அநுஷம் முடிந்த மறுநாள். காஞ்சியில் ஏராளமாக பக்தர்கள் தர்சனம் பண்ண வந்தார்கள். அதில் ஒரு வயசான பாட்டி.
“சர்வேஸ்வரா………..மஹாப்ரபு….” என்று பாட்டி கன்னத்தில் போட்டுக் கொண்டார்.
“எப்டி இருக்கான் ஒன் ஸ்வீகாரம்?………”-- மகா பெரியவா.
“ஏதோ இருக்கான்………” விட்டேத்தியாக பதில் வந்தது பாட்டியிடமிருந்து.
“வயசான காலத்ல ஒனக்கு பிடிப்பே இல்லேன்னியே?…அதான் ஒதவியா இருக்கட்டுமே…ன்னுதான் குடுத்தேன்” முகத்தில் சிரிப்பு!
''பிடிப்பு இருக்கட்டும்னு குடுத்தேன் '' சுற்றி இருந்தவர்கள் முகத்திலும் சிரிப்பு.
“சரி………ஒன் ஒடம்பு எப்டி இருக்கு?………”
“ஏதோ இருக்கேன்….பெரியவா அனுக்ரகம்…மழை பெஞ்சா, ஆத்துல முழுக்க ஒரேயடியா ஒழுகறது….அதை கொஞ்சம் சரி பண்ணிக் குடுத்தா, தேவலை பெரியவா”
என்னது?
சுற்றி இருந்தவர்கள் அதிர்ந்தனர்! மோக்ஷத்தை தரவல்ல பராசக்தியிடம் இப்படி ஒரு விண்ணப்பமா!
“இந்த ஊர்ல மழையா ! காஞ்சிபுரந்தான் காஞ்சு போன புறமா இருக்கே.!…….” மறுபடியும் கிண்டல் சிரிப்பு.
“இல்லையே….இப்போ ரெண்டு நாள் முன்னால பெஞ்ச மழைல கூட என் வீடு ஒழுகித்தே!…….”
“அப்டியா! சரி ஏற்பாடு பண்றேன்…..”
பாட்டி நகர்ந்தாள். இத்தனை உரிமையோடு பெரியவாளிடம் பேசும் அந்த பாட்டி, எட்டு வயசில் திருமணமாகி விதவை ஆனவள். கணவர் வழியில் ஏராளமான சொத்து! ஒரு பெண்ணிடம் இத்தனை சொத்து இருக்க சொந்தக்காரர்கள் விடுவார்களா? அதே சமயம் தன்னிடம் வரவேண்டிய ஜீவன் ஒரு நாயாக இருந்தால் கூட பகவான் விட்டு வைப்பானா?
பாட்டிக்கு விவரம் கொஞ்சம் நன்றாக தெரிந்திருந்ததால், சற்று சுதாரித்துக் கொண்டாள். காஞ்சிபுரத்துக்கு எதேச்சையாக வந்தவள், “தன் சொத்துக்கள் அத்தனையும் காமாக்ஷிக்கு!” என்று சொல்லிவிட்டாள். பெரியவா எவ்வளவோ மறுத்தும், கடைசியில் அந்த பெண்ணின் அன்பான பிடிவாதம் வென்றது. எனவே அவளுக்கு மடத்துக்கு சொந்தமான வீடு ஒன்றை தங்கிக் கொள்ள குடுத்துவிட்டார். அல்லும் பகலும் பெரியவாளை தர்சனம் பண்ணும் பாக்யம் ஒன்றே போதும் என்று பரம த்ருப்தியுடன், பணத்துக்கு துளியும் முக்யத்வம் குடுக்காத ஒரு ஆத்மாவை பெரியவா அல்லும் பகலும் ரக்ஷித்தார்.
பாட்டியோடு சிரித்துப் பேசிக் கொண்டிருந்தவரிடம் சில பிரமுகர்கள் வந்து ஒரு தட்டில் ஏதே பத்திரிகையை வைத்தார்கள். சிரித்துக் கொண்டிருந்த முகம் சட்டென்று மாறியது…….
“என்னது இது?”
“காமாக்ஷி அம்மன் ப்ரம்மோத்சவ பத்திரிகை…”
“கலெக்டருக்கு குடுத்தாச்சா?”
“குடுத்துட்டோம். பெரியவா”
“இவாளுக்கு?” என்று பக்கத்தில் அமர்ந்திருந்த மற்ற ரெண்டு பெரியவாளையும் காட்டி கேட்டார்.
“குடுத்தாச்சு. பெரியவா……”
“ஓஹோ…சரி. எல்லார்க்கும் குடுத்துட்டு, இவன் மடத்த விட்டு எங்கேயும் போக மாட்டான்….ன்னுட்டு கடேசில போனாப் போறதுன்னு எனக்கும் ஒரு பத்திரிகை கொண்டு வந்தேளாக்கும்?”
ருத்ர முகம்!
