SWAMI SARANAM.....GURUVE SARANAM SARANAM.......

 

 

அல்லல் அகற்றும் அஸ்திரபுரீஸ்வரர்

 
ஆனூர்

எங்கெங்கும் நிறைந்தவனான சர்வேஸ்வரன் கருணையின் பொருட்டு, லிங்கத் திருமேனியில் பல்வேறு தலங்களில் அருளாட்சி செய்து கொண்டிருக்கிறான். அப்படிப்பட்ட ஒரு தொன்மையான தலமே ஆனூர் ஆகும். பாலாற்றங்கரையிலுள்ள அழகான கிராமம். ஆதியில் இத்தலம் ஆனியூர், ஆதியூர், சத்திய குலகால சதுர்வேதி மங்கலம் என்ற பெயர்களில் அழைக்கப்பட்டுள்ளது. புகழேந்திப் புலவரும், கூற்றுவநாயனாரும் இத்தலத்திற்கு வந்து ஈசனை தரிசனம் செய்துள்ளதாக செவிவழி செய்திகள் கூறுகின்றன. இத்தலத்தில் அஸ்திரபுரீஸ்வரர் மற்றும் வேதநாராயணப் பெருமாள் இருவரும் தனித்தனி சந்நதிகளில் அருளாட்சி செய்கின்றனர். சுமார் 800 வருடங்கள் பழமையான திருக்கோயில் இது. அஷ்டபுரீஸ்வரர், அட்டபுரீஸ்வரர் என்றும் சிலர் இவ்வூரைக் குறிப்பிடுகின்றனர். உடல் முழுவதும் திருநீறு பூசி, மரஉரி தரித்து பெருமானை வேண்டி அர்ஜுனன் கடுந்தவம் புரிந்ததை விளக்குகிறது வில்லிபாரதம். 

பாசுபதாஸ்திரம் வேண்டி அர்ஜுனன் சிவபெருமானை நோக்கிக் கடுந்தவம் புரிந்தான். அப்போது பன்றி வேடத்தில் ஓர் அரக்கன் அர்ஜுனனின் தவத்தைக் குலைக்க முயன்றான். எம்பெருமான்மீது மாறாத பக்தியுடன், அர்ஜுனன் தபசு மரம் ஏறி தன்னுடைய தவத்தைத் தொடர்ந்தான். அர்ஜுனனின் தவத்தால் மகிழ்ந்த எம்பெருமான், அர்ஜுனனுக்கு பாசுபதாஸ்திரத்தை வழங்கி பாண்டவர்களை ஆசிர்வதித்ததோடு, அவனது பிரார்த்தனைக்கு இணங்கி அந்த இடத்திலேயே கோயில் கொண்டார். அர்ஜுனனுக்கு அஸ்திரம் கொடுத்ததால் சிவபெருமான் அஸ்திரபுரீஸ்வரர் என்று திருப்பெயர் கொண்டார். இவருக்கு வம்பங்காட்டு மகாதேவன் என்ற பெயரும் உண்டு. இவரை தரிசித்தால் வழக்குகளிலிருந்து விடுபடலாம் என்று தெய்வப் ப்ரச்னத்தில் வந்தது குறிப்பிடத்தக்கது. 

திருப்பணியைத் துவங்குவதற்கு முன்னர் பிரச்னம் பார்த்ததில், இங்குள்ள எம்பெருமான் மிகவும் சாந்நித்தியம் கொண்டவர் என்றும், அவரை வழிபட, வழக்குகளில் வெற்றி கிடைப்பதோடு, எதிர்ப்பு, தடை என எதுவுமே இருக்காது என்றும் தெரிய வந்தது. இதன் காரணமாக, இப்போது பல ஊர்களில் இருந்தும் இங்குள்ள ஈசனை வழிபட பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர். அதுபோலவே, இங்குள்ள அம்பாள் சௌந்திரவல்லியை வழிபட சர்வ மங்களங்களும் உண்டாகும். முன்புறம் கல் ஸ்தூபி வடிவ தீப ஸ்தம்பம், கார்த்திகை தீபத்தன்றும், மாத பௌர்ணமி தினங்களிலும் இந்த தீப ஸ்தம்பத்தில் விளக்கேற்றி வழிபட, பல நன்மைகள் கிட்டும் என்பது பக்தர்களின் அனுபவ நம்பிக்கை. பெரிய திருக்குளமும் உள்ளது. முதல் பிராகாரத்தில் நந்தி மண்டபமும், பலிபீடமும் உள்ளன. அதனை அடுத்து முன் மண்டபமும், அர்த்த மண்டபமும், கருவறையும் உள்ளன. 

