சற்குரு நாதனே சரணம் ஐயப்பா!! 
குருவின் குருவே சரணம் ஐயப்பா!!

காடு மேடு மலைகள் தேடி அலைந்தாலும்
குருவை அடைய முடியாது_ நீ
வீடு பேறு அடைய அந்தக்
குருவேயுனைத் தேடி வருவார்
நாடி வந்துன்னைத் தேர்ந்தெடுப்பது
நீ முன் செய்த புண்ய பலன்
கோடி கொட்டிக் கொடுத்தாலும்
சற்குரு அமைவது கிடையாது
தேடி உனையடைந்த சற்குருவின்
பாத கமலங்கள் பற்றிப் பிடித்துவிடு
ஈடில்லாத நற்குணம் கொண்டவர்
நாடுவோர்க்கும் நம்பிக்கை வைப்போர்க்கும்
கூடு விட்டுச் சென்ற பின்னும் நல்வழி காட்டுபவர்
கூட வந்த முன் தீவினைகள் தீர்ப்பவர்
ஆணிவேராம் அன்பைச் சொல்பவர்
ஊணினின்று உள் வினை அகற்றுபவர்
கேணி போல ஊறும் அன்பு மழை _என்
நாவினின்று நர்த்தனம் ஆடுபவர்
தானே அமர்ந்து தன் புகழ் பாடச் சொன்னவர்
கூறும் அடியார்கள் வினை கடுகியே தீர்த்தவர்
ஊறும் அவர் எண்ணம் என்றும் அடியவர்கள் நெஞ்சினிலே 
வேராய் , விருட்சமாய் எம் மனக்கண்ணில் இருப்பவர் 
நீரில் விளக்கேற்றி எம் பாவங்கள் எரித்தவர்- வாழ்க்கைப் 
போரில் விழுந்த விழுப்புண்கள் ஆற்றுபவர் 
ஈரேழு பிறப்பிலும் உன்னைக் கூப்பிய கரங்களும் 
உனக்குச் சாற்றிய என் பாக்களும்
தொடரும் வரம் வேண்டும் ஐயனே 
உன்னைத் நினைப்போர்க்கும் நினையாதோர்க்கும் 
வேண்டும் வரம் அருளும் ஐயனே 
ஒப்பற்ற சற்குருவே நின் பத்ம பாதங்கள் போற்றி போற்றி

No comments:

Post a Comment