PANVEL BALAGAR

PANVEL BALAGAR
YATRA 2022
29.5.2015 பாண்டவ (பீமசேன) நிர்ஜல ஏகாதசி - சொட்டு நீரும் கூடாது
பீமனுக்கு ஒரு சந்தேகம். நேராக வியாசரிடம் போனான்.
''தாத்தா ,என் அண்ணா யுதிஷ்டிரன், அர்ஜுனன் மற்ற சகோதரர்கள், திரௌபதி எல்லோருமே ஏகாதசி விரதம் விடாமல் கடைப்பிடிப்பவர்கள். பீமா நீயும் உபவாசம் இரு என்கிறார்கள். எனக்கோ ஆகாரம் இல்லாமல் முடியாதே என்ன செய்வேன். இந்தமாதிரி ஏகாதசி விரதம் அனுஷ்டானம் எதுவுமே செய்யாமல் மோக்ஷம் போக முடியுமா?''
''பீமா உண்மையைச் சொல்வதானால், சுக்ல பக்ஷ, கிருஷ்ண பக்ஷ ஏகாதசி உபவாசம் இல்லாமல் தெய்வலோகம் செல்வது துர்லபமடா குழந்தாய்''.
''வியாச தாத்தா, இதைகேளுங்கள், நான் வாயு புத்திரன். வ்ருகோதரன். என் உடலில் ஜீர்ணசக்திக்கான வ்ரிக வாயு உள்ளது. அதற்கு தீனி போடாமல், அதாவது ஒரு வேளையாவது நான் தினமும் சாப்பிடாமல் இருக்கவே முடியாது. எப்படி உபவாசம் சாத்தியம்?''
அக்னியானது முதலில் விஷ்ணுவிடமிருந்து ப்ரம்மா, அவரிடமிருந்து ஆங்கிரசர், இந்த ரிஷியிடமிருந்து ப்ரிஹஸ்பதியிடம்,அப்பறம் அவரிடமிருந்து கடைசியில் தனது தந்தை சம்யுவிடம் பிறந்தது. தென் கிழக்கு வாயில் அதிபதி அக்னி.
அக்னி மூவகைப்படும். தவாக்னி, மரத்தால் படரும் தீ, ஜாடராக்னி, வயிற்றில் ஜீரணத்திற்காக உணவை எரிக்கும் வாயுவால் உண்டாகும் தீ. இதையே வ்ருகம் என்பது. இது தான் நான். என்பெயர் தான் வ்ருகோதரன் (வ்ருகம்+உதரம் (வயிறு) என்று உங்களுக்கு தெரியுமே. எனவே எதையாவது உண்ணாமல் என் வயிற்றின் தீ திருப்திடையாதே
மூன்றாவது வகை வடவாக்னி உஷ்ணம் குளிர் இரண்டும் மோதி உஷ்ணம் குளிர்ந்து பனியாவது.
தாத்தா நானும் எப்படியாவது ஒரு தடவையாவது ஏகாதசி விரதம் இருக்க முயல்கிறேன். எந்த நாளில் நான் விரதம் இருந்தால் மற்ற எல்லா ஏகாதசி நாட்களிலும் விரதமிருந்த பலன் கிடைக்கும். நானும் மோக்ஷம் அடைய வேண்டாமா?''
''பீமா, கலியுகத்தில் வேத சாஸ்திரம் முறையாக கடைப்பிடிக்க வழி இல்லை. புராண வழிபாட்டின் படி கிருஷ்ண பக்ஷமோ சுக்ல பக்ஷமோ ஏகாதசியில் உபவாசம் இருந்தால் போதும். நிறைந்த பலனை அது கொடுக்கும். அன்று பகவான் கிருஷ்ணனை நினை, பாடு, போற்று. அது போதும்.
''நிச்சயம் மாதத்தில் இரண்டு நாள், வருஷம் பூரா, சாப்பிடாமல் நான் இருக்கவே முடியாது தாத்தா, வேறு சுலப வழி எதாவது எனக்கு சொல்லுங்கள் . என் நிலைமையைத்தான் சொல்லிவிட்டேனே. ஏதாவது ஒரு நாள் உபவாசம் இருந்தால் அதைச் சொல்லுங்கள். எப்படியாவது அதை கடைப்பிடிக்கிறேன். ''
வேத வியாசர் யோசித்தார்.
