மண்ணிலுள்ளோர் உய்யவென்று
விண்ணகத்தில் இருந்து வந்து
எண்ணமெல்லாம் அடியவர்க்காக
கண்ணிலே காருண்யம் காட்டுகின்ற
புண்ணியா நீயல்லால் வேறு குருவுண்டோ

கண்களைப் போல எமைக் காக்கின்ற
மணியான குருவினை தந்திட்டாய்
விண்ணவரும் கூடி வாழ்த்தும் மாணிக்கமே
தாய் போல் அரவணைத்து அருளெனும்

அமுதூட்டி மனக்காயங்கள் ஆற்றி இனிமேல்
வாராவண்ணம் தேற்றி
நோய் வந்தால் உடனிருந்து அன்னையாகி
வாய்மை பேச வைத்து உயர் பண்புகள் கூட்டுவித்து

தேய்வதகற்றி வளர்ச்சியை எமதாக்கி
தூய்மையை சிந்தனையில் விதைத்த
மாயவன் சாயலே மணிகண்ட மாணிக்கமே
வேதங்கள் சொல் மெய்ப்பொருளே

பாதம் பணிந்தோம் பாவம் தொலைந்திட
காத தூரம் சென்றாலும் கண்ணின் மணியாய்க் காத்திடுவீர் 
நீ தரும் நிம்மதி நான் வேறெங்கும் கண்டதில்லை
பா தந்தேன் பன்வேல் வந்து பணிந்தேற்றினேன்

காவல் தெய்வமே உன் கடைக்கண் வீச்சுக்காய் ஏங்கும்
பாவிகளை மன்னித்தருளும் அய்யனே  மாணிக்கமே

No comments:

Post a Comment