வம்சத்தை வாழச் செய்யும் கல்லிடைக்குறிச்சி தர்மசாஸ்தா!

ஐயன் தரிசனம்...
ல்லிடைக்குறிச்சி-ஸ்ரீவராகபுரம் கிராமத்தின் வடக்கு மூலையில் அமைந்து உள்ளது ஸ்ரீகுளத்தூரிலய்யன் தர்மசாஸ்தா கோயில். சுமார் 700 வருடப் பழைமை வாய்ந்த இந்த ஆலயத்தில், ஸ்ரீமகா கணபதி, விசாலாட்சி சமேத ஸ்ரீவிஸ்வநாதர் சந்நிதிகளும் அமைந்து உள்ளன.  
நெல்லைச் சீமையில், கரந்தையம்பதி எனப் போற்றப்படும் கல்லிடைக் குறிச்சி பகுதியில், தாமிரபரணி பாய்ந்தோடும் நதிக்கு அருகில், விஜயன் எனும் அந்தணர் தன் மனைவியுடன் வாழ்ந்து வந்தார். அறத்திலும் வேதத்திலும் குறையின்றி இருந்தாலும் பிள்ளைச் செல்வம் இல்லை என்பது மட்டுமே குறையாக இருந்தது.
ஒருநாள், அவரின் இல்லத்துக்கு மகான் ஒருவர் விஜயம் செய்தார். 'தட்சிண கேரளத்தில் பம்பா எனும் நதி ஓடுகிறது. அதில் நீராடிவிட்டு, மலையில் ஏறி, ஸ்ரீசபரி அன்னையைத் தரிசித்து, அவளின் அருளைப் பெறுங்கள். உங்களுக்கு சந்தான பாக்கியம் கிடைக்கும்’ என அருளிச் சென்றார்.
அதன்படி, பம்பையில் நீராடி, அங்கிருந்து மலைக்குச் சென்று ஸ்ரீசபரி ஆஸ்ரமம் அடைந்தார். அப்போது, 'உன் விருப்பம் நிறைவேறும் தருணம் வந்துவிட்டது. உன் இல்லத்தில் குழந்தைச் செல்வம் பிறக்கப் போகிறது. உன் ஊருக்கு நான் விஜயம் செய்யும் தருணம் நெருங்கிவிட்டது’ என அசரீரி கேட்டது. சந்தோஷமும் நிறைவும் பொங்க ஊருக்குச் சென்றார் விஜயன்.
இதையடுத்து ஒருநாள், பந்தள தேசத்து ராஜாவான ராஜசேகர மன்னனின் மனைவிக்கு நேர்ந்த தீராத தலைவலியைத் தீர்ப்பதற்காக, ஸ்ரீமணிகண்ட ஸ்வாமி புலிப்பால் கொண்டு வந்தார். அதேநாளில், கல்யாணபுரி என்றும் கல்லிடைக்குறிச்சி என்றும் சொல்லபடுகிற கிராமத்தில் உள்ள விஜயனின் இல்லத்துக்கு பாலகனாக வந்து எழுந்தருளினார் (தர்மசாஸ்தா தண்டகம் எனும் வடமொழி ஸ்லோகத்தில் இதுகுறித்து விவரிக்கப்பட்டு உள்ளது).
அந்த பாலகனுக்கு கம்பங்கூழை ஊட்டி மகிழ்ந்தனர் அந்தத் தம்பதி. அப்படியே உறங்கச் செய்தார்கள். சிறிதுநேரத்தில் பாலகனைக் காணோம். ஆனால் அந்த வீடு முழுவதும் ஒளி பரவியிருந்தது. அப்போது தர்மசாஸ்தாவான ஸ்ரீஐயப்ப ஸ்வாமி திருக்காட்சி தந்து, 'உன் வம்சத்துக்கு எப்போதும் துணை நிற்பேன்’ என அருளினார். அன்று முதல் விஜயனின் பரம்பரைக்கு கம்பங்குடி (கம்பங்கூழ் குடிக்க வழங்கியதால் இந்தப் பெயர்) எனும் பெயர் அமைந்ததாகச் சொல்வர். இன்றைக்கும் கம்பங்குடி வம்சத்தார் உலகெங்கிலும் வாழ்ந்து வருகின்றனர்.  
சபரிகிரி வாசன் கோலோச்சும் கேரளத்தின் பல இடங்களிலும் கரந்தையார்பாளையம் எனப்படும் கம்பங்குடி சமூகத்துக்கு சிறப்பு மரியாதைகள் செய்யப்படுகின்றன.
கல்லிடைக்குறிச்சியில் இன்றைக்கும் தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு அருள்பாலிப்பதற்காகக் கோயில் கொண்டிருக்கிறார் ஸ்ரீதர்மசாஸ்தா! காலை 7 மணி முதல் 10 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் 6 மணி வரையிலும் நடை திறந்திருக்கும். கார்த்திகை மாதம் துவங்கியதும் நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் இருந்து எண்ணற்ற பக்தர்கள், இங்கு வந்து தர்மசாஸ்தாவை வணங்கிச் செல்கின்றனர். வாழையடி வாழையென வம்சம் தழைக்கச் செய்கிறார் தர்மசாஸ்தா எனப் போற்றுகின்றனர்.

No comments:

Post a Comment