''பீமா, இதைக் கேள். சூரியன் ரிஷப -மிதுன ராசியில் பிரவேசிக்கும்போது ஜலம் கூட குடிக்காமல் வைகாசி மாதம் சுக்ல பக்ஷ ஏகாதசி ஹஸ்தம் கூடிய அக்னி நக்ஷத்திர நிவர்த்தி
அன்று குளித்து பிரதி ப்ரோக்ஷண சுத்தி ஆசமனம் செய்து, உபவசாம் இருந்தாலே போதும்.
ஆசமனம் செய்யும் போது வலது உள்ளங்கையில் கடுகு முழுகும் அளவு ஜலம் மட்டுமே நாக்கில் படலாம்.
ஏகாதசி உபவாசம் காலை சூர்யோதயம் முதல் மறுநாள் த்வாதசி சூர்யோதயம் வரை.
இந்த ஒரு ஏகாதசி விரதம் மட்டும் ஒருவன் இருந்துவிட்டால் வருடம் முழுதும் 24 ஏகாதசி உபவாசம் இருந்த பலன் நிச்சயம். துவாதசி காலை குளித்து நித்ய கர்மாநுஷ்டானம் முடித்து யாராவது ஒரு பிராமணனுக்கு ஏதேனும் தானம் செய்து பிரசாதம் விநியோகித்து உபவாசம் முடிக்கலாம்.
பீமசேனா, ஸ்ரீ கிருஷ்ணனே என்னிடம் என்ன சொல்லியிருக்கிறார் தெரியுமா?
'' எவன் இப்படி சுக்ல பக்ஷ ஜ்யேஷ்ட வைகாசி நிர்ஜல ஏகாதசி உபவாசம் இருக்கிறானோ அவனது சகல பாபங்களும் விலகும். என்னை அடைவான்''
''பீமா, புரிகிறதா. கலியுகத்தில் இதை விட சுலப வழி இல்லை. இந்த நிர்ஜல ஏகாதசியை அனுஷ்டித்தவன் சகல புண்ய க்ஷேத்ரங்கள் சென்ற பலனையும் அடைகிறான். தான பலன்களைப் பெறுகிறான். வருஷம் பூரா ஏகாதசி உபவாசம் செய்த பலனும் சுலபத்தில் அடைகிறான். சகல சௌபாக்யமும் வந்தடையும்.
மரணாந்த காலத்தில் விஷ்ணு தூதர்கள் அவனை சகல மரியாதையோடு வைகுண்டம் கூட்டிச் செல்வர். இதில் எந்த சந்தேகமும் இல்லை.
பீமனோடு வியாசர் உரைத்ததைக் கேட்டுக்கொண்டிருந்த பாண்டவர்கள் சந்தோஷத்தோடு இந்த நிர்ஜல ஏகாதசி உபவாசம் கடைப்பிடித்தனர்.
இந்த நிர்ஜல ஏகாதசி (நாளை 29.5.2015 அன்று வருகிறது ) பாண்டவ நிர்ஜல ஏகாதசி என்று பெயர் பெற்றது. த்வாதசி அன்று பிராமணர்களுக்கு ஜல பாத்ரம் தானம் செய்வதும் வழக்கம்.
இதை எல்லாம் பிரம்ம வைவர்த்த புராணம் விரிவாக எடுத்துரைக்கிறது.
நாம் இத் தகவல்களை ஸ்ரீலஸ்ரீ பக்தி வேதாந்த சுவாமிகளின் ஸ்ரீமத் பாகவதத்தில் கொள்ளை கொள்ளையாக சொல்லப்பட்டு அறிகிறோம்.
''கடை விரித்திருக்கிறார் சுவாமிகள், கொள்வார் நாம் தான் இல்லை''
இதை இன்று அவசரமாக எழுதுவதன் காரணமே, ஒருவேளை நாளை ஏகாதசி என்று தெரியாமலும், அப்படி ஏகாதசி என்று தெரிந்தாலும் அது பாண்டவ (பீமசேன) நிர்ஜல ஏகாதசி என்று தெரியாமல் இருந்தால், ஒரு நாள், உபவாசம் இருக்க முடிந்தால், உங்களுக்கு புண்யம் உண்டாகட்டுமே, அதைச் சொல்வதால் ஏதோ கொஞ்சம் புண்யம் இருந்தால் அது எனக்கும் கிடைக்கட்டுமே என்று தான்.
உடனே இதை நிறைய பேருக்கு சொல்லி வையுங்கள்.

No comments:

Post a Comment