“இல்லை…..அது வந்து……பெரியவா” நிர்வாகிகள் எச்சில் கூட முழுங்க முடியாமல், கால்கள் நடுங்க நின்றனர்.
“கேட்டுக்கோங்கோ! மடத்து சம்ப்ரதாயம்..ன்னு ஒண்ணு இருக்குன்னாவது தெரியுமோ? பத்திரிகை மொதல்ல எங்க தரதுன்னு தெரியுமோல்லியோ?
எல்லா சம்பிரதாயத்தையும் மீறி நடந்துண்டா எப்டி?
நீ எத்தனை வர்ஷமா இங்க இருக்கே?”
குண்டுகளாக துளைத்தன!
பெரியவா பத்திரிகையை தொடவே இல்லை!
மடத்து நிர்வாகிகள் நடுங்கிப் போய்விட்டனர்.
ஆம். தவறுதானே?
“எப்டி வரணுமோ அப்டி வாங்கோ” திரும்பி நடந்தவர்களை, “ஒரு நிமிஷம் ……..” நிறுத்தினார்.
“நீ எங்கே குடியிருக்கே?”
“வடக்கு சன்னதிப் பக்கம் ஒரு ஆத்துல…….”
“அங்க வேற ரெண்டு மூணு வீடு இருந்ததே…”
“அங்க சுப்புராமன் இருக்கார்……”
பெரியவாளுக்கோ எந்தெந்த வீடு, யார் யார் இருக்கிறார்கள் எல்லாம் அத்துப்படி!
“சுப்புராமன்தான் மேல போயிட்டாரே……அவரோட வாரிசுகள் மடத்ல வேலை செய்யறாளா என்ன?”
“இல்லை……….”
“மடத்ல வேலை செய்யறவாளுக்குத்தான் நாம வீட்டை குடுத்திருக்கோம். இங்க வேலை செய்யாதவாளுக்கு எதுக்கு வீடு? நீ என்ன செய்வியோ, ஏது செய்வியோ எனக்கு தெரியாது! நாளைக்கு மறுநாள், இந்த பாட்டி அந்த வீட்டுக்கு குடி போகணும் !..டேய்! நாளன்னிக்கு நல்ல நாளா…ன்னு பாரு”
“ஆமா பெரியவா நல்ல நாள்தான்”
“அப்போ சரி. இந்த பாட்டி நாளன்னிக்கு அந்தாத்துக்கு போறதுக்கு ஏற்பாடு பண்ணிடுங்கோ”
பெரியவா சங்கல்பம் நிறைவேறியது!
இதற்கப்புறம் மூன்று மாசம் கழித்து காமாக்ஷி கோவிலில் தர்சனம் பண்ணிவிட்டு சன்னதி தெரு வழியாக நடந்து வந்து கொண்டிருந்த பெரியவா, சட்டென்று ஒரு வீட்டின் முன் நிற்கிறார்.
பின்னால் வந்து கொண்டிருந்த பக்தர் குழாம் குழம்பியது. ஒரு பக்தரிடம், ”ரெண்டு மூணு நாளா பாட்டியை காணும்…..உள்ள போய் பாரு. ஒடம்புக்கு கிடம்புக்கு முடியலையோ என்னவோ…..”
உள்ளே….ஏழ்மையான எளிமையான வாஸம். ஒரே ஒரு குமுட்டி அடுப்பு. ரெண்டே ரெண்டு பாத்ரம். வேறு எதையுமே காணோம். பாட்டி ஒரு ஓரத்தில் முடங்கிக் கிடக்கிறாள். பக்தர் மெதுவாக பாட்டியிடம் பெரியவா வாசலில் நிற்கும் விஷயத்தை சொன்னதுதான் தாமதம்! தடாலென்று எழுந்து, தன் நார்மடியை சரி பண்ணிக் கொண்டு ஓடோடி வருகிறாள்.
இரைந்து…….”சர்வேஸ்வர……மஹாப்ரபு…….நீயே என்னைத் தேடிண்டு வந்துட்டியா?” என்று அலறிக் கொண்டு பெரியவா பாதத்தில் விழுந்தாள். மூன்று முறை வலம் வந்து நமஸ்கரித்தாள். இதை உண்மையான பக்தனும் பகவானும் மட்டுமே அனுபவிக்க முடியும்.
தினம் தினம் ஆயிரக்கணக்கானோர் வந்து தர்சனம் பண்ணுகிறார்கள். ஆனால், தன்னிடம் ஆத்மார்த்தமாக ப்ரேமை பூண்டவர்கள் ஒரு நாள் பார்க்க வராவிட்டால், பகவானால் தாங்க முடியாமல், தானே அவர்களைப் பார்க்க வந்துவிடுவான். அந்த பாட்டிக்கு கிடைத்த பாக்யம் எல்லோருக்கும் கிடைக்குமா? தன்னையே பெரியவாளிடம் முழுவதுமாக அர்ப்பணித்தவர்களுகு மட்டுமே நிச்சயம் கிடைக்கும்.