காரடையார் நோன்பு 15-03-2015" (மாசிக் கயிறு பாசி படரும்) நல்ல நேரம்; அதிகாலை 04-30 மணி முதல் 05-00 வரை. காரடையான் நோன்பை தென்னாட்டில் ‘சாவித்திரி நோன்பு ‘ ,‘காமாக்ஷி விரதம்’ என்றும் அழைப்பர். வழக்கமாக தமிழ் மாதங்களான மாசி பங்குனி மாதங்கள் கூடும் வேளையில் வரும். ‘மாங்கல்ய பலம் விரதம்’ என்றும் சொல்லப்படுகிறது. நோன்பு பற்றிய கதைகள் : காமாக்ஷி அம்மன், நதிக்கரையில் ஆற்று மணலில் சிவலிங்கம் பிடித்துவைத்து பூஜை செய்கையில் வெள்ளம் பெருக்கெடுத்து வந்தது. மணலில் பிடித்த சிவலிங்கம் கரைந்து போகாமல் காக்கவே “காரடையான் நோன்பு ” விரதம் இருந்ததாகவும், சிவபெருமான் பிரத்யக்ஷமாகி காமாக்ஷியை மணந்து கொண்டதாகவும் கதை சொல்லப்படுகிறது. ராஜகுமாரி, சாவித்திரி தன் மனதிற்கு இசைந்த கணவன் சத்தியவானை மணந்து காட்டில் வாழ்ந்து வந்தனர். கல்யாணம் முடிந்து ஒரு வருடத்தில் கணவனை, இழக்க நேரிடும் என்று அறிந்திருந்தாள். அதேபோல் மரம் வெட்டச்சென்ற சத்தியவான் உயிர் இழக்க, பதிவிரதை சாவித்திரி யமனை பின் தொடர்ந்துசென்று, தங்களுக்கு நூறு குழந்தைகள் பிறக்க வரம் கேட்டு, யமதர்ம ராஜனும் வரம் கொடுக்க இறந்த கணவனுக்கு உயிர் கொடுக்கச் செய்து, மீட்டு வந்ததாகக் கதை சொல்லப்படுகிறது. பூஜை செய்யும் முறை: இதர பண்டிகைகளுக்கு செய்வதுபோல், வீட்டின் வாயில் நிலையிலும், ஸ்வாமி அறை நிலையிலும் மாவிலைத்தோரணம் கட்ட வேண்டும்.பூஜை அறையை சுத்தம் செய்து கோலமிட்டு ஸ்வாமி படங்களுக்கு பூ சாற்றி, வெற்றிலைபாக்கு, மஞ்சள், வாழைப்பழம், தேங்காய் வகையறாக்களை வழக்கம் போல் ஒரு தட்டில் ( மரத்தட்டு இருந்தால் விசேஷம்) வைக்க வேண்டும். மஞ்சள் சரடு கட்டிக் கொள்வதற்கு முன்பு அதில் ஒரு சிறிய பசு மஞ்சளை துளையிட்டுக் கோர்த்துக் கட்டியோ அல்லது புஷ்பம் கட்டியோ வைக்கவேண்டும். பலா இலை அல்லது வாழை இலையில் பிரசாதம் வைக்க வேண்டும் “ நோன்பு அடை” முக்கியம். “நோன்பு அடை” அல்லது கொழுக்கட்டை வழக்கம் இல்லாத குடும்பத்தவர்கள் வெற்றிலை பாக்குடன் கேசரி போன்ற ஏதேனும் ஒரு இனிப்பை செய்தும், ஸ்வாமிக்கு நிவேதனம் செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். ஒரு வெல்ல அடை, சிறிது வெண்ணை இலையில் வைத்து, நோன்பு சரடை அம்மனுக்கு சாற்றி, துளசிச் செடியில் ஒன்று கட்டி, தங்கள் கழுத்திலும் கட்டிக்கொள்வார்கள். “உருகாத வெண்ணையும், ஓரடையும் நான் வைத்தேன் ஒரு நாளும் என் கணவர் பிரியாத வரம் தருவாய் ” என்று அம்பாளை நினைத்து வேண்டிக்கொண்டு அம்பாள் ஸ்லோகம் சொல்வார்கள். மொத்தத்தில் பெண்டிர் அனைவரும் தம் தம் கணவருக்காக சிரத்தையாக செய்யும் விரதமே – காரடையான் நோன்பு




No comments:

Post a Comment