முன்மண்டபத்தில் சுற்றுப்பிராகாரத்தின் தெற்கில் தட்சிணாமூர்த்தியும், வடபுறத்தில் நான்முகன், துர்க்கையின் திருவுருவமும் அமையப் பெற்றுள்ளன. இறைவன் அஸ்திரபுரீஸ்வரர் எனவும், அம்மன் சௌந்தர நாயகி எனவும் அழைக்கப்படுகின்றனர். இங்கே பிற்காலப் பல்லவர் கால கலைப்பாணியை கொண்ட சண்டேஸ்வரர் சந்நதியும் உள்ளது. கல்வெட்டுகளில் இறைவன் ‘திருவம்பங்காட்டு மகாதேவர்’ என்று வழங்கப்பட்டுள்ளார். ஊரின் முகப்பிலேயே வடகிழக்கு திசையில் அஸ்திரபுரீஸ்வரர் கோயில் அமைந்திருக்கிறது. கி.பி. 893ம் ஆண்டு கல்வெட்டு இத்தலத்தின் சிறப்புகளை கூறுகின்றது.  ஒரு சிற்பத் தொகுதியில் பிரம்மா, நரசிம்மர், சிவன், வளையல் அணிந்து கூப்பிய கரம், கணபதி, வத்சம் ஆகியவை உள்ளன. மேலும் இச்சிற்பத் தொகுப்பு பல்லவர் காலத்தைச் சேர்ந்தவை. இச்சிற்பத் தொகுப்புடன் முற்கால சோழர் காலத்திய ஜேஷ்டாதேவி மற்றும் பிள்ளையார் சிற்பங்களும் உள்ளன. 

சோழர் காலத்திய கல்வெட்டு ஒன்றில் சிற்பிகளுக்கு பெரும் மதிப்பு கொடுத்ததையும் மற்றும் வெளிமாநில சிற்பி வல்லுநர்களை வரவழைத்த செய்தியும் 
பொறிக்கப்பட்டுள்ளது. மாவுக் கல்லினாலான பலகைக் கல்லில் செதுக்கப்பட்ட சிற்பங்கள் கிடைத்துள்ளன. ஆதனூரில் காணப்படும் சிற்பத் தொடர்
15 செ.மீ. நீளமும் 10 செ.மீ. அகலமும் கொண்டவை. ஆனூர் அட்டபுரீஸ்வரர் கோயிலில் முதலில் பிரம்மாவும், அவரை அடுத்து நரசிம்மரும், மேடைமீது சிவலிங்கமும் முருகரும் தேவயானியும், காளையின்மீது சிவனும், உமையும் அடுத்து ‘ஸ்ரீ’ என்கிற மகாலட்சுமியும் அதனை அடுத்து துர்க்கை தனது இடதுகாலால் எருமைத் தலையை மிதித்து, இடதுகையால் அதன் வாலினைப் பிடித்து வலதுகையில் உள்ள நீண்ட வாளைக்கொண்டு மகிஷனைக் கொல்வது போன்றும், அடுத்த மேடை மீது பிள்ளையாரும் காணப்படுகின்றனர். 

ஆலயக் கல்வெட்டு ஒன்றில் ராஜராஜன் காலத்தில் படகம், திமிலை, கரடிகை, காலம், சேகண்டி போன்ற வாத்தியக் கருவிகள் இந்த ஆலயத்தில் இசைக்கப்பட்டது பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. திருச்சுற்றில் கைகளால் தாளமிட்டபடி அருளும் சங்கீத விநாயகரையும், நந்தி, அக்னி ஆகிய இருவரோடு கூடிய ஜேஷ்டா தேவியையும் தரிசிக்கலாம். அதேபோன்று ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்த பைரவரும் (இவருடன் நாய் இல்லை) உள்ளார். சனகாதி முனிவர்களோ, முயலகனோ, ஏன் கல்லால மரம்கூட இல்லாமல் தட்சிணாமூர்த்தி தனியே தரிசனம் அளிக்கிறார். வெகு அபூர்வமான அமைப்பு இது. இத்தல நாயகி சௌந்தர்யவல்லி பெயருக்கு ஏற்றாற்போல் பேரழகுடன் ஜொலிக்கிறாள்.

சிற்ப அமைப்பைக் கொண்டு இச்சிற்பத் தொடர் பல்லவர் காலத்தைச் சேர்ந்ததாகவும், காலம் கி.பி.67ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கக் கூடும் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றார்கள். கி.மு. 3ம் நூற்றாண்டிலேயே மக்கள் இங்கு செல்வாக்கோடு வாழ்ந்த வரலாற்றையும், கி.பி.9ம் நூற்றாண்டு முதல் இக்கோயில் தொடர்ந்து விழாக்களோடு சிறப்பு வழிபாட்டிலும் அரசர்களின் பேராதரவும் பெற்றிருந்தது என்ற செய்தியையும் கல்வெட்டுகள் மூலம் அறியலாம். வரலாற்றைப் பிரதிபலிக்கும் சுற்றுச்சுவர் கல்வெட்டுகள் அழியும் நிலையில் இருக்கின்றன. 16ம் நூற்றாண்டு கல்வெட்டுகள் கோயிலில் காணப்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள். பல்லவ மன்னன், கம்ப வர்மன், பராந்தகச் சோழன், ராஜராஜ சோழன், குலோத்துங்கச் சோழன், மூன்றாம் ராஜராஜசோழன் ஆகிய மன்னர்கள் அஸ்திரபுரீஸ்வரரை போற்றி, வழிபாட்டுக்கு தானம் அளித்த செய்திகள் கல்வெட்டுகளில் காணப்படுகிறன. 

2002ம் ஆண்டு ‘ஆனூர் கிராம முன்னேற்ற அறக்கட்டளை’ என்ற அமைப்பினை நிறுவி, அதன்மூலம் அஸ்திரபுரீஸ்வரர் திருக்கோயில் திருப்பணிகளை நடத்தி வருகிறார், தேவராஜன். ஆனூர் மக்களும் ஆர்வமாக இக்கோயில் திருப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். பல்லாண்டுகளாக  பாழடைந்து கிடந்த இந்தக் கோயிலில் திருப்பணிகள் துவங்கப்பட்டு, ஆண்டுகள் பல கடந்துவிட்ட போதிலும், நிதிப் பற்றாக்குறை காரணமாக திருப்பணிகள் நிறைவடையவில்லை. தற்போது ஒருவேளை பூஜை மட்டுமே நடந்துவரும் இக்கோயிலில் ஆருத்ரா, சிவராத்திரி, பிரதோஷ நாட்களில் அபிஷேக ஆராதனைகள் நடக்கின்றன என்று இக்கோயிலின் திருப்பணிக் கமிட்டியினர் தெரிவிக்கின்றனர். அர்ஜுனனுக்கு அஸ்திரம் தந்து, பாண்டவர்களின் சங்கடங்களை எல்லாம் போக்கி, அவர்களின் வாழ்வை வளமாக்கிய அஸ்திரபுரீஸ்வரரின் ஆலயம் இப்படிச் சிதிலமடைந்து இருக்கலாமா? 

தற்போது ஆலயத்தில் திருப்பணிகள் அரைகுறையாக முடிந்தநிலையில் விரைவிலேயே முழுமையாக நடத்தி முடிக்கப்படவும், விரைவிலேயே கும்பாபிஷேகம் நடைபெறவும், கோயிலில் நித்திய பூஜைகள் தவறாமல் நடந்திடவும், நம் தொன்மைச் சிறப்பை எடுத்துக் கூறும் இங்குள்ள கல்வெட்டுகளைப் பாதுகாக்கவும் நம்மாலான உதவிகளைச் செய்வோம். இந்த ஆலய கைங்கரியத்தில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் தங்களாலான உதவிகளை செய்யலாம். 9551066441 என்கிற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். செங்கல்பட்டிலிருந்து 12 கி.மீ. தூரத்தில் உள்ள பொன்விளைந்த களத்தூருக்கு அருகே ஆனூர் இருக்கிறது. சென்னை - கோயம்பேட்டிலிருந்து 129 சி என்ற பஸ்சும், செங்கல்பட்டிலிருந்து 2, 12 என்ற எண் கொண்ட பேருந்துகள் ஆனூர் வழியே செல்லும்.

No comments:

Post a Comment