லுக்கு வேலி அமைத்த ஈசனின் இந்த திருவிளையாடலே 'திருநெல்வேலி’ என்ற பெயருக்கும், 'நெல்லையப்பர்’ என்கிற இத்தலத்து இறைவனின் பெயருக்கும் காரணமானது.
சிறப்புத் தகவல்கள்...
ஸ்ரீநெல்லையப்பர் சந்நிதிக்கு அருகில் உள்ள தனிச் சந்நிதியில், பள்ளிகொண்ட ஆனந்த சயன பெருமாள் தரிசனம் தருகிறார். சிவலிங்க பூஜை செய்தபடி இருக்கும் இவருக்கு அருகில் காணப்படும் உத்ஸவரான பெருமாள், மார்பில் சிவலிங்கத்துடன் தரிசனம் தருகிறார். தன் தங்கையை மணந்த சிவபெருமானை, தமது மார்பில் தாங்கினார் எனும் ஐதீகத்தால் பெருமாளுக்கு இப்படியரு திருக்கோலம்.
நதியே நதியில் நீராடும் அதிசயம் நெல்லை திருத்தலத்தின் தனிச்சிறப்பு. நெல்லையப்பர் கோயிலில் நாயன்மார் சந்நிதிக்கு அருகில் தாமிரபரணி நதி, பெண் உருவில் காட்சி தருகிறாள். ஒவ்வொரு ஆண்டும் சித்ரா பவுர்ணமி, ஆவணி மூலம் மற்றும் தைப்பூசத்தின்போது இவள் தாமிரபரணிக்கு எழுந்தருளி நீராடுவாள். பொதுவாக தாமிரபரணியில் நீராடுவது, பாவங்களை நீக்கிப் புண்ணியம் சேர்க்கும் என்பார்கள். அந்த உண்மையை உணர்த்தவே இந்த வைபவம் நிகழ்த்தப்படுகிறது என்பர்.
|
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment