கல்யாண வரம் தரும் மாப்பிள்ளை ஸ்வாமி!
|
திருவீழிமிழலை திருத்தலம் சைவ திருக்கோயில்களில் மூர்த்தி, தலம், தீர்த்தம் மூன்றிலும் சிறப்பு பெற்ற தலங்கள் பல உண்டு. அவற்றில் திருவீழிமிழலை தலமும் ஒன்று. பாடல்பெற்ற ஸ்தலமான பெருமைக்கு உரிய இந்தக் கோயிலுக்கு வந்து மனதாரப் பிரார்த்தித்துக் கொண்டால், திருமண பாக்கியம் விரைவில் கைகூடும் என்கின்றனர் பக்தர்கள்.
காவிரி தென்கரையில் உள்ள இந்தத் திருத்தலம், கும்பகோணத் தில் இருந்து சுமார் 25 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இங்கே ஸ்வாமியின் திருநாமம்- ஸ்ரீ வீழிநாதர். அம்பாள்- ஸ்ரீசுந்தர குசாம்பிகை. திருமணப் பரிகாரத் தலங்களில் முக்கியமான தலம் என்று போற்றிப் புகழ்கின்றனர், பலன் பெற்ற பக்தர்கள்.
இங்கே... உத்ஸவர் ஸ்ரீகல்யாணசுந்தரமூர்த்தி, அம்பிகையுடன் திருமணக் கோலத்தில் அழகும் அற்புதமும் நிறைந்து காட்சிதருகிறார். அதனால் இவருக்கு மாப்பிள்ளை ஸ்வாமி என்றே திருநாமம் அமைந்ததாகச் சொல்கிறது, ஸ்தல புராணம்.
திருமணத் தடையால் கலங்கித் தவிக்கும் ஆண்களும் பெண்களும் இங்கே மாப்பிள்ளைக் கோலத்தில், மாப்பிள்ளை ஸ்வாமியாகக் காட்சி தரும் உத்ஸவரை கண்ணாரத் தரிசித்தல் சிறப்பு. உத்ஸவர் ஸ்ரீகல்யாண சுந்தரேஸ்வரருக்கும் அம்பிகைக்கும் மாலை சார்த்தி, அர்ச்சித்து வழிபட வேண்டும்.
அதையடுத்து தொடர்ந்து 45 நாட்கள், தினமும் காலையில் எழுந்து, குளித்து முடித்ததும்,
தேவந்திராணி நமஸ்துப்யம்
தேவந்திரப்ரிய பாமினி விவாஹ பாக்யமாரோக்யம்
என்று துவங்கும் ஸ்லோகத்தைப் பாராயணம் செய்யவேண்டும். தினமும் காலையில் மட்டுமின்றி, மாலையிலும் பாராயணம் செய்து வந்தால், விரைவில் மாங்கல்ய வரம் கிடைக்கும்; வீட்டில் கெட்டிமேளச் சத்தம் கேட்கும் என்பது ஐதீகம்.
கருவறை, அர்த்த மண்டபம் மற்றும் மகா மண்டபம் ஆகியவற்றுடன் மிகப் பிரமாண்டமாகத் திகழ்கிறது கோயில். கருவறையில், மூலவர் லிங்க வடிவில் காட்சி தர... சிவனாரும் பார்வதியும் அழகிய திருமேனியுடன் உள்ளே மணக்கோலத்தில் தம்பதி சமேதராகக் காட்சி தருகின்றனர்.
கிழக்கு நோக்கிய ஆலயம். எனவே, இந்தத் தலத்துக்கு வந்து வேண்டினால், வாழ்க்கையில் விடியல் நிச்சயம் எனப் பூரிப்புடன் தெரிவிக்கின்றனர் பக்தர்கள்.
சுந்தரரும் திருஞானசம்பந்தரும் பாடிப்பரவிய திருத்தலம். கோயிலுக்கு எதிரில் தீர்த்தக்குளம் உள்ளது. இதை விஷ்ணு தீர்த்தம் என்கின்றனர். ஸ்ரீமகாவிஷ்ணு, 1008 தாமரை மலர்களைக் கொண்டு, சிவனாரை பூஜித்து வணங்கி வரம்பெற்ற தலம் என்கிறது ஸ்தல புராணம்.
கோயிலின் உள்ளே 118 தூண்களைக் கொண்ட திருக்கல்யாண மண்டபம் அழகுற அமைந்துள்ளது. சித்திரையில் பத்து நாள் விழா இங்கே வெகு விமரிசையாக நடைபெறுகிறது. விழாவில் தினமும் ஒவ்வொரு அலங்காரத்தில், இறைவனும் இறைவியும் இந்த திருக்கல்யாண மண்டபத்தில் காட்சி தருவதைத் தரிசித்தாலே திருமணம் முதலான சகல வரங்களும் கிடைக்கப் பெறலாம் என்பது ஐதீகம்.
ஸ்ரீமகாவிஷ்ணு 1008 தாமரை மலர்களைக் கொண்டு சிவனாரை அர்ச்சிக்கிற வேளையில் ஒரு பூ குறைந்ததாம். அதனால், தன் கண்மலரையே கொண்டு அர்ச்சித்தாராம் மகாவிஷ்ணு. இதில் குளிர்ந்துபோன சிவனார், அவருக்குத் திருக்காட்சி தந்தருளினார். எனவே, கண்நோய் மற்றும் கண் கோளாறுகளை நீக்கும் தலம் எனப் போற்றுகின்றனர்.
ஸ்ரீபடிக்காசு விநாயகர், ஸ்ரீமுருகப் பெருமான், ஸ்ரீதட்சிணாமூர்த்தி என ஒவ்வொரு மூர்த்தமும் கொள்ளை அழகுடன் திகழ்கின்றனர்.
திருமணத் தடையால் கலங்கித் தவிப்பவர்கள் இங்குவந்து, ஸ்வாமிக்கு மாலை அணிவித்து, தரிசித்து, மனதாரப் பிரார்த்தித்து, தினமும் வீட்டில் இருந்தபடி 48 நாட்கள் தொடர்ந்து ஸ்லோகம் பாராயணம் செய்து வழிபட்டால், நல்ல வரன் சீக்கிரமே தகையும் என்பது ஐதீகம்.
கல்யாண வரம் தரும் மாப்பிள்ளை ஸ்வாமியை இங்குவந்து கண்ணாரத் தரிசியுங்கள். கல்யாண யோகம் கைகூடும்!
|
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment